இரண்டு வருடங்களுக்கு முன், `ரியல்மீ 1' மொபைலுடன் இந்தியாவில் களமிறங்கியது. ஓப்போவின் சப்-பிராண்டாக அறிமுகமான ரியல்மீ, அதன் பின்னர் ஓப்போவிலிருந்து பிரிந்து தனி நிறுவனமானது. உலகம் முழுவதும் 27 நாடுகளில் விற்பனையாகும் ரியல்-மீ, தன் இரண்டாவது வருட நிறைவில் 3.5 கோடி பயனர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2.1 கோடி பயனர்களைப் பெற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மாதவ் ஷேத் கடந்த மாதம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
ரியல்மீ அறிமுகமானதில் இருந்தே ஷாவ்மி நிறுவனத்தின் நேரடி போட்டியாளராக கருதப்பட்டுவருகிறது. ஷாவ்மியின் மொபைல்களுக்குப் போட்டியாக ரியல்மீயின் மொபைல்கள் இருக்கின்றன. 2020-ன் முதல் காலாண்டில் மட்டும் 39 லட்சம் மொபைல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது ரியல்மீ. இதே காலத்தில் ஷாவ்மி விற்பனை செய்த மொபைல்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் மேல். எனினும் ரியல்மீ நிறுவனம் தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக மாறியிருக்கிறது. IDC-யின் (International Data center) அறிக்கைப்படி தற்போது இந்தியாவில் நம்பர் 1 மொபைல் பிராண்டாக ஷாவ்மியும், ஐந்தாம் இடத்தில் ரியல்மீயும் இருக்கிறது. இரண்டு மொபைல்களுமே பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ஜ் செக்மன்ட்டில் கடும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்த மாதங்களில் மட்டும் ரியல்மீ நிறுவனத்தின் பல மொபைல்கள் அறிமுகமாகியிருக்கின்றன. இந்தியாவின் முதல் 5G மொபைல் என்ற பெயரையும் அதன் Realme X50 Pro 5G மொபைலே தட்டிச் சென்றது. இந்தியாவின் ஜென் Z தலைமுறையை குறிவைத்து இந்த மொபைல் சீரிஸை உருவாக்கியிருக்கிறது ரியல்மீ. மிகவும் குறைவான விலையில் அதிக வசதிகளோடு இறங்கி அடிக்க வேண்டும் என கடந்த மே 11-ம் தேதி நார்ஸோ சீரிஸின் இரண்டு போன்களையும் வெளியிட்டது.

Narzo 10 மற்றும் Narzo 10A எனப் பெயரிடப்பட்ட இரண்டு மொபைல்களை 12,000 ரூபாய் மற்றும் 8,500 ரூபாய் என பட்ஜெட் செக்மன்ட்டில் வெளியிட்டுள்ளது. 4 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் வசதியுடன் நார்ஸோவும் 10-ம், 3 GB RAM + 32 GB ஸ்டோரேஜ் வசதியுடன் நார்ஸோவுடன் 10A-ம் வெளியாகியுள்ளன. மேலும் வரும் மே 25-ம் தேதி Blade Runner என்ற பெயரில் புதிய கேமிங் ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிடப்போவதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும், அதனுடன் சேர்த்து வயர்லெஸ் ஹெட்போன், பவர் பேங்க் உள்ளிட்ட ஏழு பொருள்களையும் வெளியிட இருக்கிறது ரியல்மீ.