Published:Updated:

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் ரியல்மீ... புதிய அறிமுகங்களில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions

ரியல்மீ
ரியல்மீ

ஷாவ்மியின் மாற்றாக ஸ்மார்ட்போன் சந்தையில் பெயரெடுத்த ரியல்மீ ஸ்மார்ட் டிவி பிரிவிலும் அதையே செய்ய நினைக்கிறது.

`இரண்டே ஆண்டுகள்... சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்கள்!'

சமீபத்தில் ரியல்மீ நிறுவனம் இதை அறிவிக்கும்போது பெரிய ஆச்சர்யம் எல்லாம் ஏற்படவில்லை. `தெரிஞ்சதுதானே?' என அதை எளிதில் கடக்க முடிந்தது. காரணம், ரியல்மீ பயன்படுத்துபவர்களின் பரபரவென உயர்ந்திருப்பதை நம்மைச் சுற்றியிருப்பவர்களைக் கவனித்தாலே தெளிவாகப் புரியும்.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் விலைதான். முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டதுபோல `இந்தியாவில் விலைதான் ராஜா!'. குறைந்த விலையில் தரமான, நிறைவான தயாரிப்புகளை தரும் எந்த பிராண்ட்டும் விரைவில் உச்சத்தை எட்டும். அப்படிதான் பெரிய நிறுவனங்களையெல்லாம் ஓரம்கட்டி இங்கு சாதித்து நிற்கிறது ஷாவ்மி. கிட்டத்தட்ட அதே பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது ரியல்மீ.

ஸ்மார்ட்போன்களை தாண்டி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் என புதிய ஏரியாக்களிலும் தடம் பதிக்கப் பல காலமாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தது ரியல்மீ. இறுதியாக நேற்று அவற்றை அறிமுகம் செய்தது அந்த நிறுவனம். இந்தப் புதிய ஆட்டத்துக்கு ரியல்மீ தயாராக இருக்கிறதா... ஒவ்வொரு தயாரிப்பாக அலசுவோம்.
ரியல்மீ வாட்ச்
Realme Watch

தூரத்திலிருந்து பார்த்தால் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இதுதான் ரியல்மீயின் முதல் ஸ்மார்ட்வாட்ச். 1.4 இன்ச் கலர் டச் டிஸ்ப்ளேவுடன் (320x320 pixels) 2.5 D கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, இதயத்துடிப்பு சென்ஸார், SpO2 சென்ஸார் (Blood-Oxygen Monitor), ப்ளூடூத் 5.0 ஆகிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகியிருக்கிறது ரியல்மீ வாட்ச். சில மாதங்களுக்கு முன்தான் ரியல்மீ அதன் முதல் ஃபிட்னஸ் பேண்ட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த வாட்ச் கிட்டத்தட்ட அதன் நீட்சியாகவே இருக்கிறது. இதயத்துடிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்பு, 14 ஸ்போர்ட்ஸ் மோடு டிராக்கிங், நோட்டிஃபிகேஷன் அலர்ட் எனக் கிட்டத்தட்ட அதில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கின்றன. டிஸ்ப்ளேவும் SpO2 சென்ஸாரும் மட்டும்தான் பெரிய அப்கிரேட்கள். ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தொடங்கி ஜிமெயில் வரை முக்கிய ஆப்களுக்கு ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்ஸ் சப்போர்ட், மியூசிக் கன்ட்ரோல்ஸ், ரிமோட் கேமரா ஷட்டர் என பிற வசதிகளும் இதில் இருக்கின்றன. IP68 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கும் உள்ளதால் தண்ணீர் மற்றும் தூசு வாட்ச்சைப் பாதிக்காது.

ரியல்மீ வாட்ச்
ரியல்மீ வாட்ச்

இந்த வசதிகள் இருந்தாலும் இதில் இன்பில்ட் மைக் கிடையாது. இதனால் அழைப்புகளை இதில் பேச முடியாது. இதில் தனியாக ஆப்களும் இன்ஸ்டால் செய்ய முடியாது. இதனால் இதை ஸ்மார்ட் வாட்ச் என்று சொல்வதைவிட `பிட்னஸ் வாட்ச்' எனச் சொல்வதே சரியாக இருக்கும். பிரபல Amazfit bip சீரிஸ் வாட்ச்களுக்கு இது போட்டியாக அமையும்.

இதிலிருக்கும் 160mAh பேட்டரி ஒரு சார்ஜில் தொடர்ச்சியான இதயத்துடிப்பு கண்காணிப்பு இல்லாமல் 9 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் எனக் கூறுகிறது ரியல்மீ.

விலை: 3,999 ரூபாய்

வசதிகளுக்கு ஏற்ற சரியான விலைதான். இதற்குப் பல வண்ணங்களில் ஸ்ட்ராப்களும் விரைவில் கிடைக்கும் என ரியல்மீ தரப்பு தெரிவித்திருக்கிறது. அவை 499 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும். ஜூன் 5 முதல் இந்த வாட்ச் ரியல்மீ இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் கிடைக்கும்.

ரியல்மீ டிவி
Realme TV

இதுவும் ரியல்மீக்கு புது களம்தான். சமீபகாலமாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பலவும் களம் காணும் இந்த ஸ்மார்ட் டிவி பிரிவில் ஷாவ்மிதான் முன்னோடி. அறிமுகமாகி இரண்டே வருடங்களுக்குள் இந்தியாவில் கணிசமான மார்க்கெட் ஷேரை பெற்றிருக்கின்றன அதன் Mi டிவிகள். ஷாவ்மியின் மாற்றாக ஸ்மார்ட்போன் சந்தையில் பெயரெடுத்த ரியல்மீ ஸ்மார்ட் டிவி பிரிவிலும் அதையே செய்ய நினைக்கிறது.

அதன் முதல் கட்டமாகத்தான் நேற்று 32 இன்ச் HD-ready டிவி, 43-inch Full HD டிவி என இரண்டு பட்ஜெட் டிவிகளை ரியல்மீ அறிமுகப்படுத்தியிருக்கிறது. இரண்டுமே 178-degree viewing angle, அதிகபட்சமாக 400nits ப்ரைட்னெஸ் டிஸ்ப்ளேவுடனும் Quad-core MediaTek MSD6683 ப்ராசஸர், 1GB RAM, 8GB இன்டர்னெல் ஸ்டோரேஜுடனும் வருகின்றன.

ரியல்மீ டிவி
ரியல்மீ டிவி

இந்த புராசஸர் இன்றைய சராசரி பட்ஜெட் டிவிகளிலிருப்பதைவிட சற்றே மேம்பட்டது என்பதால் HDR10, HLG சப்போர்ட் இவற்றில் இருக்கும். 24 W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோ சப்போர்ட்டும் இவற்றில் உண்டு. ஆண்ட்ராய்டு டிவி என்பதால் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் குரோம்கேஸ்ட் சப்போர்ட்டும் இன்பில்ட்டாக இவற்றில் இருக்கும்.

ப்ளூடூத் 5.0, மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், SPDIF இன்புட் போர்ட் ஆகிய கனெக்ட்டிவிட்டி வசதிகள் இதில் இருக்கின்றன. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ எனக் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஆப்களுக்குமே சப்போர்ட் இருக்கிறது.

32 இன்ச் - 12,999 ரூபாய்
43-inch - 21,999 ரூபாய்

கிட்டத்தட்ட Mi டிவிகளின் விலைதான். வசதிகளிலும் பெரிய குறைகள் இல்லை. ஆனால், ரியல்மீக்கு இது முதல் டிவி என்பதால் சர்வீஸ் தொடங்கி தரம் வரை எப்படியிருக்கிறது எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஜூன் 2 இந்த டிவிகள் ரியல்மீ இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வரும்.

ரியல்மீ பட்ஸ் ஏர் நியோ!
Realme buds air neo

ரியல்மீயிடமிருந்து வெளிவரும் இரண்டாவது TWS (Truely Wireless) இயர்போன்ஸ் இது. ஆப்பிள் ஏர்பாட்ஸ் போன்ற வடிவமைப்புடன் ஏற்கெனவே வெளிவந்திருந்த ரியல்மீ பட்ஸ் ஏர் மாடலின் பட்ஜெட் வெர்ஷன்தான் இந்த ரியல்மீ பட்ஸ் ஏர் நியோ. குறைந்த விலை, அதிலிருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் மிஸ்ஸிங்.

ரியல்மீ பட்ஸ் ஏர் நியோ!
ரியல்மீ பட்ஸ் ஏர் நியோ!

பெரிய 13 mm bass boost ட்ரைவர்ஸ், ப்ளூடூத் 5.0, Google Fast Pair சப்போர்ட் என மற்ற வசதிகளும் இதிலுண்டு. 119.2ms super-low latency இருப்பதால் பப்ஜி போன்ற கேம்கள் ஆடும்போது ஆடியோ வருவதில் பெரிய தாமதம் எதுவும் இருக்காது. மேலும், இந்த இயர்போன்ஸில் டச் சப்போர்ட் உண்டு என்பதால், அவற்றை டப் செய்வதன் மூலமே பாடல்கள் மாற்றுவது கூகுள் அசிஸ்டென்ட்டை அழைப்பது போன்ற செயல்களைச் செய்யலாம். ஒரு சார்ஜில் இந்த இயர்போன்ஸ் 3 மணிநேரம் வரை நீடிக்கும். இது மிகவும் குறைவுதான். ஆனால், உடன் வரும் கேஸில் எப்போது வேண்டுமானாலும் சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதனுடன் சுமார் 17 மணிநேரத்துக்கு இதில் பாடல்கள் கேட்க முடியும்.

சமீபத்தில் இது போன்ற புதிய TWS இயர்போன்ஸ் பலவும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. சமீபத்தில்கூட ஷாவ்மி ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆப்பிள்கூட ஒரு குறைந்த விலை ஏர்பாட்ஸை விரைவில் அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்ப்ளஸின் TWS இயர்போன்ஸ் ஜூலை அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டிக்கு நடுவில் ரியல்மீக்கு இருக்கப்போகும் அனுகூலம் அதன் குறைவான விலைதான்.

விலை: 2,999

வெள்ளை, பச்சை, சிவப்பு என மூன்று நிறங்களில் அறிமுகமாகும் இதில் வெள்ளை நிற வேரியன்ட் மட்டும் நேற்றே விற்பனைக்கு வந்தது.

ரியல்மீ பவர்பேங்க் 2
Realme Powerbank 2

இந்த பெரிய அறிமுகங்களிடையே இந்த பவர்பேங்க்கும் அறிமுகமானது. 10,000 mAh பேட்டரி கொண்ட இது இதற்கு முன் வந்த ரியல்மீ பவர்பேங்க் போல அல்லாமல் புதிய டிசைனில் வருகிறது. விலையும் அதைவிடக் குறைவுதான். இதில் 18W quick charge USB-A, USB-C என இரண்டு வகை போர்ட்களிலுமே கிடைக்கும். கறுப்பு, மஞ்சள் என இரண்டு நிறங்களில் இது வெளிவருகிறது.

ரியல்மீ பவர்பேங்க் 2
ரியல்மீ பவர்பேங்க் 2
விலை: 999 ரூபாய்

விரைவில் ரியல்மீயின் இன்னொரு பெரிய அறிமுகமும் இருக்கிறதாம். அது 100W சவுண்ட்பார். ஐந்து ஸ்பீக்கர் கொண்ட இந்த ஆடியோ சிஸ்டம் பற்றிய டீஸர் மட்டும் விட்ட ரியல்மீ, எப்போது வெளியாகும் என்ற சஸ்பென்ஸ் உடைக்கவில்லை!

ரியல்மீ சவுண்ட் பார்
ரியல்மீ சவுண்ட் பார்
ஷாவ்மி போல ஸ்மார்ட்போன் சந்தையைத் தாண்டி சாதிக்குமா ரியல்மீ, இந்த புதிய அறிமுகங்கள் உங்களைக் கவர்கின்றனவா? உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவுசெய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு