Published:Updated:

`வெளியான அன்றே வீட்டில் திரைப்படம்!' - ஜியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் PVR, ஐநாக்ஸ்

ம.காசி விஸ்வநாதன்

ஜியோவின் இந்த அதிரடி அறிவிப்பால் பிரபல மல்டிஃப்ளெக்ஸ் நிறுவனங்களான PVR மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு நேற்று வீழ்ச்சியைக் கண்டது!

ஜியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் PVR, ஐநாக்ஸ்
ஜியோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் PVR, ஐநாக்ஸ்

ஜியோ அதன் அடுத்த அதிரடியை நேற்று அறிவித்தது. ஜியோ ஜிகா ஃபைபர் என்று பெயரிடப்பட்ட ஜியோவின் புதிய பிராட்பேண்ட் சேவை குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (Annual General Meeting) அறிவித்தார், முகேஷ் அம்பானி.

ஜியோ FDFS
ஜியோ FDFS

நீண்டகால சேவைகளைப் (Jio Forever Plan) பெறுபவர்களுக்கு இலவச 4K LED டிவி, 4K செட்-அப் பாக்ஸ். இந்த செட்-அப் பாக்ஸில் கிடைக்கும் டிஜிட்டல் டிவி, கிளவுட் கேமிங் சேவைகள் எனப் பல விஷயங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இதில் அதிக கவனம் ஈர்த்தது Jio FDFS தான். திரைப்படங்கள் வெளியாகும் அன்றே அதை விலைகொடுத்துப் பார்க்கும் Jio FDFS பற்றியும் அறிமுகம் கொடுத்தார் முகேஷ் அம்பானி. இது எப்படி செயல்பாட்டுக்கு வரும் எனத் தெளிவான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இதைப்பற்றிய தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த அறிவிப்பால் பிரபல மல்டிஃப்ளெக்ஸ் நிறுவனங்களான PVR மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு நேற்று வீழ்ச்சியைக் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் ரூபாய் 1,422.60 விலையிலிருந்த PVR பங்குகளின் விலை நேற்று மதியம் ரூபாய் 1,345.25-க்கு குறைந்தது. ஐநாக்ஸ் பங்குகளின் விலை ரூபாய் 293.10-லிருந்து ரூபாய் 271.00-க்கு குறைந்தது.

ஜியோவின் இந்த அறிவிப்புக்கு இரண்டு நிறுவனங்களுமே பதிலளிக்கும் விதமாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதில் PVR, ``பொழுதுபோக்குத் துறையில் மட்டும் 17,450 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியதாக FICCI அறிக்கை தெரிவிக்கிறது. இதில் சுமார் 75% திரையரங்கங்களிலிருந்தே வருகின்றன. திரையரங்கங்களின் வளர்ச்சி அடுத்த வருடங்களில் இன்னும் அதிகமாகவே இருக்கும் என கணிக்கிறோம். இப்போது இந்தியாவில் திரையரங்க வெளியீட்டுக்கும், ஸ்ட்ரீமிங் தள வெளியீட்டுக்கும் போதுமான இடைவெளி விடுகின்றனர். திரையரங்கத்தில் படம் பார்ப்பதும் வீட்டில் படம் பார்ப்பதும் என்றும் ஒன்றாகிவிடாது. இந்த வணிகமுறைதான் இந்தியா மட்டுமல்லாமல் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களில் கடும்போட்டிபோடும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பா போன்ற இடங்களிலும் நல்ல வெற்றியையும் வருமானத்தையும் ஈட்டித் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

PVR அறிக்கை
PVR அறிக்கை

ஐநாக்ஸும் திரையரங்கங்களில் எக்ஸ்க்ளூசிவ்வாக படங்கள் வெளியிடுவது ஏன் முக்கியம் என்று அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ``இன்று திரையரங்குகள் பலவும் மக்கள் உலகத் தரத்தில் சினிமா பார்க்க புதுப் புது தொழில்நுட்பங்களில் பெரும் முதலீடு செய்துள்ளன. இந்த மேம்பட்ட திரையரங்குகளில் கிடைக்கும் அனுபவம் என்றும் டிவி-யில் கிடைக்காது" எனக் கூறியுள்ளது. மொபைல் நெட்வொர்க் சேவைகளை தலைகீழாக புரட்டிப்போட்ட ஜியோ, இதில் என்ன செய்யக் காத்திருக்கிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.