Published:Updated:

FaceApp சேட்டையெல்லாம் ஓகேதான்; ஆனால், இதையும் தெரிஞ்சுக்கோங்க... பிரைவசி அலெர்ட்!

FaceApp பயன்படுத்துவதில் பிரைவசி ஆபத்து இருக்கிறதா, இல்லையா? பயன்படுத்தலாமா, கூடாதா? FaceApp தரப்பில் கூறப்படுவது என்ன?

FaceApp குறித்த பிரைவசி அலர்ட்!
FaceApp குறித்த பிரைவசி அலர்ட்!

கடந்த சில நாள்களில் சமூக வலைதளங்கள் ஏதேனும் ஒன்றுக்கு சென்றிருந்தால் கூட போதும், ஃபேஸ்ஆப்பில் உருவாக்கப்பட்ட மக்களின் வயதான புகைப்படங்களை நீங்கள் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். பாமர மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்கவில்லை இந்தப் புதிய ட்ரெண்ட். இதன் விளைவாக ஆப்பிள், கூகுள் ஆப் ஸ்டோர்களில் கடந்த வாரம் உலக அளவில் அதிகம் டவுன்லோடுகளை பெற்று தற்போது நம்பர் ஒன் இடத்தில இருப்பது ரஷ்ய ஸ்டார்ட்அப்பான இந்த ஃபேஸ்ஆப்தான். தற்போது அடித்திருக்கும் ஹிட்டால் இந்த ஜாலி ஆப்பிற்கு பின் பெரிய பிரைவசி ஆபத்து இருக்கலாம் என்ற விவாதங்கள் உலகம் முழுவதும் வெடிக்கத் தொடங்கியுள்ளன. உண்மையில் இந்த ஆப்பை பயன்படுத்துவது ஆபத்தானதுதானா?

முதலில் இந்த ஆப் என்ன செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த ஆப்பில் நாம் மாற்றங்கள் செய்யவேண்டும் என நாம் நினைக்கும் போட்டோக்களை நாம் தேர்வு செய்கிறோம். அதை இந்த ஆப் அவர்களது சர்வருக்கு அப்லோடு செய்கிறது. அங்கு செயற்கை நுண்ணறிவு வயதாக்குதலோ, இளமையாக்குதலோ... நீங்கள் எந்த ஃபில்டரை தேர்ந்தெடுக்கிறீர்களோ அதை அந்தப் புகைப்படத்தில் செயல்படுத்திவிடும் இது. பின்பு அதை நீங்கள் உங்கள் மொபைலில் பதிவிறக்கிக்கொள்ளலாம். 2017-ல் வெளியாகி அப்போது ட்ரெண்ட் ஆனது முதலே இதே முறையில்தான் இயங்கிவருகிறது ஃபேஸ்ஆப்.

இதில் என்ன பிரச்னை இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். ஃபேஸ்ஆப்பின் பிரைவசி பாலிசியில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் விஷயம்தான் இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணம்.

“You grant FaceApp a perpetual, irrevocable, nonexclusive, royalty-free, worldwide, fully-paid, transferable sub-licensable license to use, reproduce, modify, adapt, publish, translate, create derivative works from, distribute, publicly perform and display your User Content and any name, username or likeness provided in connection with your User Content in all media formats and channels now known or later developed, without compensation to you.”

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்களை எப்படியும் ஃபேஸ்ஆப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்றே இது குறிப்பிடுகிறது. புகைப்படங்களை சர்வருக்கு அப்லோடு செய்யாமலேயே இந்த சேவையை ஃபேஸ்ஆப்பால் தரமுடியுமே என்பதுதான் முக்கிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஃபேஸ்ஆப் காரணமாகச் சொல்வது இந்த ஃபில்டர்களை சரியாக பிசிறில்லாமல் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதற்கு நிச்சயம் கிளவுட் தேவைப்படும் என்பதையே. கிட்டத்தட்ட பதிவேற்றப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் 48 மணிநேரங்களுக்குள் அழித்துவிடுவோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் சர்வரிலிருந்து உடனே நீக்கவேண்டுமென்றால் Settings-> Support-> Report a bug சென்று subject-ல் 'Privacy' என்று குறிப்பிடுங்கள். ஏற்கெனவே பல விண்ணப்பங்கள் இப்படி குவிந்திருக்கின்றன. விரைவில் இந்த பிராசஸை எளிய UI மூலம் செயலுக்கு கொண்டுவரப்படும் என்கிறது ஃபேஸ்ஆப் தரப்பு.

அமெரிக்காவில் எழுந்த மேலும் ஒரு குற்றச்சாட்டு இதில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் ரஷ்ய டேட்டா சென்டர்களில் சேமிக்கப்படுகின்றன என்பது. ஃபேஸ்ஆப்பின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி குழு ரஷ்யாவில் செயல்பட்டாலும் இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது ஃபேஸ்ஆப். AWS(Amazon Web Services), கூகுள் கிளவுட் போன்ற அமெரிக்க சேவைகளைத்தான் தாங்களே பயன்படுத்துவதாக அவர்கள் இதற்கு விளக்கமளித்துள்ளனர். எந்த ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனத்திற்கும் தகவல்கள் விற்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

faceapp
faceapp

லாக் இன் செய்யாமலேயே எங்கள் சேவையை ஒருவரால் பயன்படுத்தமுடியும். 99% சதவிகித மக்கள் அப்படியே எங்கள் சேவையைப் பயன்படுத்துகின்றனர். எனவே புகைப்படம் ஒன்றை பதிவேற்றும் நபரை பற்றிய தகவல்களே தங்களிடம் இருக்காது என்ற வாதத்தையும் அதன் தரப்பில் வைக்கிறது ஃபேஸ்ஆப்.

மற்றொரு பிரச்னையாகக் கூறப்பட்டது ஒரு போட்டோவிற்கு பதிலாக மொத்த போட்டோ ஆல்பத்தையே ஃபேஸ்ஆப் பதிவேற்றுகிறது என்பது. இதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளது ஃபேஸ்ஆப். இதுகுறித்து டெக் ஆர்வலர்கள் சிலர் நடத்திய சோதனைகளிலும் பாஸ் ஆகிறது. எனவே இது நடக்கவில்லை என நம்பலாம்.

விஜய், அஜித், விராட் கோலி... வயசானாலும் கெத்தாதான் இருக்காய்ங்க! #FaceAppAttrocities

மொத்தமாகப் பார்த்தால் ஃபேஸ்ஆப் புதிதாக எதுவும் செய்துவிடுவதில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆப்கள் என்ன செய்கின்றனவோ அதையே செய்கிறது. இது சாதாரண கொடுத்தல் வாங்குதல் கணக்குதான். நமக்கு வயதானால் எப்படி இருக்கும், தாடி வைத்தால் எப்படி இருக்கும் எனப் பார்க்கவிரும்பினால் ஒரு சேவையிடம் அந்தப் புகைப்படத்தை கொடுத்துத்தான் ஆகவேண்டும். சீன, அமெரிக்க ஆப்களும் இதையே செய்திருக்கின்றன. அவற்றுக்கும் அந்த அனுமதியை நாம் தரவே செய்கிறோம். ஆனால் இப்போது ட்ரெண்ட் ஆகியுள்ளதால் ஃபேஸ்ஆப் பக்கம் வெளிச்சம் திரும்பியிருக்கிறது, அவ்வளவே. அதே சமயம், ஆப் பிரைவசி குறித்து இது கிளம்பியிருக்கும் இந்த விவாதமும் மிக முக்கியமானதுதான். தெரியாத ஒரு சேவையிடம் இது போன்று தகவல்களைத் தருவதற்கு முன்பு அதைவைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதும் அவசியம்தானே!