நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் (Maastricht ) பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குரல் மூலம் கொரோனாவைக் கண்டறியும் செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கின்றனர். கொரோனாவின் தாக்கம் அதிகரித்தபோது வீட்டிலேயே சிலர் பரிசோதனை கருவிகளை வாங்கிப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தற்போது ஸ்மார்ட்போன் செயலி மூலம் மக்களின் குரலை வைத்து கொரோனா தொற்றை எளிமையாகக் கண்டறியும் செயலியை நெதர்லாந்தில் உள்ள மாஸ்ட்ரிக்ட் (Maastricht ) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில அடிப்படைத் தகவல்களைப் பதிவு செய்து, பின்னர் அவர்களின் சில சுவாச ஒலிகளையும் பதிவு செய்ய வேண்டும். அதன் மூலம் குறிப்பிட்ட அந்த நபருக்கு தொற்று இருக்கிறதா? என்பதைத் துல்லியமாக இந்த செயலி தெரிவிக்கும் என நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் வபா அல்பவி தெரிவித்திருக்கிறார். இந்த செயலி 89 சதவிகிதம் அளவுக்குத் துல்லியமாக முடிவைக் காட்டும் எனத் தெரிவித்த விஞ்ஞானிகள், பிற பரிசோதனை முறைகளை ஒப்பிடுகையில் மிகவும் மலிவானது என்றும், குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் இவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம்" என்றும் சொல்லியிருக்கிறார்கள்.