Published:Updated:

`பேட்டரி செம, ஆனா பர்ஃபாமென்ஸ்...' எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸ் நார்டு? #HandsOnReview

ஒன்ப்ளஸ் நார்டு | OnePlus Nord Review

ஒன்ப்ளஸ் நார்டு ரிவ்யூ

ரூ.25,000 - 30,000 விலைக்கு ஆல்-ரவுண்டு நல்ல பேக்கேஜாக முக்கியமான வசதிகளில் சமரசம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது நார்டு.

கொரோனவுடன் நாம் வாழப் பழகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முடிந்தளவு வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்ற மனநிலைதான் கிட்டத்தட்ட அனைத்து மக்களிடமும் இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து விஷயங்களிலும் மக்கள் செலவுகளை குறைக்கவே பார்க்கின்றனர். கொரோனாவுக்கு பிறகும் இந்த டிரெண்ட் சில வருடங்கள் இருக்கும் என்கின்றன கருத்துக்கணிப்புகள். இப்போது ஸ்மார்ட்போன் அத்தியாவசிய பொருளா, ஆடம்பர தேவையா எனக் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதில் வைத்திருப்பார்கள். ஆனால் மொத்தமாக ஸ்மார்ட்போன்களிலும் அதிக 'Value for Money' இருக்கும் மாடல்களையே இனி மக்கள் தேர்ந்தெடுப்பார்கள், விலையுர்ந்த ப்ரீமியம் போன்களுக்கான டிமாண்ட் முன்பு போல இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் நார்டு
ஒன்ப்ளஸ் நார்டு

இதை உணர்ந்த நிறுவனங்கள் அதன் ப்ரீமியம் மொபைல்களின் லைட் வெர்ஷன்களை மிட்-ரேஞ்ச் செக்மென்ட்டில் அறிமுகப்படுத்திவருகின்றன. ஆப்பிள், ஐபோன் SE-யை அறிமுகப்படுத்தியது. சாம்சங் தொடர்ந்து ஏ-சீரிஸில் பல போன்களை அறிமுகப்படுத்திவருகிறது. கூகுள் அதன் பிக்ஸல் 4a-வை அறிமுகப்படுத்திவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் நல்ல விற்பனையைப் பார்த்துவரும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ஒன்ப்ளஸும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் 'நார்டு' மாடலை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த போன் எப்படி இருக்கிறது என்ற #FirstImpressions கட்டுரையை சில நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம்.

6 கேமரா, 90 Hz டிஸ்ப்ளே... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸின் `மிட்ரேஞ்ச்' நார்டு? #FirstImpressions
கிட்டத்தட்ட ஒரு வாரம் பயன்படுத்தியதற்கு பிறகு இந்த போன் பற்றிய எங்கள் முழு விமர்சனம் இதோ!

டிசைன்

க்ளாஸ் பினிஷுடன் போன் பார்ப்பதற்கு முந்தைய ஒன்ப்ளஸ் போன்கள் போலவே ப்ரீமியமாக இருக்கிறது நார்டு. பல டிசைன்களை முயற்சி செய்து பார்த்து கடைசியில் டிரேட்-மார்க் ஒன்ப்ளஸ் லுக்கையே டிக் அடித்ததாகக் கூறியிருந்தார் CEO கார்ல் பே. இதை ப்ளஸ்ஸாகவும் எடுத்துக்கொள்ளலாம் மைனஸாகவும் எடுத்துக்கொள்ளலாம். அது உங்கள் பர்சனல் சாய்ஸ்.

 OnePlus Nord
OnePlus Nord

அளவில் ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்கள் போல மிகவும் பெரியதாக இல்லை நார்டு. ஒற்றைக் கையில் பயன்படுத்தும் அளவுக்கு காம்பாக்ட்டாக இருக்கிறது. வெளியில் க்ளாஸ் பினிஷ் என்றாலும் உள்ளே பிளாஸ்டிக்தான், மெட்டல் இல்லை. மெட்டல் போன்று பிளாஸ்டிக் மேல் பெயின்ட் அடித்திருக்கிறார்கள். கையில் எடுத்ததுமே அதை உணர முடிகிறது. விலையை குறைக்க இந்த பில்ட் குவாலிட்டி விஷயத்தில் இந்த சமரசத்தைச் செய்திருக்கிறார்கள். அதனால் ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன் போல பலம் பொருந்திய போனாக இது இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. Gray Onyx, Blue Marble என இரண்டு நிறங்களில் வருகிறது. Gray Onyx மாடலைத்தான் நாங்கள் ரிவ்யூ செய்தோம். எந்த ஒரு ஆர்பாட்டமுமில்லாத சிம்பிள் கலர். எளிமை விரும்பிகள் இந்த கலரை டிக் அடிப்பார்கள் எனக் கணிக்கிறோம். Blue Marble மாடல் தரமான சம்பவம். பலரும் அதைத்தான் தேர்வுசெய்வார்கள்.

டிஸ்ப்ளே

OnePlus Nord
OnePlus Nord

ப்ரீமியம் ஒன்ப்ளஸ் போன்களை போல ஒன்ப்ளஸ் நார்டிலும் AMOLED டிஸ்ப்ளேதான். இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சாரும் இருக்கிறது. ஆனால், முன்பு சொன்னது போல சற்றே காம்பாக்ட்டான சிறிய போன் நார்டு. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில் 6.78-இன்ச் டிஸ்ப்ளே கொடுத்திருந்தார்கள். இதில் 6.44-இன்ச் Full-HD+ டிஸ்ப்ளே கொடுத்திருக்கிறார்கள். இது 90Hz ரீஃப்ரெஷ் ரேட் திறன் கொண்டது. நாங்கள் பயன்படுத்தியதில் டிஸ்ப்ளே நன்றாகவே இருந்தது. நிறங்கள் தெளிவாக ஒளிரப்படுகிறது, 90 Hz என்பதால் அனைத்தும் ஸ்மூத்தாக இருந்தது. ஆனால் மற்ற ஒன்ப்ளஸ் போன்களை போல நார்டின் டிஸ்ப்ளே அவ்வளவு ப்ரைட்டாக இல்லை. வெளியில் வெயிலில் பயன்படுத்துவது சற்றே சிரமமாகத்தான் இருக்கிறது. மற்றபடி பெரிய குறைகள் இல்லை.

கேமரா

ப்ரீமியம் செக்மென்ட்டில் கேமரா விஷயத்தில் சாம்சங், ஆப்பிள், கூகுளிடம் போட்டிப்போடுவதில் சற்றே திணறும் ஒன்ப்ளஸ். ஆனால், இந்த மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் மிகச் சிறந்த கேமரா அனுபவத்தை ஒன்ப்ளஸ் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என முன்பு சொல்லியிருந்தோம். ஆனால் கேமரா டிபார்ட்மென்ட்டில் சில இடங்களில் சறுக்கவே செய்கிறது நார்டு. பின்புறம் இருக்கும் நான்கு கேமராக்களில் மெயின் கேமராவில் (48MP (f/1.75) Sony IMX586 sensor) எடுக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன. அல்ட்ரா-வைடு கேமராவில் படங்கள் எடுக்கும் போது தரம் நன்றாகவே குறைந்துவிடுகிறது. மேக்ரோ கேமரா 'தேவையில்லாத ஆணி' என்று சொல்லும் அளவுக்கு மிகவும் சுமாராகவே இருக்கிறது. அனைத்து நிறுவனங்கள் தருகின்றன எனக் கடமைக்கு நான்கு கேமராக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒன்ப்ளஸ் நார்டில் எடுத்த சாம்பிள் படங்களைக் கீழே காணலாம்,

ஷேக் இல்லாமல் வீடியோ எடுக்க OIS மற்றும் EIS என இரண்டுமே இருக்கிறது. இதனால் வீடியோக்கள் எந்த அசைவும் இல்லாமல் தரமாக இருக்கிறது.

