Published:Updated:

`இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் எங்க டார்கெட்!' ரூட்டை மாற்றும் ஒன்ப்ளஸ் #VikatanExclusive

ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் பெரிய அளவில் ஹிட்டானதால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். இந்த நிலையில், சென்னைக்கு வந்திருந்தார் ஒன்ப்ளஸ் இந்தியாவின் ஜெனரல் மேனேஜர் விகாஸ் அகர்வால். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஒன்ப்ளஸ் ஸ்டோர், சென்னை
ஒன்ப்ளஸ் ஸ்டோர், சென்னை

``ஒன்ப்ளஸ் மொபைல்களுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டுக்கென சிறப்புத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?"

``தென் இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு எங்களுக்கு மிக முக்கியமான சந்தையாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இந்தப் பகுதியில் இ-காமர்ஸ் வலுவாக இருப்பதுதான். ஒன்ப்ளஸ் ஆன்லைன் விற்பனையில் அதிகமாகக் கவனம் செலுத்துவதால் இது எங்களுக்கு சாதகமான ஒன்றாகவே இருக்கிறது. பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் விற்பனை அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த நகரங்களில் கொஞ்சம் கூடுதலாகவே கவனம் செலுத்துகிறோம். கடந்த வருடம் சென்னையில் ஒரு எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோரைத் தொடங்கினோம். அதற்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த வருடம் பூர்விகாவுடன் இணைந்திருக்கிறோம். ஆஃப்லைன் ஸ்டோர்களை அதிகப்படுத்துவதுதான் தற்போது எங்கள் நோக்கமாக இருக்கும்.”

``இ-காமர்ஸ் வலுவாகவே இருக்கும்போது ஆஃப்லைன் ஸ்டோர்களை அதிகப்படுத்துவதற்கான காரணம் என்ன?"

விகாஸ் அகர்வால்
விகாஸ் அகர்வால்

``ஆன்லைனோ ஆஃப்லைனோ ஒரு வாடிக்கையாளருக்குத் தயாரிப்பின் மீது நம்பிக்கை வர வேண்டும். அமேசானில் ஆர்டர் செய்யும்போது ஒருவர் அதன் மீது முழு நம்பிக்கை வைத்துதான் பொருளை வாங்குகிறார். அதே நேரத்தில் வேறு ஒருவருக்கு மொபைல் பற்றிய சந்தேகங்களை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் இருக்கும். அவருக்கு ஆஃப்லைன் ஸ்டோர்கள் தேவைப்படும். ஒரு மொபைலை பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும். எடுத்துக்காட்டாக ஒருவர் அவரது பழைய மொபைலை எக்ஸ்சேன்ஞ்ச் செய்ய விரும்புவார். அவருக்கு இணையதளத்தை விடவும் ரீடெயில் ஸ்டோர்களில் அதிக மதிப்பு கிடைக்கலாம். எனவே, அவருக்கு ஆஃப்லைன் ஸ்டோர்கள் உதவக் கூடும். ஒன்ப்ளஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரையில், ஒரு தயாரிப்பை எங்கே வாங்கினாலும் வாடிக்கையாளருக்கு அதைச் சிறந்ததாக கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இவற்றையெல்லாம் விடவும் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் பலரும் நேரில் பார்த்து அதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்த ஆஃப்லைன் ஸ்டோர்கள் நிச்சயம் உதவும். இது போன்ற ஆஃப்லைன் ஸ்டோர்கள்தான் எங்களது வாடிக்கையாளர்களை எங்களுடன் இன்னும் நெருக்கமாக உதவும் என நம்புகிறோம்."

``ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் வெளியாகி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இப்போதெல்லாம் நிறுவனங்கள் குறுகிய காலத்துக்குள் அப்டேட் செய்துகொள்ள வேண்டிய நிலைமை இருக்கிறது. அதன்படி பார்த்தால் ஒன்ப்ளஸ்ஸின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்?"

``குறுகிய காலத்துக்குள் ஒரு புதிய மொபலை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று நினைக்கிறேன். அதைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அதன் சந்தை தொடர்பான திட்டங்கள் வெவ்வேறு விதமாக இருக்கின்றன. எங்களைப் பொறுத்தவரையில், ஒரு வருடத்துக்கு ஒரே ஒரு ஃபிளாக்‌ஷிப் மொபைலை வெளியிடுவதுதான் திட்டம். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறோம், ஒரு வருடத்துக்குள்ளாக வேறு ஏதாவது ஹார்ட்வேர் அப்டேட்டுக்கான வாய்ப்புகள் இருந்தால் T-சீரிஸை வெளியிடுவோம்."

``பாப் அப் கேமராவுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?"

`இனி ஆஃப்லைன் ஸ்டோர்ஸ்தான் எங்க டார்கெட்!' ரூட்டை மாற்றும் ஒன்ப்ளஸ் #VikatanExclusive

``பாப் அப் கேமரா என்பது இப்போது ஒரு வசதி அல்ல, அது அவசியமானது. ஏனென்றால் ஒரு வாடிக்கையாளர் ஃபுல் டிஸ்ப்ளேவையே விரும்புகிறார். அதைக் கொடுப்பதற்கு மொபைல் நிறுவனங்கள் பல வழிகளை அவர்களது மொபைலில் கையாள்கிறார்கள். நாங்கள் பாப் அப் சரியானதாக இருக்கும் என்று நினைத்ததால் அதையே ஒன்ப்ளஸ் 7 புரோவில் கொடுத்தோம். எதிர்பார்த்தது போலவே அதற்கான வரவேற்பு நன்றாகவே இருக்கிறது."

``பட்ஜெட் செக்மென்டில் சந்தை வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் ஏன் ஒன்ப்ளஸ் அதில் கவனம் செலுத்துவதில்லை?"

``முன்னரே சொன்னதுபோல நாங்கள் பிரீமியம் செக்மென்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். அதுவே, எங்கள் பலம் என்று நான் நினைக்கிறேன். அந்த விலையில் ஒரு சிறந்த போனை எங்களால் உருவாக்கிவிட முடியும். அதேநேரம் தற்போது குறைந்த விலையில், சிறந்த மொபைல்களைக் கொடுப்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று கருதுகிறோம். ஒரே நேரத்தில் ஒரு செக்மென்ட்டில் கவனம் செலுத்துவதால் எங்களால் சிறந்த மொபைலை வாடிக்கையாளருக்கு கொடுக்க முடிகிறது."

கடந்த ஐந்து வருடங்களில் ஹார்ட்வேர் மட்டுமல்ல சாப்ட்வேரிலும் சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறோம். அதை வாடிக்கையாளர்கள் இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்
விகாஸ் அகர்வால்

ஒன்ப்ளஸ் 7 சீரிஸுக்குப் போட்டியாக ஷியோமி ரெட்மி k20 என்ற ஸ்மார்ட்போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. அதை எதிர்கொள்ள ஒன்ப்ளஸ் என்ன திட்டம் வைத்திருக்கிறது?

``சந்தையில் போட்டி இருப்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று. அதனால் வாடிக்கையாளருக்கும் பல்வேறு தயாரிப்புகள் கிடைப்பது நல்ல விஷயம். ஒருவர் மொபைலுக்காகச் செலவு செய்யும்போது விலையை மட்டுமே பார்ப்பதில்லை, கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற தரம் இருக்கிறதா என்பதையும் பார்க்கிறார். எனவே, விலை மட்டுமே ஒரு மொபைலின் விற்பனையைத் தீர்மானிப்பதில்லை. தரம் மிகவும் முக்கியம், அதை நாங்கள் நிறைவாகவே கொடுக்கிறோம். கடந்த ஐந்து வருடங்களில் ஹார்ட்வேர் மட்டுமல்ல சாப்ட்வேரிலும் சிறந்த அனுபவத்தை வழங்கி வருகிறோம். அதை வாடிக்கையாளர்கள் இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்."

``சீன நிறுவனமான வாவேவுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது, ஒருவேளை எதிர்காலத்தில் ஒன்ப்ளஸுக்கும் இதே நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?"

``நாங்கள் எங்களுடைய வியாபாரத்தில் தெளிவாக இருக்கிறோம். மற்ற நிறுவனங்களைப்போல ஒன்ப்ளஸ் நெட்வொர்க் சாதனங்களை விற்பனை செய்வதில்லை. மொபைல்களை மட்டுமே விற்பனை செய்கிறோம். இப்போது நடந்து வரும் பிரச்னை நெட்வொர்க் தொடர்பானது என்பதால் எங்களுக்குப் பிரச்னை எதுவும் ஏற்படாது என நம்புகிறோம். ஒன்ப்ளஸ்ஸும் உலகம் முழுக்க மொபைல்களை விற்பனை செய்துவருகிறது. அமெரிக்காவும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகவே இருக்கிறது. தனியுரிமையும், பாதுகாப்பும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானது. அதை கொடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மேலும், நாங்கள் உள்ளூர் விதிமுறைகளை முழுவதுமாக கடைப்பிடிக்கிறோம் என்பதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் வராது"

Vikatan

``ஒன்ப்ளஸ் நிறுவனத்திடம் இருந்து எதிர்காலத்தில் என்ன மாதிரியான ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம்?"

``தடிமன் குறைந்த, கைக்கு அடக்கமான ஃபுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை நோக்கித்தான் மொபைல் நிறுவனங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் பார்த்தால் டிஸ்பிளேவைச் சுற்றிலும் பெஸல்கள் இருந்தன. ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் முன்பகுதியில் இருந்தது. கேமரா முன்னால் இருந்தது . அதன் பிறகு ஒவ்வொன்றாக மாற ஆரம்பித்தன. ஃபிங்கர்பிரின்ட் சென்ஸார் டிஸ்பிளேவுக்குள்ளே சென்றது. பாப் அப் கேமரா வந்தது. இது போன்றவற்றால் இன்று ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே சாத்தியமாகியிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்தான். இப்போது அண்டர் ஸ்கிரீன் கேமராவும் பரிசோதனை நிலையில் இருக்கிறது. அது வெற்றிபெற்றால் கூடிய விரைவில் ஒன்ப்ளஸ் மொபைல்களிலும் இதைப் பார்க்கலாம். பேட்டரி என்ற ஒரு விஷயம்தான் இன்னும் பெரிய அளவில் மாற்றமடையாமலேயே இருக்கிறது. அளவில் சிறியதாகவும் அதிக நேரம் சார்ஜ் நிற்கும்படியான பேட்டரி தொழில்நுட்பத்தை இனி எதிர்பார்க்கலாம்.