Published:Updated:

`கிரிக்கெட் மோடு; 9 நாள்கள் நீடிக்கும் பேட்டரி' - ரியல்மீயின் முதல் ஃபிட்னஸ் பேண்ட் ரெடி!

ரியல்மீ பேண்ட்
ரியல்மீ பேண்ட்

கிரிக்கெட், யோகா, ஓட்டம், நடைப்பயிற்சி, நடைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி உட்பட மொத்தம் ஒன்பது விளையாட்டு மோடுகள் இந்த மாடலில் உள்ளன.

இந்திய கேட்ஜெட் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ரியல்மீ ஃபிட்னஸ் பேண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. வண்ணமிகு டிஸ்ப்ளே, இதயத்துடிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு, 9 ஸ்போர்ட்ஸ் மோடுகள், நோட்டிஃபிகேஷன்ஸ், USB சார்ஜிங்க் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மீ பேண்ட்.

இந்த ரியல்மீ பேண்ட், ஹானர் பேண்ட் 5i போல், வளைந்த வடிவமைப்போடு மணிக்கட்டில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 20 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Mi பேண்ட் 3 இன் 0.78 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடும்போது, ரியல்மீ பேண்ட் சற்றே பெரிய 0.96 இன்ச் TFT LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

டச் ஸ்கிரீனாக இல்லாமல் டச் பட்டனை மட்டும் இந்த மாடலில் கொடுத்திருக்கின்றனர். ஒரு முறை அழுத்துவதன் மூலம், அனைத்துப் பக்கங்களையும் பார்க்க முடியும். நெடுநேரம் அழுத்துவதன் மூலம் உடற்பயிற்சி, அழைப்பைத் துண்டிக்கும் வசதி போன்றவற்றைச் செய்ய முடிகிறது.

தற்போதுள்ள மாடலில், ஐந்து வாட்ச் முகப்புகள் (watch faces) உள்ளன. கூடுதலாக இன்னும் வாட்ச் முகப்புகள் அடுத்தடுத்த அப்டேட்களில் கிடைக்கும் என்று ரியல்மீ நிறுவனம் கூறியுள்ளது. இந்த பேண்டை ரியல்மீ லிங்க் ஆப்புடன் இணைத்துக் கொண்டும் ஃபிட்னஸ் விஷயங்களைக் கண்காணித்துக் கொள்லலாம்.

ரியல்மீ பேண்ட் வசதிகள்
ரியல்மீ பேண்ட் வசதிகள்

இதயத் துடிப்பு சென்சார் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் வசதிகளோடு இந்த மாடல் வெளிவருகிறது. இதயத் துடிப்பு சென்சார் இதய துடிப்பைக் கண்காணிக்கவும் தூக்கத்தைக் கண்காணிக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள கைரோஸ்கோப் `Lift to Wake Screen' அம்சத்தோடு வருகிறது. இதனால் நீங்கள் கைகளைத் திருப்பி பார்க்கும்போது மட்டுமே டிஸ்ப்ளே ஆன் ஆகும். இது IP68 ரேட்டிங்கைக் கொண்டு வந்துள்ளதால், மழையில் நனைந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை.

`மின்னல் வேக சார்ஜிங் வசதி, 90Hz டிஸ்ப்ளே!'  - மெர்சலாக களமிறங்கும் ரியல்மீ X2 ப்ரோ

கிரிக்கெட், யோகா, ஓட்டம், நடைப்பயிற்சி, நடைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சி உட்பட மொத்தம் ஒன்பது விளையாட்டு மோடுகள் இந்த மாடலில் உள்ளன. ஹானர் பேண்ட் 5i போலவே ரியல்மீ பேண்டிலும் USB சார்ஜிங் வசதி உள்ளது. ஸ்ட்ராபை மட்டும் அவிழ்த்து, அப்படியே பவர் பேங்க் அல்லது லேப்டாப்புடன் எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதற்குக் கூடுதலாக சார்ஜிங் கேபிள் தேவைப்படாது. ரியல்மீ பேண்டில் 90 mAh பேட்டரி உள்ளது. இது 9 நாள்கள் வரை சார்ஜ் தாங்கும்.

ரியல்மீ பேண்டின் விலை ரூ. 1,499.

இது கறுப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் வெளிவருகிறது. இந்த ஃபிட்னஸ் டிராக்கர் மார்ச் 9-ல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு