Published:Updated:

ஒன்ப்ளஸ் Q1 டிவி எப்படி இருக்கு?

தார்மிக் லீ
ஒன்ப்ளஸ் Q1

ஒன்ப்ளஸ் Q1 டிவி

ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்திய மொபைல் சந்தைக்குள் நுழைந்து ஆறு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அசுர வளர்ச்சியடைந்து இன்று ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக உயர்ந்து நிற்கிறது.

ஒன்ப்ளஸ் நிறுவனம் இந்திய மொபைல் சந்தைக்குள் நுழைந்து ஆறு வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அசுர வளர்ச்சியடைந்து இன்று ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் போட்டியாக உயர்ந்து நிற்கிறது. காரணம், நடுத்தர விலையில் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் இருந்த வசதிகளைக் கொடுத்ததுதான். மொபைல் போன்களில் T, Pro என்ற அப்டேட்கள், வயர்லெஸ் புல்லட் ஹெட்போன்கள் என எல்லா வருடமும் நம்மை ஆச்ச யப்படுத்த ஒன்ப்ளஸிடம் எதாவது இருந்துகொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் வெளியாகியிருப்பதுதான் ஒன்ப்ளஸ் டிவி. Q1, Q1 ப்ரோ என இரண்டு வேரியன்ட்களில் வெளிவந்திருக்கிறது முதல் ஒன்ப்ளஸ் டிவி. இதில் Q1 டிவி எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திப் பார்த்தோம்.

55 இன்ச் Q1 மாடலின் விலை ரூ.69,900. Q1 ப்ரோவின் விலை 99,900 ரூபாய். ஆனால், இந்த இரண்டு மாடல்களுக்கும் இருக்கும் வித்தியாசமெனப் பார்த்தால் ஒன்றே ஒன்றுதான். Q1 ப்ரோவில் கூடுதலாக சவுண்டுபார் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. டிவியை ஆன் செய்தவுடன் ஸ்லைடிங் ஸ்டைலில் சவுண்ட்பார் மட்டும் டி.விக்குக் கீழே எட்டிப்பார்க்கிறது. இது ஒன்றுதானே தவிர வேறு எந்தப் பெரிய மாற்றங்களும் இல்லை. Q1 டிவியில் இருக்கும் அதே ஸ்பெக்ஸ்தான் ப்ரோ வெர்ஷனிலும் இருக்கிறது.

ஒன்ப்ளஸ் 55 இன்ச் Q1 ஸ்பெக்ஸ்

  • Black Crystal (ஒரே கலர்)

  • 19.5 கிலோ கிராம் (ஸ்டாண்டு இல்லாமல்)

  • QLED (4K)

  • Dolby Atmos and Vision, HDR 10, HDR 10+, HLG

  • OS - Android Pie 9 (3GB RAM, 16GB Internal)

  • HDMI (4 Ports), USB (3 Ports), Optical output, AV Input (3 in 1)

  • Smooth Motion- 480Hz

  • Sound output - 50W

  • Google Assistant Built-in, Alexa, Chrome Cast Built-in

டிஸ்ப்ளே

ஒன்ப்ளஸ் Q1 டிவி
ஒன்ப்ளஸ் Q1 டிவி

சாம்சங் மற்றும் சோனியின் பிரத்யேக QLED டெக்னாலஜிதான் இதிலும் இருக்கிறது. இது ப்ரீமியம் டி.விக்களில் மட்டுமே இடம்பெற்று வந்தது. இந்த குவாண்டம் டாட் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் கொண்ட டி.வி குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது வரும். ஆனால் இந்த விலையில் 4K டெக்னாலஜியுடன் கூடிய QLED டிஸ்ப்ளே பேனல்தான் ஒன்ப்ளஸ் டி.வியின் ஃபர்ஸ்ட் & பெஸ்ட் இம்ப்ரஷன். பல டிவிகள் இன்று HDR சப்போர்ட்டுடன் வருவதாக இருந்தாலும் HDR 10+, Dolby Vision HDR போன்ற ஸ்டாண்டர்ட்களுக்கு சப்போர்ட் இருக்காது. இதில் அந்த பிரச்னை இல்லை. ப்ரைம் வீடியோ போன்ற தளங்களில் HDR கன்டென்ட் பார்க்கும்போது நிச்சயம் அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது. வீடியோ தரத்தின் மூலமே இது கண்டிப்பாக ஒரு ப்ரீமியம் டிவியாகத்தான் இருக்கும் என்ற உணர்வைப் பார்ப்பவர்களுக்குத் தருகிறது. பிராட்பேண்டு கனெக்‌ஷன் எவ்வளவு வேகமாக இருந்தாலும் Wifi-யில் இயக்கும்போது 4K வீடியோக்களில் சின்ன தொய்வு காணப்படுகிறது. இதையே ஈத்தர்நெட்டில் கனெக்‌ட் செய்து வீடியோக்களைப் பார்த்தால் பக்காவாக இருக்கிறது. Refresh Rate 480Hz கொடுக்கப்பட்டுள்ளதால் கேமிங் அனுபவம் வேற லெவலாக இருக்கிறது. நாங்கள் PS4 ப்ரோ வைத்திருந்ததால் 4K ரெசல்யூசனில் கேம் ஆடி பார்த்தோம், உண்மையில் மறக்கமுடியாத அனுபவம்தான்.

