Published:Updated:

ஆன்லைன்... ஆஃப்லைன் - 12

புது மொபைல் வாங்கப் போகிறோம் என்றதும் நமக்கு எழும் முக்கியமான கேள்வி, “பழைய மொபைலை என்ன செய்வது?”

பிரீமியம் ஸ்டோரி

மொபைல் பயனற்றுப் போனபின் புதிய மொபைல் வாங்கலாம் என நினைப்பவர்கள் சிலர். பெரும்பாலும் தம் கையிலிருக்கும் மொபைல் நல்ல நிலையிலிருக்கும்போதே அடுத்த மொபைலுக்குத் தாவிவிடுபவர்களும் உண்டு. அல்லது, மொபைலின் ஏதேனும் ஒரு பாகம் பிரச்னை என்றாலே மொபைலை மாற்றிவிடுபவர்களும் உண்டு. அப்படியென்றால் பழைய மொபைல்? அதை எக்சேஞ்சிலோ அல்லது செகண்டு ஹேண்டிலோ விற்றுவிடுகிறோம். மிக அரிதாகத்தான் எக்ஸ்சேஞ்சில் நல்ல விலைக்குப் போகும். அப்படி விற்காமல் வீட்டில் வைத்திருந்தாலும் அதனால் பயனில்லை என்றே நினைக்கிறோம். ஆனால், அந்த மொபைல்களை ஸ்மார்ட் ஆகப் பயன்படுத்த நிறைய வழிகள் உண்டு.

சில மொபைல்களில் பேசும் போது சரியாகக் கேட்காது. ஸ்பீக்கரில் பிரச்னை ஏற்பட்டி ருக்கலாம். அந்த ஒரு காரணத்தால் அதை நாம் பயன்படுத்தாமல் வைத்தி ருப்போம். அந்த மாதிரி மொபைல்களை சி.சி.டி.வி கேமரா போலப் பயன் படுத்தலாம். இதற்காகவே பல இலவசச் செயலிகள் கிடைக்கின்றன. அதன் மூலம் நம் மொபைலை சி.சி.டி.வி கேமரவாக மாற்றிவிடலாம். வீட்டிற்கும் பாதுகாப்பு பலமாகும்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கண்காணிக்கவும் பழைய மொபைல்களைப் பயன் படுத்தலாம். இதற்காகவும் ஆப் ஸ்டோரில் நிறைய Baby monitor apps கிடைக்கின்றன. கிச்சனில் வேலை செய்யும் போதும் குழந்தைகள் என்ன செய்கின்றன என்பதைப் பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவேளை, கேமரா இயங்காமல்போனால் அந்த மொபைல்களை என்ன செய்வது?

கொஞ்சம் பெரிய திரை கொண்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்களாக இருந்தால் அவற்றை டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்களாகப் பயன்படுத்தலாம். இதற்கும் பல செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் சில புகைப்படங்களைத் தேர்ந் தெடுத்து, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை படங்கள் மாறும்படி செய்து கொள்ளலாம்.

ஆன்லைன்... ஆஃப்லைன் - 12

அதிகம் பயணம் செய்பவர்கள் என்றால் ஜி.பி.எஸ் அவசியம் தேவைப்படும். கையிலிருக்கும் மொபை லிலேயே ஜி.பி.எஸ் இருக்கு மென்றாலும் ஜி.பி.எஸ் அதிக சார்ஜை எடுத்துக்கொள்ளும். மேலும், வாகனம் ஓட்டும்போது அழைப்பு வந்து ஜி.பி.எஸ் சேவைக்கு இடையூறு செய்யலாம். வீட்டிலிருக்கும் பழைய மொபைலை ஜி.பி.எஸ்ஸுக்கென நேர்ந்து விட்டால் அதை ஆஃப் லைனிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டரி பிரச்னையும் இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பயணம் செய்யும்போது இ-புத்தகங்கள் படிக்க பழைய மொபைல்களைப் பயன் படுத்திக்கொள்ளலாம். காரில் பயணம் செய்யும்போது பாடல்களுக்கென யு.எஸ்.பி ஒன்று வைத்திருப்போம். ஆனால் அதில் பாடல்கள் மற்றும் ஃபோல்டர்களை மாற்றுவது சிரமம். பாடல் களுக்காகவே ஒரு மொபைலை வைத்துவிட்டால் அதைப் பயன்படுத்துவதும் எளிது. நல்ல மியூஸிக் ப்ளேயர் ஆப் மூலம் இசைத்தரத்தையும் கூட்டலாம். பேட்டரி பிரச்னையும் இருக்காது. மேலும், கூகுள் அஸிஸ்டென்ட் போன்ற வாய்ஸ் அஸிஸ்டென்ட் உதவியுடன் குரல் மூலமே பாடல்களை மாற்றலாம்.

சில மொபைல்களில் ஸ்க்ரீன் பிரச்னை இருக்கலாம். திரையை மட்டுமே மாற்றுவது அதிக செலவு என்பதால் அந்த மொபைலைப் பயன் படுத்தாமல் வைத்திருக்கலாம். அந்த மாதிரி மொபைல்களை வாய்ஸ் ரெக்கார்டராகப் பயன்படுத்தலாம்.

மெமரி பிரச்னை காரணமாக நிறைய கேம்களை இன்ஸ்டால் செய்யாமல் வைத்திருப்போம். பழைய மொபைலை கேமிங்கிற்கு என ஒதுக்கிவிட்டால் அதில் மற்ற ஃபைல்கள் எதுவும் சேமிக்காமல் நிறைய கேம்களை மட்டுமே இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

நம் வீட்டில் அதிகம் உடையும் ஒரு பொருள் ரிமோட் கன்ட்ரோலர்தான். பழைய மொபைல்களை ஏ.சி, தொலைக்காட்சி போன்ற எலக்ட்ரானிக் பொருள் களுக்கான ரிமோட்டாகவும் மாற்றிப் பயன்படுத்தலாம்.

எல்லாமே நன்றாக இருக்கின்றன. ஆனால், புது மொபைல் வந்துவிட்ட தென்றால் அதை எக்ஸ்சேஞ்சில் போட்டுவிடுவதே நல்லது. மின்னணுப் பொருள்களைப் பயன்படுத்தாமல், சார்ஜ் போடாமல் நீண்ட நாள்கள் வைத்திருந்தால் அவை நாளடைவில் யாருக்குமே பயனற்றதாகப் போய்விடும்.

மொபைல் என்றாலே பேசத்தானே என்பது ஆதாம் காலத்து வாதம். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்குள்ளும் நூற்றுக்கணக்கான கேட்ஜெட்கள் ஒளிந்திருக் கின்றன. அதை ஸ்மார்ட் ஆகப் பயன்படுத்துவது நம் கையில்தானிருக்கிறது.

- ஸ்மார்ட் ஆவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு