அரசியல்
சமூகம்
Published:Updated:

ஸ்மார்ட் டி.வி வைத்திருக்கிறீர்களா? - முதலில் இதைப் படியுங்கள்...

ஸ்மார்ட் டி.வி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் டி.வி

சில ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், தன் லேப்டாப்புடன் இருந்த புகைப்படம் ஒன்று வெளியானது.

அதில் கேமரா இருந்த இடத்தை ஸ்டிக்கர் போன்ற ஒன்றால் மூடியிருந்தார். அப்போதுதான், ஏன் லேப்டாப் கேமராக் களைப் பலரும் மூடிவைக்கிறார்கள் என்ற கேள்வி வைரலானது.

இணையத்துடன் இணைந்து இயங்கும் எதையும் ஹேக் செய்வது சாத்தியம். அதுவும் அதில் கேமரா இருந்தால் பாதிப்புகள் இன்னும் அதிகம். அதனால்தான், பயன்படுத்தப் படாத சமயங்களில் லேப்டாப் கேமராவை இப்படி ஸ்டிக்கர் கொண்டு மூடிவைப்பார்கள் பிரபலங்கள். காரணம், அவர்களின் அந்தரங்கத்துக்குத் தான் விலை அதிகம். சூரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த கேமரா ஹேக்கிங் சென்ற வாரம் மிகப்பெரிய பிரச்னையைத் தந்திருக்கிறது.

சூரத் நகரில், வசித்துவரும் அந்த இளைஞர், தன் படுக்கை அறையில் லேட்டஸ்ட் மாடல் ஸ்மார்ட் டி.வி ஒன்றை வைத்திருக்கிறார். அவர் இரவு நேரத்தில் ஸ்மார்ட் டி.வி மூலம் ஆபாச இணையதளங்களுக்குச் சென்று படங்கள் பார்ப்பது உண்டு. ஒருநாள், அப்படிப் பார்த்த வீடியோவில் அவரும் அவரின் மனைவியும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைக் காவல் துறையிடம் சொல்லத் தயங்கியவர், சைபர் க்ரைம் தொடர்பாகத் துப்புதுலக்கும் நிபுணர்கள் சிலரை அணுகி, ‘இது எப்படி சாத்தியம், இதை அழிக்க முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்.

வீட்டுக்கே வந்து ஆராய்ந்திருக்கிறது நிபுணர் குழு. வீட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் ரகசிய கேமராக்கள் இல்லை. அதன் பின்னர்தான் அவர்களின் பார்வை ஸ்மார்ட் டி.வி மீது விழுந்திருக்கிறது. பொதுவாக, ஸ்மார்ட் டி.வி-க்களில் கேமராக்கள் இருப்பதில்லை. ஆனால், சில அதிநவீன மாடல் டி.வி-க்களில் கேமரா உண்டு. அறையிலிருந்த டி.வி-யில் கேமரா இருந்தது. அந்த இளைஞர் ஆபாசத் தளங்களுக்குப் போனபோது டி.வி-யை மர்ம நபர்கள் ஹேக் செய்திருக்கிறார்கள். அதன் பின்னர் டி.வி-யிலிருந்த கேமரா மூலமே அறையில் நடந்ததைப் பதிவுசெய்து, அவருடைய வீட்டின் வைஃபை மூலமே அப்லோடும் செய்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்தபோது, கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அந்த இளைஞர். விவகாரம் காவல்துறை வரை சென்று விசாரணை நடந்துவருகிறது.

மற்ற தளங்களைவிட ஆபாச இணையதளங்களில் பாதுகாப்பு வசதிகள் குறைவு. அதனால், அங்கே ஹேக்கிங் வாய்ப்புகள் அதிகம். அரசாங்கங்களின் பல அடுக்குப் பாதுகாப்பையே ‘ஜஸ்ட் லைக் தட்’ என உடைக்கும் பலே ஹேக்கர்களுக்கு, இந்த ஸ்மார்ட் டி.வி எல்லாம் ஒரு விஷயமே இல்லை. எவையெல்லாம் இணையத்துடன் இணைந்திருக்கின்றனவோ... அவை எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் சொந்தம் என்றே நாம் கருத வேண்டும். ஆக, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.