ஆடியோ

என்னதான் குவாண்டம் டாட் டிஸ்ப்ளே, 4K HDR தொழில்நுட்பம் என்று சொன்னாலும் ஆடியோ சிறப்பாக இருந்தால்தான் படங்கள் மற்றும் தொடர்கள் பார்ப்பது முழுமை பெரும். அதற்கு ஏற்றவாறு இந்த டிவியில் 50 வாட்ஸ் திறன்கொண்ட ஸ்பீக்கர்கள்(4 full range speakers | tweeters | 2*10 W woofers) இருக்கின்றன. வீடியோவுக்கு Dolby Vision என்றால் ஆடியோவிற்கு Dolby Atmos சப்போர்ட் இருக்கிறது. ஒரு அறையை நிரப்பும் சக்தி இந்த ஸ்பீக்கருக்கு இருக்கிறது. ஆனால், டிவிகளில் ஆடியோ தரம் எந்த அளவில் இருக்குமோ அதே அளவில்தான் இதிலும் இருக்கிறது, வேற லெவல் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஸ்லைடிங் சவுண்டுபார் என்றாலும் Q1 ப்ரோவிலும் கிட்டத்தட்ட இதே ஆடியோ சிஸ்டம்தான் என்பதால் 30,000 ரூபாய் கொடுத்து Q1 ப்ரோ வெர்ஷனை வாங்குவதற்கு பேசிக் Q1 டி.வியோடு சேர்த்து 30,000-ரூபாய்க்குள் நல்ல ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்குவது நல்லது.

இயங்குதளம்

இயங்குதளம்
இயங்குதளம்

ஆண்ட்ராய்டு பை மேல் கட்டமைக்கப்பட்ட ஆக்சிஜன் ஓ.எஸ்ஸில் இயங்குகிறது ஒன்ப்ளஸ் டிவி. ஸ்மூத்தாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் சிம்பிளாக இருக்கிறது இதன் UI. மொபைல் ஆப் மூலம் இயக்கும்போது கிடைக்கும் கூடுதல் வசதிகள் இதன் ப்ளஸ். அதிகம் பயன்படுத்தப்படும் அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ5, யூடியூப் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்கள் இதில் இருக்கின்றன. ஆனால் சர்வதேச அளவில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் கிங்கான நெட்ஃப்ளிக்ஸுக்கு இதுவரை சப்போர்ட் தரப்படவில்லை. ஆனால், 'வருங்கால அப்டேட்டில் கட்டாயம் நெட்ஃப்ளிக்ஸ் இடம்பெறும்' என வாக்குறுதி கொடுத்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம். அதற்கான பேச்சு வார்த்தைகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

டிசைன் மற்றும் வசதிகள்

டிசைன் மற்றும் வசதிகள்
டிசைன் மற்றும் வசதிகள்

சிறிய பேஸ்ல், நல்ல பினிஷ் எனப் பார்க்க அசத்தலாகவே இருக்கிறது. வால்மவுன்ட் செய்யாமல் ஸ்டாண்டுடன் வைத்தாலே பார்க்க சூப்பராகத்தான் இது இருக்கும். ஆனால், ஒன்ப்ளஸ் Q1 வேரியன்ட்டில் டி.வி ஸ்டாண்டை தனியாகத்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். Q1 ப்ரோவுக்கு மட்டும்தான் டி.வி வாங்கும்போதே ஸ்டாண்டு கொடுக்கப்படுகிறது. வால்மவுன்ட்தான் என்றால் ஸ்டாண்டு பற்றிக்கவலைப்பட வேண்டியதில்லை. 55 இன்ச் கொண்ட இந்த டி.வியை 8 முதல் 12 அடி தூரத்திலிருந்து பார்த்தால் சரியாக இருக்கும். HDMI, Optical out, USB, Ethernet போன்று டி.வியுடன் கனெக்ட் செய்ய வேண்டிய போர்ட்களை டி.வியை வால்மவுன்ட் செய்வதற்கு முன்பே பொருத்திக்கொண்டால் நல்லது. சுவரோடு சுவராக டி.வி ஒட்டியிருப்பதால் போர்ட்களில் வயர்களை கனெக்ட் செய்வது சற்றே சிரமம்தான். எதுக்கு வம்பு, ஸ்டாண்டு இருந்தால் இவற்றை எளிதாக மாற்றிக்கொள்ளலாம் என்றால் அந்த டி.வி ஸ்டாண்டையும் தனியே 3,000 கொடுத்து வாங்க வேண்டுமாம். இது ஒன்ப்ளஸ் Q1 டி.வியில் இது ஒரு முக்கிய மைனஸ். 3,000 ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு டி.வி ஸ்டாண்டு தரமாக இருக்கிறதா என்றால் ஆம் என்று சொல்லலாம். மனிதன் முதுகெலும்பைப் போல டி.வி ஸ்டாண்டை டிசைன் செய்துள்ளனர். ஆனால், லேசான அதிர்வுகள் ஏற்பட்டாலும் மொத்த டி.வியும் ஆடுகிறது எனச் சிலர் புகார் வைத்திருக்கின்றனர், நாங்கள் வால்மவுன்ட்தான் செய்திருக்கிறோம் என்பதால் இதை உறுதிப்படுத்தமுடியவில்லை. ஆனால், அவ்வப்போது சற்றே சூடாவதைப் பார்க்கமுடிகிறது.

ரிமோட்

ரிமோட்
ரிமோட்

மிகவும் ஸ்லீக்கான டிசைனில் ஒரு ரிமோட் கொடுக்கப்படுகிறது. இதை பேட்டரி போடாமல் சார்ஜ் செய்து மொபைல் போன் போல உபயோகிக்கலாம். அதுவும் 2 மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும் ஒரு வாரத்துக்கும் மேல் உபயோகிக்க முடிகிறது. ஆனால் இதன் டிசைனில் சில குளறுபடிகள் இருக்கவே செய்கிறது. ரிமோட்டின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் சிலநேரங்களில் கைகளிலிருந்து வழுக்கிவிடுகிறது. மொபைல்களை போல டி.வியின் வால்யூம் பட்டன் ரிமோட்டின் ஓரத்தில் இருப்பதால் சட்டென வால்யூமை குறைப்பதில் சிக்கல் இருக்கிறது, போகப்போகத்தான் பழகும் போல! தனியாக மியூட் பட்டனும் கொடுக்கப்படவில்லை. உங்களிடம் ஆண்ட்ராய்டு மொபைல் இருந்தால் ஒன்ப்ளஸ் கனெக்ட் ஆப் மூலம் டிவியோடு கனெக்ட் செய்து சுலபமாக மொபைலை ரிமோட்டாக உபயோகிக்கலாம். உங்களிடம் ஐபோன்தான் இருக்கிறது என்றால் சிக்கல்தான்.

இதுதான் எங்க செட்-அப்!

ஒன்ப்ளஸ் Q1 டிவி செட்-அப்!
ஒன்ப்ளஸ் Q1 டிவி செட்-அப்!

10x10 அறை, டிவியை வால்மவுன்ட் செய்துவிட்டோம். 4 HDMI போர்ட்களில் கேமிங் கம்ப்யூட்டர், சோனி HT-IV300 ஹோம் தியேட்டர் (ARC HDMI போர்ட்டில்), ப்ளேஸ்டேஷன் (PS4 pro) போன்றவற்றை கனெக்ட் செய்தோம். இதுவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல் நல்ல முறையில் இயங்கி வருகிறது.

ப்ளஸ்

* விலை

* தரமான QLED டிஸ்ப்ளே

* HDR+, Dolby Atmos, Dolby Vision சப்போர்ட்

* சார்ஜ் செய்யக்கூடிய ரிமோட்

மைனஸ்

* நெட்ஃப்ளிக்ஸ் இதுவரை தரப்படவில்லை

* போர்ட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்

* ஸ்டாண்டு தனியாக வாங்க வேண்டும்

இறுதிக்கருத்து

ப்ரீமியம் டிவிகளில் கிடைக்கும் ரிச்சான விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும். ஆனால், லட்சம் ரூபாய்க்கு மேல் டிவிக்குச் செலவு செய்யமுடியாது என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ். ஓரளவு குறைந்த பட்ஜெட்டில் உங்கள் வீட்டிலேயே நல்ல ஹோம் தியேட்டருடன் மினி பர்சனல் தியேட்டர் கட்டமைக்க நினைப்பவர்களின் தோழன் இந்த 'ஒன்ப்ளஸ் Q1 டி.வி'.

பின் செல்ல