எலான் ட்விட்டரில் ஏற்படுத்தும் அதிரடியான பல மாற்றங்கள், ட்விட்டர் உபயோகிக்கும் அதன் பயனர்களைத் திடுக்கிடச் செய்கிறது. ட்விட்டரின் வருமானத்தை அதிகரிக்க ஊழியர்களைக் கணிசமாகக் குறைப்பதும், புதிதாக ஊழியர்களை நியமிப்பதும் எனப் பல வேலைகளைச் செய்து வருகிறார் எலான்.
இந்நிலையில், எலான் மஸ்க்குக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவ அமெரிக்க வாழ் இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அக்டோபர் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீராம் கிருஷ்ணன், ``எலான் மஸ்க்குக்கு ட்விட்டரில் உதவ வேறு சிறந்த மனிதர்களுடன் தற்காலிகமாகச் சேர்த்துள்ளேன். இது மிகவும் முக்கியமான நிறுவனம், உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். அதைச் செய்யக்கூடிய நபர் எலான் மஸ்க்தான்’’ என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்..?
* ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி இருவருமே சென்னையில், ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள்.
* Yahoo மூலமாக இணைய வழியில் முன்பே சந்தித்த இவர்கள், 2003-ம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
* கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தார் கிருஷ்ணன்.

* அதோடு Yahoo, Facebook, Snap, Twitter போன்ற நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளில் வேலை செய்தார்.
* 2021-ம் ஆண்டில் `ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ்’ (Andreesen Horowitz) என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக இருந்துள்ளார். 2020-ல் வெளியிடப்பட்ட சோசியல் ஆடியோ ஆப்பான இது, கிளப்ஹவுசில் முக்கிய முதலீடுகளைச் சார்ந்து இயங்கி வருகிறது.
* இவரின் மனைவி Netflix மற்றும் Facebook போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
* இவரும், இவர் மனைவியும் இணைந்து `குட் டைம் ஷோ’ (Aarthi and Sriram’s Good Time Show) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அதில் வெற்றிபெற்ற சி.இ.ஓ-கள், படைப்பாளிகள், விளையாட்டு வீர்கள் ஆகியோருடன் இணைந்து உரையாடல்களை நிகழ்த்துவார்கள்.
* இந்த நிகழ்ச்சியில் எலான் மஸ்க், மார்க் ஜூக்கர்பெர்க், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.
* இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ஸ்ரீராம் கிருஷ்ணன், எலான் மஸ்க்குக்கு அறிமுகமாகியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.