திடீரென, உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துபோனால் என்ன செய்வீர்கள்? மொபைலைத் தொலைப்பது ஸ்மார்ட்டான விஷயம் கிடையாது என்பது சரிதான். ஒருவேளை திருடன் நம்மைவிட ஸ்மார்ட்டாக இருந்து திருடிவிட்டால் என்ன செய்வது? மொபைலுக்கு கால் செய்து பார்ப்போம். அவ்வளவுதான் நம்மால் முடியும்.
மொபைல் திருடுபோவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கழுத்திலிருக்கும் நகைகளைப் பறிப்பதைவிட, காதில் வைத்துப் பேசிக்கொண்டிருக்கும் மொபைலைப் பறிப்பது இரு சக்கர வாகனத்தில் வரும் திருடருக்கு எளிதான ஒன்று. மொபைல் விலையும் லட்சங்களைத் தாண்டிச் செல்வதாலும் திருட்டு அதிகரித்திருக் கிறது. திருடிய மொபைல்களை டிராக் செய்து, அதை முற்றிலுமாகச் செயலிழக்கும் தொழில்நுட்பத்தை கடந்த இரண்டாண்டுகளாக அரசு உருவாக்கி வந்தது. இப்போது அத்தொழில் நுட்பம் தயார். அடுத்த மாதம் செயல் பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும். திருட்டைத் தடுப்பதற்கு மொபைல் உரிமையாளரான நாம் எப்படித் தயாராவது?

ஸ்மார்ட்போனை எப்போதும் பேட்டர்ன் அல்லது பின் நம்பர் போட்டு லாக் செய்து வைக்கவும். இப்போது வரும் பெரும்பாலான மொபைல்களில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் இருப்பதால் அதையும் வைத்துக்கொள்ளலாம். மேலும், வங்கியின் செயலிகள், மொபைல் வாலெட் போன்ற செயலிகளுக்குத் தனியே பேட்டர்ன் லாக் போட்டு வைக்கலாம். மாதம் ஒருமுறை கேலரியில் இருக்கும் படங்களை பேக்கப் எடுத்துக்கொண்டு ரொம்ப பர்சனலான படங்களை அழித்துவிடலாம். இவை யெல்லாம் செய்யாமலே மொபைல் தொலைந்துபோனால் என்ன செய்வது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மொபைல் காணாமல்போனாலே அது திருடர்களின் கைவரிசையாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாமே எங்கேயாவது மறந்துபோய் வைத்திருக்கலாம். மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கண்டுபிடிப்பது இன்னும் சிரமம். இதற்குத் தீர்விருக்கிறது. அதுதான் Android device Manager.

முதலில் உங்கள் மொபைலில் இந்தப் பகுதிக்குச் செல்லுங்கள்.
Settings > Security & Lock screen > Device admin apps.
இதில் Find my device ஆப்ஷன் ஆன் ஆகியிருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளவும். இல்லையேல் ஆன் செய்துவிடவும். இப்போது https://www.google.com/android/devicemanager என்ற லிங்குக்கு பிரவுசர் மூலம் போகவும். அதில் இடது பக்கம் ‘Play Sound’ என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் உங்கள் மொபைல் சைலன்ட்டில் இருந்தாலும் ஒலிக்கும். அதை வைத்து மொபைல் இருக்கும் இடத்தைக் கண்டறியலாம்.

ஒரு வேளை நம் மொபைல் திருடப் பட்டிருந்தால் மொபைலில் இருக்கும் டேட்டாவை இந்தப் பக்கத்தின் வழியே அழிக்க முடியும். இதன் மூலம் நம் மொபைலில் இருக்கும் பர்சனல் தகவல்களை அழிக்க முடியும். ஒருவேளை நம் மொபைல் லாக் செய்யாமல் இருந்தால், மொபைலில் சேமிக்கப் பட்டிருக்கும் பாஸ்வேர்டுகளைக் கடந்து திருடர்கள் எதையும் செய்யலாம். பர்சனல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைத் தவறாகப் பயன்படுத் தலாம். வங்கிப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ளலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க அந்த மொபைலில் இருக்கும் அத்தனை டேட்டாக்களையும் அழிப்பதே தீர்வு. அதற்கு, Device Manager பக்கத்தில் இருக்கும் `Erase Device’ க்ளிக் செய்தால் போதும். மொபைல் கிடைக்காவிட்டாலும் அதைவிட முக்கியமான டேட்டா திருடுபோகாமல் காப்பாற்றப்படலாம்.
Android Device manager பக்கத்தில் இருக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் Secure device. நம் மொபைல் லாக் ஆகாமல் இருந்தால் இதன் மூலம் லாக் செய்ய முடியும். அதே நேரம் அனைத்து கூகுள் சேவைகளிலிருந்தும் லாக் ஆஃப் ஆகிவிடும். மேலும், மொபைல் யார் கையில் கிடைக்கிறதோ அவருக்கு மெசேஜும் அனுப்ப முடியும். அதில் இன்னொரு மொபைல் நம்பரைக் குறிப்பிட்டு அந்த எண்ணுக்கு அழைக்கவும் என்ற செய்தியையும் சொல்ல முடியும். ஒருவேளை மொபைல் நல்லவர் கையில் கிடைத்தால் இந்த வசதி உதவக்கூடும். திருடர்கள் கையில் கிடைத்தால், ஒரு மெசேஜ் வீண். இவை அனைத்தும் உங்கள் மொபைலில் இணையம் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

விபத்துகளும், பொருள்களைத் தொலைப்பதும் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள். அது நடப்பதால் நாம் ஸ்மார்ட் இல்லை என்றாகிவிடாது. ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கவோ தவிர்க்கவோ வழியிருந்தும் அதைச் செய்யாமல் வைத்திருந்தால் நாம் நிச்சயம் ஸ்மார்ட் கிடையாது.
- ஸ்மார்ட் ஆவோம்.