Published:Updated:

`நொடியில் மறையும் கேமராக்கள்!' - இது ஒன்ப்ளஸ் மேஜிக்! #Video

அமெரிக்காவில் நடக்கும் பிரபல கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் (CES) நிகழ்ச்சியில் ஒன்ப்ளஸ் முதல் கான்செப்ட் போனையும், புதிய சார்ஜிங் வசதியையும் அறிமுகப்படுத்தியது.

ஒன்ப்ளஸ் கான்செப்ட் போன்
ஒன்ப்ளஸ் கான்செப்ட் போன்

ஆண்ட்ராய்டு உலகத்தில் ஆப்பிளின் ஐபோன்களுக்கு சவால் விடும் அளவுக்குத் தரத்திலும் பர்ஃபார்மன்ஸிலும் கலக்கிக்கொண்டிருக்கிறது ஒன்ப்ளஸ் மொபைல்கள். வருடா வருடம் அமெரிக்காவில் நடக்கும் பிரபல கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் (CES) நிகழ்ச்சியில் ஒன்ப்ளஸ் முதல் கான்செப்ட் போனையும், புதிய சார்ஜிங் வசதியையும் அறிமுகப்படுத்தியது. ஆப்டிமைஸ்ட் சார்ஜிங் (optimized charging ) என அழைக்கப்படும் இந்த முறையில் இரவில் நம் மொபைலுக்கு சார்ஜ் செய்யும்போது 80% நிறைந்தவுடன் மொபைல் சார்ஜாவது நின்றுவிடும். இதன் மூலமாக உங்கள் பேட்டரியின் ஆயுள் அதிக நாள்கள் நீடிக்கும்.

optimized charging
optimized charging

நாளெல்லாம் மொபைல் போனில் மூழ்கிவிட்டு இரவு தூங்கப்போகும் முன்னர் சார்ஜ் போடுவதுதான் நம்மில் பலருக்கும் வாடிக்கை. இப்படி இரவில் நீண்ட நேரம் சார்ஜ் செய்யும்போது பேட்டரி சீக்கிரம் தோய்வடைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தடுக்கும் விதமாக ஆப்டிமைஸ்ட் சார்ஜிங் முறையில் மொபைல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும். ஒன்ப்ளஸ் தனது பயனர்களின் தூங்கும் நேரத்தைக் கண்காணித்தோ, அவர்களின் முதல் அலாரம் நேரத்தை வைத்தோ அவர்கள் விழிப்பதற்கு 100 நிமிடங்களுக்கு முன்னால் மீண்டும் சார்ஜாகத் தொடங்கும். விழிக்கும்போது மொபைல் 100 சதவிகிதம் சார்ஜ் ஆகியிருக்கும். இப்படி சார்ஜ் செய்யும்போது மொபைல் பேட்டரிக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நீண்ட நாள்கள் உழைக்கும்.

ஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு?

ஆப்பிள் மற்றும் அஸுஸ் போன்ற மற்ற நிறுவனத்தின் மொபைல்களில் இந்த வசதி இருக்கும் நிலையில், தற்போது ஒன்ப்ளஸ் நிறுவனமும் அதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி எப்போது, எந்தெந்த மாடல் மொபைல்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இப்போது போன்களில் அதிக கேமராக்கள் வைப்பதுதான் டிரெண்டு. ஆனால், இப்படிச் செய்வதால் டிசைனில் கோட்டைவிட்டுவிடுகின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். இதற்கான தீர்வை மேல் குறிப்பிட்ட கான்செப்ட் போனில் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். இதற்கு Electro-Chromatic Glass தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த கிளாஸ் ப்ரீமியம் கார்களில் பயன்படுத்தப்படும் ஒன்று. தேவை எனும்போது மட்டும் 'Transparent'-ஆக இருப்பது இதன் சிறப்பு. இதை வைத்துதான் கேமராவை மறைத்திருக்கிறது ஒன்ப்ளஸ். இதற்காக 18 மாதங்கள் உழைத்திருக்கிறதாம் ஒன்ப்ளஸ். இந்த டிசைன் மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுவருகிறது. புத்தம் புதிய தொழில்நுட்பம் என்பதால் இது எந்த போனில் எப்போது வரும் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.