Chennai Mount Road shot on the recently released OnePlus Nord (With No Post Editing) Full Review soon! #OnePlusNord

Posted by Hi Tamizha on Monday, August 10, 2020

செல்ஃபியை பொறுத்தவரை ஒன்ப்ளஸ், நார்டில்தான் முதல்முறையாக இரண்டு கேமராக்கள் முன்புறம் கொடுத்திருக்கிறார்கள். 32MP (Sony IMX616 sensor) மெயின் கேமரா ஒன்று. இதில் எடுக்கும் படங்கள் நன்றாக இருக்கின்றன. இதே தரத்தை 8MP அல்ட்ரா-வைடு கேமராவில் எதிர்பார்க்கக்கூடாது. பக்கத்தில் வைத்துப் பார்த்தாலே உங்களால் தரத்தில் இருக்கும் வித்தியாசத்தைச் சொல்லிவிட முடியும். அதிகம் பேரை செல்ஃபியில் கொண்டுவர மட்டும் இந்த கேமரா உதவிக்கரமாக இருக்கும். செல்ஃபி கேமராவிலும் 4K வீடியோக்கள் எடுக்க முடிகிறது.

மொத்தமாக இந்த ரேஞ்ச்சில் ஓகேவான கேமராதான். பெரிய குறைகள் எதுவும் இல்லை. ஆனால், வேற லெவல் எனச் சொல்லவும் இதில் எதுவுமில்லை.

பர்ஃபாமன்ஸ்

ஒன்ப்ளஸ் பெயர் போனதே அதன் ஸ்மூத்தான மென்பொருள் அனுபவத்திற்கும் தாறுமாறு பர்ஃபாமன்ஸுக்கும்தான். ஆனால் நார்டுக்கு இந்த ஏரியாவில் டிஸ்டின்க்ஷன் கிடையாது, ஃபர்ஸ்ட் கிளாஸ்தான். காரணம் இதிலிருக்கும் ஸ்னாப்டிராகன் 765G புராசஸர். இனிவரும் அனைத்து ஒன்ப்ளஸ் போன்களும் 5G சப்போர்ட்டுடன்தான் வரும் என அறிவித்துவிட்டது அந்த நிறுவனம். ஒன்ப்ளஸ் நார்டு தற்போது இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு வருகிறது.

OnePlus Nord Chipset
OnePlus Nord Chipset

ஐரோப்பாவில் 5G வரத்தொடங்கிவிட்டதால் அங்கு 5G தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஒன்ப்ளஸ். ஆனால் பிரீமியம் 5G போன்களில் கொடுக்கப்பட்டுவரும், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸரை இந்த மிட்ரேஞ்ச் விலையில் தர முடியாத நிலை. இதனால்தான் சமீபத்தில் 5G சப்போர்ட்டுடன் குவால்காம் அறிமுகப்படுத்திய மிட்ரேஞ்ச் ஸ்னாப்டிராகன் 765G புராசஸர் நார்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விலையில் ஸ்னாப்டிராகன் 800 சீரிஸ் சிப்செட்டுடன் போகோ X2, ரெட்மி K20 ப்ரோ, ரியல்மீ X3 சூப்பர் ஜூம் என சில போன்கள் இருக்கின்றன. இவற்றுடன் ஒப்பிடுகையில் பர்ஃபாமன்ஸில் கொஞ்சம் பின்தங்கிய புராசஸர்தான் 765G. ஆனால் பயன்பாட்டில் அனைத்துமே நார்டில் நன்றாகவே இயங்கியது. ஹை-கிராபிக்ஸில் பப்ஜி ஆடினோம், 4K வீடியோ எடிட் செய்தோம். எந்த ஒரு சிக்கலும் இல்லை. பர்ஃபாமன்ஸ் விஷயத்தில் ஒன்ப்ளஸின் 'ஆக்ஸிஜன் ஓஎஸ்' நார்டுக்கு மிக முக்கிய ப்ளஸ். ஆனால், ப்ரீமியம்ஒன்ப்ளஸ் போன்கள் போல நீண்டக்காலம் பர்ஃபாமன்ஸில் எந்த குறையும் இருக்காது என வாக்குறுதி தர முடியாது.

பேட்டரி

OnePlus Nord
OnePlus Nord

4115 mAh பேட்டரியும் முந்தைய போன்களில் இருக்கும் Warp 30T ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 765G கொஞ்சம் லைட்டான சிப்தான் என்பதால் இன்னும் கூட நல்ல பேட்டரி லைஃப் இருக்கிறது. 50% சார்ஜ் 30 நிமிடங்களுக்குள் ஏறிவிடுகிறது. ஒரு சார்ஜில் ஒரு முழு நாளை எளிதாகக் கடந்துவிடலாம். பேட்டரி நார்டின் மிக முக்கிய ப்ளஸ்.

விலை

நார்டின் ஆரம்ப விலை 24,999 ரூபாய் போலத் தெரியும். ஆனால் அது 64 GB ஸ்டோரேஜ் வேரியன்ட். பப்ஜி போன்ற கேம்கள் ஆடுபவர்கள் இது நிச்சயம் பத்தாது. இந்த வேரியன்ட் இன்னும் விற்பனைக்கும் வரவில்லை. அதனால் 27,999 ரூபாயைத்தான் இதன் ஆரம்ப விலையாக எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விலைக்கு நல்ல ஆல்ரவுண்டர்தான் நார்டு. விலையை எதில் குறைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்தோம்.

ஒன்ப்ளஸ் அதன் போன்களில் சமீபத்திய UFS 3.0 ஸ்டோரேஜ் கொடுப்பது வழக்கம். யாரும் பெரிதும் கண்டுகொள்ளாத ஏரியா இதுதான் என்பதால் நார்டில் இதற்குப் பதிலாக UFS 2.1தான் கொடுத்திருக்கிறார்கள். இதன் USB-C ஃபைல் டிரான்ஸ்பரும் மெதுவாகத்தான் இருக்கும். பர்பார்மென்ஸும் கொஞ்சம் சறுக்கும். மற்றபடி வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர்ஃப்ரூப் ரேட்டிங் போன்ற ஆடம்பர விஷயங்களைக் கட் செய்திருக்கிறார்கள். முக்கிய விஷயங்களில் பெரிய சமரசங்கள் எதுவும் இல்லை.

6 கேமரா, 90 Hz டிஸ்ப்ளே... எப்படி இருக்கிறது ஒன்ப்ளஸின் `மிட்ரேஞ்ச்' நார்டு? #FirstImpressions

பிரீமியம் போன்களை மிட்-ரேஞ்ச் விலைக்கு எடுத்துவரும்போது அதிலிருக்கும் ஒரு முக்கிய ஹைலைட்டை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையுமே கைவிட்டுவிடுகின்றன ஆப்பிள், சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்கள். உதாரணத்துக்குக் கூகுள் பிக்ஸல் 4a-ல் பிக்ஸல் 4-லிருக்கும் அதே பிரீமியம் கேமராவை மட்டும் அப்படியே எடுத்துவந்திருக்கிறது கூகுள். ஆனால், மற்ற விஷயங்கள் சுமார் ரகம். ஆப்பிள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் SE-ல் ஐபோன் 11 ப்ரோவில் இருக்கும் அதே சிப்செட்டை எடுத்துவந்திருந்தது. ஆனால், பேட்டரி மிகவும் மோசம். ஆனால் ஒன்ப்ளஸ் இந்த ரூட்டை எடுக்கவில்லை. ஆல்-ரவுண்டு நல்ல பேக்கேஜாக முக்கியமான வசதிகளில் சமரசம் இல்லாமல் வெளிவந்திருக்கிறது நார்டு.

இந்த விலையில் இதை விட கொஞ்சம் நல்ல ஸ்பெக்ஸுடன் வந்திருக்கும் ரியல்மீ X3 சூப்பர் ஜூம் போன்ற போன்களும் இருக்கின்றன. ஆனால் 'ஒன்ப்ளஸ் அனுபவத்திற்காக' நார்டை தாராளமாக டிக் அடிக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு