Published:Updated:

பட்ஜெட் விலை, அசத்தல் பேட்டரி... எப்படி இருக்கிறது ரியல்மீ வாட்ச்? #VikatanGadgetReview

ரியல்மீ வாட்ச்

ரியல்மீ வாட்ச்

ஸ்மார்ட்போன்களைத் தாண்டி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் எனப் புதிய ஏரியாக்களிலும் தடம் பதிக்க பலகாலமாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தது ரியல்மீ. நினைத்ததை சாதித்திருக்கிறதா ரியல்மீ?

குறைந்த விலையில் தரமான, நிறைவான தயாரிப்புகளைத் தரும் எந்த பிராண்ட்டும் விரைவில் உச்சத்தை எட்டும். அதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டுதான் ரியல்மீ. இதற்கு முன்பு பெரிய நிறுவனங்களையெல்லாம் ஓரம்கட்டி இங்கு சாதித்து நின்றது ஷாவ்மி. இப்போது கிட்டத்தட்ட அதே பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது ரியல்மீ. ஸ்மார்ட்போன்களைத் தாண்டி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச் எனப் புதிய ஏரியாக்களிலும் தடம் பதிக்க பலகாலமாகத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தது ரியல்மீ. இறுதியாக ஸ்மார்ட்டிவி ஒன்றையும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றையும் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது ரியல்மீ.

அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் ரியல்மீ... புதிய அறிமுகங்களில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions
அறிமுகமாகும்போதே பலரது கவனத்தையும் ஈர்த்த ரியல்மீ வாட்ச் எப்படி இருக்கிறது? சில வார பயன்பாட்டுக்குப் பிறகான எங்கள் ரீவ்யூ இதோ.
ரியல்மீ வாட்ச்
ரியல்மீ வாட்ச்

முதலில் லுக் & ஃபீல் பற்றிப் பார்ப்போம். போனைவிடவும் இது போன்ற வியரபில் கேட்ஜெட்ஸுக்கு டிசைன் மிகவும் முக்கியம். பார்க்க அழகாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் நீடித்து உழைக்கும் பில்ட் குவாலிட்டியும் வேண்டும். இரண்டிலுமே `குட்' வாங்குகிறது ரியல்மீ வாட்ச். தூரத்திலிருந்து பார்த்தால் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது ரியல்மீ வாட்ச். இதனுடன் வரும் ஸ்ட்ராப்பும் அணிவதற்கு மிகவும் சௌகரியமாக இருக்கிறது. பில்ட்டும் ஓகே. 2.5 D கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

டிஸ்ப்ளே ஏரியா பார்க்க சற்றே பெரிதாக இருந்தாலும், உண்மையில் டிஸ்ப்ளே சிறியதுதான். 1 cm பெரிய பேஸல்ஸுடன் 1.4 இன்ச் கலர் டச் டிஸ்ப்ளே (320x320 pixels) கொடுத்திருக்கிறார்கள். கீழே மட்டும் லோகோ வைப்பதற்காக 2 cm பேஸல் கொடுத்திருக்கிறார்கள். இதனால் கிட்டத்தட்ட மொத்த ஏரியாவில் கால்வாசி பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. இது உறுத்தலாகத்தான் இருக்கிறது. மற்றபடி டிஸ்ப்ளே பிரைட்டாகவே இருக்கிறது. அதில் எந்தக் குறையுமில்லை.

