Published:Updated:

ஒன்ப்ளஸாகும் ஆப்பிள், ஆப்பிளாகும் ஒன்ப்ளஸ்... தலைகீழாக மாறும் ஸ்மார்ட்போன் சந்தை! #VikatanAnalysis

ஆப்பிள் & ஒன்ப்ளஸ்
News
ஆப்பிள் & ஒன்ப்ளஸ்

மாறிவரும் சூழலில் ஆப்பிள், ஒன்ப்ளஸ் இரண்டு நிறுவனங்களுமே அடுத்த தலைமுறை தயாரிப்புகளைச் சமீபத்தில் அறிமுகம் செய்தன. அதிலிருந்து இரண்டு நிறுவனங்களுமே யுக்தியை மாற்றியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

15 வருடங்களுக்கு முன்பு, பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் விலைகொடுத்து ஒரு போன் வாங்கப்போவதாகச் சொன்னால், சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது. இன்று பலருக்கும் ஸ்மார்ட்போன் வாங்க மினிமம் பட்ஜெட்டே பத்தாயிரம்தான். லட்சம் ரூபாய்க்கு ஐபோன் வாங்குகிறோம். ஆனால் எவ்வளவு விலை உயர்ந்திருந்தாலும் அந்த விலைக்கு நியாயம் செய்யும் வகையில் ஸ்மார்ட்போன்கள், வசதிகளிலும் தொழில்நுட்பத்திலும் அபார வளர்ச்சி கண்டுள்ளன. குட்டி டிவியாக, முழு நேர கேமராவாக, கையடக்க ரேடியோ பெட்டியாக என அனைத்துமாய் இருக்கும் ஸ்மார்ட்போனும் இன்று மக்களின் அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலில் இணைந்துவிட்டது.

இப்படியான மாற்றத்தில் இந்தியாவும் பெரும் பங்கு வகித்திருக்கிறது. பல கோடி வாடிக்கையாளர்களுடன் உலகின் முக்கிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. நல்ல சந்தைதான் போட்டியை உண்டாக்கும். போட்டிதான் நிறுவனங்களை பரபரவென புதிய விஷயங்கள் நோக்கி ஓட வைக்கும். அப்படி ஸ்மார்ட்போன்களில் புதிய விஷயங்களைக் கொண்டுவர உந்துதலாக இருந்த முக்கியச் சந்தை இந்தியா.

இங்கு விலைதான் ராஜா. குறைந்த விலையில் நல்ல தரத்தைக் கொடுக்கமுடியுமென்றால் அவர்களுக்கு எப்போதும் இந்தியர்களின் விருப்பப்பட்டியலில் இடமுண்டு.
Xiaomi
Xiaomi

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால்தான் முன்னணி நிறுவனங்களையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு பட்ஜெட் பிரிவில் ஷாவ்மி, ரியல்மீ போன்ற புதிய நிறுவனங்கள் கல்லா கட்டத் தொடங்கியிருக்கின்றன. பல வருடங்கள் சந்தையிலிருந்த சில பிராண்ட்கள் நேற்று வந்த பிராண்ட்களுடன் போட்டிபோட முடியாமல் காணாமல் போயிருக்கின்றன. நோக்கியா, சோனி எல்லாம் அப்படிக் காணாமல் போனவைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பட்ஜெட், மிட் ரேஞ்ச் பிரிவில்தான் இந்த டிரெண்ட். ப்ரீமியம் ஃப்ளாக் ஷிப் போன்களை வாங்குபவர்கள் மனநிலை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. அதிகம் பணம் கொடுத்து ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும்போது அதற்கான தரம் மட்டுமல்லாமல் பிராண்ட் வேல்யூவும் இருக்க வேண்டும் என நினைத்தனர் மக்கள். இதனாலேயே ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் மட்டுமே இந்தப் பிரிவில் பல காலமாக ஆட்சி செய்துவந்தன. ஆப்பிளின் ஐபோன் வைத்திருப்பதே சோயல் ஸ்டேட்டஸாகத்தான் பார்க்கப்பட்டது. இந்த நிலையை மாற்றியது ஒன்ப்ளஸ் என்ட்ரி.

முதலாம் தலைமுறை ஒன்ப்ளஸ் போன்.  Oneplus One
முதலாம் தலைமுறை ஒன்ப்ளஸ் போன். Oneplus One
'ஃப்ளாக்ஷிப் கில்லர்'
இந்த வார்த்தையைப் பிரபலப்படுத்தியது ஒன்ப்ளஸ்தான்.

அது என்னஃப்ளாக் ஷிப் கில்லர்?... குறைந்த விலை ஆனால், கிட்டத்தட்ட ப்ரீமியம்... ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும். ஃப்ளாக்ஷிப் போன்களை வெட்கித் தலைகுனிய வைக்கும் இது மாதிரியான போன்களை 'ஃப்ளாக் ஷிப் கில்லர்' என்கின்றனர். தரத்திலும் வாடிக்கையாளர் சேவையிலும் கூட ப்ரீமியம் அனுபவத்தைத் தந்ததால் குறுகிய காலத்தில் இந்திய ஃப்ளாக்ஷிப் சந்தையில் நம்பர் ஒன் பிராண்ட்டானது ஒன்ப்ளஸ். 'ஒன்ப்ளஸ் வச்சிருக்கிறதும் கெத்துதான்லா' என்ற மனநிலையும் பரவலானது. இப்படி ஒருபுறம் ஒன்ப்ளஸ், இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிறகடித்துப் பார்க்க, ஐபோன் விலைகள் உச்சத்தைத் தொடத்தொடங்கின. இந்தியாவில் லட்சம் ரூபாயைத் தாண்டியது ஐபோன்களின் விலை. இதனால் அமெரிக்காவைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஐபோன் விற்பனை சறுக்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, பிராண்டுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் மக்கள். அதனால் அங்கு ஆப்பிளை அசைத்துப் பார்ப்பது மற்ற நிறுவனங்களுக்குக் கடினமானதாக இருக்கிறது. சாம்சங் மட்டுமே போட்டிப்போட்டு வருகிறது. ஒன்ப்ளஸ் சீன நிறுவனம் என்பதால் அதன் தயாரிப்புகளை வாங்க அங்கு மக்கள் தயக்கம் காட்டிவந்தனர். அந்த நிலையும் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. தரத்தில் மேம்பட்ட போன்களாக இருப்பதால் அங்கும் கணிசமான வாடிக்கையாளர்களைப் பெறத்தொடங்கியிருக்கிறது ஒன்ப்ளஸ். இப்படியான சூழலில்தான் ஆப்பிள், ஒன்ப்ளஸ் இரண்டு நிறுவனங்களுமே அடுத்த தலைமுறை தயாரிப்புகளைச் சமீபத்தில் அறிமுகம் செய்தன.

Iphones
Iphones
AP

ஒன்ப்ளஸ் தனது 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. 8, 8 ப்ரோ என இரண்டு போன்கள். 8 ப்ரோவில் கொடுக்கப்பட்டிருக்கும் 6.78 இன்ச் QHD+ Fluid AMOLED 120 Hz டிஸ்ப்ளேதான் தற்போது உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே எனலாம். கேமரா, பேட்டரி, பர்ஃபாமன்ஸ் என மற்ற பிரிவுகளில் டிஸ்டிங்க்ஷன் வாங்குகிறது. ப்ரீமியம் போன்தான் என்றாலும் எப்போதுமே சில அம்சங்களைப் புறம்தள்ளிவிட்டே அதன் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்ப்ளஸ். வாடிக்கையாளர்களுக்கும் அது பெரிய குறையாகத் தெரியாது. ஆனால்; ஆப்பிள், சாம்சங் போன்ற ப்ரீமியம் போன்களில் இருப்பது நம்மிடம் இல்லையே என்ற சின்ன ஏக்கம் இருக்கும். அப்படியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என வயர்லெஸ் சார்ஜிங், IP68 வாட்டர்ப்ரூப் ரேட்டிங் என இதுவரை ஒன்ப்ளஸ் கொடுக்காமலிருந்த அம்சங்களுடன் வருகிறது 8 ப்ரோ. அதிலும் வயர்லெஸ் சார்ஜிங் சாதாரண சார்ஜிங் அளவுக்கு (30W) வேகமாக இருக்குமாம். இதுவரை எந்த போனிலும் இவ்வளவு வேகமான வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெறவில்லை. இப்படி ஒன்ப்ளஸ் 8 ப்ரோ அனைத்து விதங்களிலும் 'ப்ரோ' தான்.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

ஆனால், ஒன்ப்ளஸ் 8-ல் சொதப்பியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வந்த 7T-யில் சிறிய மாற்றங்களை மட்டும் செய்து ஒன்ப்ளஸ் 8 என வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் பற்றி விரிவாகப் படிக்கக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

இது நடந்த சில நாள்களிலேயே ஆப்பிள், இரண்டாம் தலைமுறை ஐபோன் SE-யை அறிமுகம் செய்தது. பார்க்க அப்படியே 2 வருடங்களுக்கு முன்பு வந்த ஐபோன் 8 போல இருக்கும் இந்த ஐபோன் SE-யில் உள்ளே இருப்பதெல்லாம் லேட்டஸ்ட் ஐபோன் 11 சீரிஸில் இருக்கும் வசதிகள். அது குறித்துப் படிக்கக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

ஐபோன் SE
ஐபோன் SE
Apple

சரி... இந்த அறிமுகங்களில் என்ன ஸ்பெஷல்..., வருடாவருடம் இதே கதைதானே என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் விலை 60,000 ரூபாயைத் தொடுகிறது. ஒன்ப்ளஸின் ஸ்பெஷல் எடிஷன் போன்கள் மட்டுமே இதற்கு முன்பு இந்த விலையைத் தொட்டிருக்கின்றன. இதனால் விலையிலும் இம்முறை ஆப்பிள், சாம்சங்கிற்குப் போட்டியாக நிற்கிறது ஒன்ப்ளஸ். ஒன்ப்ளஸ் 8 விலையும் எப்போதையும் விட அதிகமாகவே (41,999 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஐபோன் SE-யின் அமெரிக்க விலை 399 டாலர்கள். சர்வதேச அளவில் பார்த்தால் இது மிகவும் குறைவான விலை. இதனால் ஐபோன் SE தான் இந்த வருடம் உலகமெங்கும் அதிகம் விற்கப்போகும் ஸ்மார்ட்போனாக இருக்கும் எனக் கணிக்கின்றனர் வல்லுநர்கள். ஆனால், இந்தியாவில் எப்போதும் போல அமெரிக்காவைவிட அதிக விலைதான். இந்தியாவில் 42,500 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் ஐபோன் SE. இருப்பினும் இந்த விலையிலும் இந்தியாவில் நல்ல விற்பனையை எதிர்பார்க்கலாம். ஒன்ப்ளஸ் விலைக்கு ஆப்பிள் போன் கிடைக்கும் என்றால் யார்தான் ஐபோன் வாங்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள்.

இப்படி தங்களது ப்ரீமியம் போன்களுக்கு லைட்டான வெர்ஷன்களை பர்ஸுக்குப் பெரிதும் செலவு வைக்காத வண்ணம் வெளியிடுவதுதான் முன்னணி நிறுவனங்களின் தற்போதைய டிரெண்ட். சாம்சங் கடந்த வருடம் S10 மாடலுடன் S10 லைட் என்ற மாடலை இப்படி வெளியிட்டது. கூகுள் பிக்ஸல் 3-ன் லைட் வெர்ஷனாக பிக்ஸல் 3a-வை வெளியிட்டது.

இறங்கி வந்து குறைந்த விலை வெர்ஷன் கொடுத்த ப்ரீமியம் பிராண்ட்கள்!
இறங்கி வந்து குறைந்த விலை வெர்ஷன் கொடுத்த ப்ரீமியம் பிராண்ட்கள்!

இப்போது ஆப்பிளும் இந்த யுக்தியைக் கையில் எடுத்திருக்கிறது. அதாவது குறைந்த விலையில் கிட்டத்தட்ட பிரீமியம் போனில் இருக்கும் முக்கிய அம்சங்களை எடுத்துவருகின்றன இந்த போன்கள். இந்த டிரெண்ட் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் XR-ல் தொடங்கி அடுத்தடுத்த மாடல்களில் விலையைக் குறைத்து வருகிறது ஆப்பிள். ஐபோன் 12, விலை குறைவாக கிடைக்கும் என இதுவரை கசிந்த லீக்ஸ் தெரிவிக்கின்றன.

International Data Corporation (IDC) வெளியிட்ட தகவலின்படி இந்தியா பிரீமியம் ஸ்மார்ட்போன் செக்மென்ட்டில் கடந்த வருடம் இறுதிக் காலாண்டில் ஐபோன்களே அதிகப்படியாக விற்பனையாகியுள்ளன. தொடர்ந்து சரிவைக் கண்டுவந்த ஆப்பிள், இதன்மூலம் சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ்ஸை முந்தியது. இதற்கு விலை குறைக்கப்பட்ட பழைய ஐபோன்களும், குறைந்த விலையில் நிறைவான வசதிகளுடனும் வெளிவந்த ஐபோன் 11-ம்தான் காரணம். Counterpoint research ஆய்வு படி இந்த வருடம் ஆப்பிளின் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். ஐபோன் SE அதில் முக்கியப் பங்காற்றும். இதற்கு கொரோனாதான் பெரிய தடைக்கல்!

ஒவ்வொரு வருடமும் ஐபோனின் அறிமுக விலை
ஒவ்வொரு வருடமும் ஐபோனின் அறிமுக விலை
கொரோனாவுக்குப் பின் அதிக விலை கொடுத்து கேட்ஜெட்ஸ் வாங்குவதில் மக்கள் விருப்பம் காட்ட மாட்டார்கள் என்றும் கணிக்கின்றனர் நிபுணர்கள்.

முன்னணி நிறுவனங்கள் இப்படி இறங்கி வர ஒன்ப்ளஸ் மேலேறிச் செல்லப் பார்க்கிறது. பட்ஜெட் பிரிவில் வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கும் ஷாவ்மி, ரியல்மீ போன்ற நிறுவனங்களும் அடுத்தகட்டத்துக்குப் போக முயற்சி செய்துவருகின்றன. அப்படியான முயற்சியில் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ உண்மையில் ஐபோன் 11, சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸூடன் போட்டிபோடும் அளவிற்குச் சிறப்பான போன்தான். ஆனால் 60,000 ரூபாய் விலை என்பது அதன் பலமான ஏரியா கிடையாது. தன்னை முழுவதுமாக ஒரு ப்ரீமியம் பிராண்ட்டாக மாற்ற நினைக்கிறது ஒன்ப்ளஸ். ஆனால் அதற்கு அதன் வாடிக்கையாளர்கள் ரெடியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

விலைக்கு நியாயம் செய்யுமா ஒன்ப்ளஸ்?

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். விலை அதிகம் என்றாலும் புதிய புரட்சிகரமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் ஆப்பிள் முன்னோடி. பாதுகாப்பான ஃபிங்கர்ப்ரின்ட் ஸ்கேனிங் தொடங்கி ஃபேஸ் அன்லாக் வரை புதிதாக ஒரு ஸ்டாண்டர்ட் உருவாக்கியது ஆப்பிள். அதன் சமீபத்திய A13 பயோனிக் சிப்களின் திறன் வேறு எந்த மொபைல் சிப்பிடமும் கிடையாது. ஓஎஸ்ஸும் தனித்துவமானது, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தது. கேமரா பிரிவிலும் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது ஆப்பிள். இப்படி பலவற்றையும் சொந்தமாகப் பார்த்துப் பார்த்து செய்யும் நிறுவனம் அதிகப் பணம் கேட்பதை மக்கள் ஏற்றுக்கொள்வர். ஆனால் கூகுளின் ஆண்ட்ராய்டு மீது கட்டமைக்கப்பட்ட ஓ.எஸ், குவால்கம் நிறுவனத்தின் புராசஸர் என ஒன்ப்ளஸிடம் சொந்தமான இன்னொவேஷன் என்பது குறைவு. கடந்த வருடம் புரட்சிகரமாக முறையான பாப்-அப் செல்ஃபி கேமராவைக் கொண்டுவந்தது அந்த நிறுவனம். ஆனால் அதுவும் இந்த வருடம் கைவிடப்பட்டிருக்கிறது. புதிதான தொழில்நுட்பம் என்று சொல்ல ஒன்ப்ளஸ் 8 சீரிஸில் எதுவுமே இல்லை.

OnePlus R&D Centre
OnePlus R&D Centre
மு.ராஜேஷ்

இந்த வருடம் மென்பொருள் அளவில் பல முன்னேற்றங்கள் இருக்கும் என ஒன்ப்ளஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. R&D-யில் அதிக முதலீட்டைச் செய்துவருகிறது அந்த நிறுவனம். ஹைதராபாத்தில் கூட புதிய R&D மையம் ஒன்றைச் சமீபத்தில் நிறுவியது. இதிலிருந்து பலன்கள் கிடைக்கும் என்றால் ஒன்ப்ளஸ் மேல் குறிப்பிட்ட நிறுவனங்களுடன் அந்த விலையிலும் போட்டிப்போட வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இந்த வருடம் அப்படி ஸ்பெஷலாகச் சொல்ல எதுவுமில்லை. 8 ப்ரோ தரமான போன் என்றாலும் 60,000 ரூபாயைத் தாண்டும் ப்ரீமியம் ஏரியா, ஒன்ப்ளஸின் பலம் கிடையாது. அதன் வெற்றி ஃபார்முலா 30,000-40,000 விலையிலும் பிரீமியம் போன் அனுபவத்தைத் தருவதுதான். ஆனால், அங்கே இந்த வருடம் சறுக்கல்தான் (ஒன்ப்ளஸ் 8).

உலகமெங்கும் இருக்கும் பெரும்பாலான கேட்ஜெட் விமர்சகர்களும் இந்தக் கருத்தையே முன்வைக்கின்றனர்

இன்றைய ஸ்மார்ட்போன் சந்தையில் நடக்கும் இந்த மாற்றத்தை எளிதாக விளக்கவேண்டும் என்றால் ஒன்ப்ளஸின் வெற்றியைப் பார்த்து ஆப்பிள் ஒன்ப்ளஸாகப் பார்க்கிறது. ஆனால் ஒன்ப்ளஸ்ஸோ ஆப்பிளாகப் பார்க்கிறது. இந்த மாற்றங்களும் போட்டியும்தான் அடுத்த சில வருடங்கள் ஸ்மார்ட்போன் சந்தையை உயிர்ப்புடன் வைத்திருக்கப்போகிறது.