Published:Updated:

செவி மற்றும் விழிச்சவால் உள்ளவர்கள் மற்றவர்களுடன் உரையாட ஒரு ஆப்... இது மோர்ஸ்கோடு மேஜிக்!

கேட்கும் மற்றும் பார்க்கும் திறன் இரண்டிலும் குறைபாடு இருப்பவர்களுக்கு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதும் அதில் பிறரைத் தொடர்புகொள்வதும் சற்றே சிரமமான விஷயமாகத்தான் இருந்துவந்தது.

Samsung Good vibes
Samsung Good vibes ( Samsung.com )

உலகையே உள்ளங்கையில் அடக்கும் மொபைல் போன்களில் அசத்தும் ஆப்கள் ஏராளமாக இருக்கின்றன. காலை எழுவது முதல் இரவு உறங்குவது வரை, ஏதேனும் வகையில் உதவும் வண்ணம் இத்தகைய செயலிகள் வடிவமைக்கப்படுகின்றன. அப்படிக் கேட்கும் திறன் மற்றும் பார்க்கும் திறன் என இரண்டிலும் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் குட் வைப்ஸ் (Good vibes) மற்றும் ரெலுமினோ (Relumino) என்ற இரண்டு ஆப்களை வெளியிட்டிருக்கிறது சாம்சங்.

கேட்கும் மற்றும் பார்க்கும் திறன் என இரண்டிலும் குறைபாடு இருப்பவர்களுக்கு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதும், அதில் பிறரைத் தொடர்புகொள்வதும் கொஞ்சம் சிரமமான விஷயமாகத்தான் இருந்துவந்தது. ஆனால், இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குட் வைப்ஸ் என்ற ஆப் மூலமாக அவர்கள் தங்கள் மனதுக்கு இனியவர்களிடம் ஸ்மார்ட்போன் மூலம் உரையாட முடியும்.

இந்த குட்வைப்ஸ் ஆப் இந்தியாவில்தான் உருவாக்கப்பட்டுள்ளது

இதன் மூலமாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் டூ வே கம்யூனிகேஷனை உருவாக்கிவிடலாம். ஆனால், அது மட்டுமே போதுமானதாக இருக்காது. கூடுதலாக மோர்ஸ் கோடைப் பயன்படுத்துவதைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காரணம், இந்த ஆப் மோர்ஸ் கோடை பின்பற்றியே இயங்குகிறது. குட் வைப்ஸ் ஆப்பில் மோர்ஸ் கோடைப் பின்பற்றி ஒரு செய்தியை டைப் செய்யலாம்.

 Samsung Good vibes
Samsung Good vibes

மொபைலில் உள்ள டச் ஸ்கிரீனில் அதிர்வுகளை (Haptic feedback) உணர்ந்துகொள்ள முடியும். கேட்கும் மற்றும் பார்க்கும் திறன் என இரண்டிலும் குறைபாடு உள்ள பயனாளர்கள் டச் ஸ்கிரீனில் மெதுவாக டைப் செய்வதன் மூலம் கோடுகளையும் புள்ளிகளையும் (Dots and Dashes) தேர்வுசெய்து மெசேஜ்களை உருவாக்கமுடியும். இப்படி உருவாக்கப்பட்ட மெசேஜ்கள் வாக்கிய வடிவமாக மாற்றமடைகின்றன. இதை அனுப்புவதும் எளிதானதாகவே இருக்கும். அனுப்பப்படும் செய்திகளை எதிர்முனையில் இருப்பவர் டெக்ஸ்டாக பார்க்கவோ, ஆடியோவாக கேட்கவோ முடியும்.

எதிர்முனையில் இருப்பவர் அளிக்கும் பதிலை ஸ்மார்ட்போனில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் (Vibrations) மூலம் திறன் குறைபாடு உள்ளவரால் உணரமுடியும். தற்போது இந்த ஆப்பானது சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy Store) ஸ்டோரில் மட்டுமே இருக்கிறது. அதிலிருந்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். இந்த ஆப் விரைவில் அனைத்து போன் வாடிக்கையாளரும் பயன்படுத்தும் வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் இடம்பெறும் என சாம்சங் தெரிவித்துள்ளது.

Samsung app for deaf blindness
Samsung app for deaf blindness

"குட் வைப்ஸ் மற்றும் ரெலுமினோ செயலிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியாக, கேட்கும் மற்றும் பார்க்கும் திறன் குறைபாடு உள்ளவர்களின் வாழ்வை மேம்படுத்தி அவர்களையும் டிஜிட்டல் சமூகத்தின் அங்கமாக இணைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்கிறார், சாம்சங் இந்தியாவின் துணைத் தலைவர், பீட்டர் ரீ (Peter Rhee).

மற்றொரு ஆப்பான ரெலுமினோ (Relumino) பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது குட்வைப்ஸ் ஆப்புடன் ஒப்பிடும்போது சற்று வித்தியாசமானது. இந்த ஆப்பைப் பயன்படுத்த விர்ச்சுவல் ரியாலிட்டி டிவைஸ் ஒன்றும் தேவைப்படும். மொபைலில் ஆப்பை இன்ஸ்டால் செய்த பின்னர் VR டிவைஸை தலையில் பொருத்திக்கொண்டால் போதும். இது பார்வைக் குறைபாடுள்ள பயனாளர்களின் பார்வைக்கு ஏற்ப புகைப்படங்களின் நிறத்தைக் கூட்டி குறைத்துக் காண்பிக்கும். இதன்மூலம் வசதிக்கேற்ப படங்களையும், எழுத்துகளையும் பெரியதாகவோ சிறியதாகவோ காணலாம்.

குட் வைப்ஸ் ஆப்பைப் பலரிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் சாம்சங், சென்ஸ் இந்தியா (Sense India) என்ற அமைப்புடன் இணைந்து பணியாற்றவிருக்கிறது. இந்த ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A20 ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் கொடுக்கிறது. இதைப் பயன்படுத்தி டெல்லி, பெங்களூரு பகுதிகளில் கேட்கும் மற்றும் பார்க்கும் திறனில் குறைபாடு உள்ளவர்களுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன.

இது மட்டுமின்றி தேசிய பார்வையற்றோர் அமைப்புடன் (National association for the blind-NAB) இணைந்து நடத்தும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான பயிற்சி முகாமில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கி, அதைப் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். "செவி மற்றும் விழிச்சவால் கொண்டவர்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உதவி புரிவதே சென்ஸ் இந்தியாவின் நோக்கம். குட் வைப்ஸ் செயலி கண்டிப்பாக அவர்களுடன் உலகின் பல்வேறு மனிதர்களை இணைக்கும்" என்கிறார் சென்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பராக் நம்தேவ் (Parag Namdeo).

சாம்சங் ப்ராஸசர், சூப்பர் ஆக்‌ஷன் கேமரா… மோட்டோவை உயிர்ப்பிக்குமா புதிய ஒன் ஆக்‌ஷன்?