ரியல்மீ வாட்ச்
ரியல்மீ வாட்ச்

இப்போது மற்ற வசதிகள் பற்றிப் பார்ப்போம். இதயத்துடிப்பு சென்ஸார், SpO2 சென்ஸார் (Blood-Oxygen Monitor) ஆகிய சென்சார்களுடன் வருகிறது ரியல்மீ வாட்ச். சில மாதங்களுக்கு முன்தான் ரியல்மீ அதன் முதல் ஃபிட்னஸ் பேண்ட்டை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த வாட்ச் கிட்டத்தட்ட அதன் நீட்சியாகவே இருக்கிறது. இதயத்துடிப்பு மற்றும் தூக்கக் கண்காணிப்பு, 14 ஸ்போர்ட்ஸ் மோடு டிராக்கிங், நோட்டிஃபிகேஷன் அலர்ட் எனக் கிட்டத்தட்ட அதில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் இருக்கின்றன. டிஸ்ப்ளேவும் SpO2 சென்ஸாரும் மட்டும்தான் பெரிய அப்கிரேட்கள். பயன்பாட்டில் அனைத்தும் நன்றாகச் செயல்பட்டன. ஆனால், பிட்னஸ் ட்ராக்கிங் துல்லியமாக இருக்கிறது எனச் சொல்ல முடியவில்லை. ஸ்லீப் ட்ராக்கிங் சரியாக இருக்கிறது. SpO2 சென்சார் நீங்களாக ஆன் செய்தால்தான் வேலைசெய்யும். ஆட்டோமாட்டிக்காக வேலை செய்யாது. வாட்ச்சில் கண்காணிக்கப்படும் தகவல்களை சிங்க் செய்ய ரியல்மீ லிங்க் ஆப்பை ஏற்ற வேண்டும். இந்த ஆப்பின் செயல்பாடுகளில் முன்னேற்றங்கள் இருக்கலாம்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் தொடங்கி ஜிமெயில் வரை முக்கிய ஆப்களுக்கு ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்ஸ் சப்போர்ட் இருக்கிறது. நோட்டிஃபிகேஷன்ஸுக்கு உங்களால் ரிப்ளை செய்ய முடியாது. மியூசிக் கன்ட்ரோல்ஸ், ரிமோட் கேமரா ஷட்டர் என பிற வசதிகளும் இதில் இருக்கின்றன. IP68 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கும் உள்ளதால் தண்ணீர் மற்றும் தூசு வாட்ச்சைப் பாதிக்காது. இந்த வசதிகள் இருந்தாலும் இதில் இன்பில்ட் மைக் கிடையாது. இதனால் அழைப்புகளை இதில் பேச முடியாது. இதில் தனியாக ஆப்களும் இன்ஸ்டால் செய்ய முடியாது. 6 வாட்ச் ஃபேஸ்கள் கொடுத்திருக்கிறார்கள், இன்னும் 6 ஃபேஸ்கள் ரியல்மீ லிங்க் ஆப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளலாம்.

இதிலிருக்கும் 160mAh பேட்டரி ஒரு சார்ஜில் தொடர்ச்சியான இதயத்துடிப்பு கண்காணிப்பு இல்லாமல் 9 நாள்கள் வரை தாக்குப்பிடிக்கும் எனக் கூறுகிறது ரியல்மீ. எங்கள் டெஸ்டிங்கில் இது ஏறத்தாழ சரியாகத்தான் இருந்தது. கொஞ்சம் ஒர்க்-அவுட், ஸ்லீப்பிங் ட்ராக்கிங் என பயன்படுத்தினால் எப்படியும் 6 - 7 நாள்கள் நிச்சயம் தாக்குப்பிடித்துவிடுகிறது இதன் பேட்டரி.

3,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது இந்த வாட்ச். வேறு நிற ஸ்ட்ராப்களை கூடுதலாக 499 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

ப்ளஸ்

  • நல்ல டிஸ்ப்ளே

  • பேட்டரி

  • விலை

மைனஸ்

  • பெரிய பேஸல்ஸ்

  • மைக் இல்லை

இறுதிக் கருத்து

இதை ஸ்மார்ட் வாட்ச் என்று சொல்வதைவிட `பிட்னஸ் வாட்ச்' எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஆனால், கொடுக்கும் விலைக்கு இது கொடுக்கும் வசதிகள் ஓகேதான். ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் ஆழம் பார்க்க ரியல்மீ ஒரு பொருத்தமான தயாரிப்பை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு