Published:Updated:

``என் சூப்பர் சானிக் இன்ஜினை இந்தியா கண்டுக்கல... ஜப்பான்ல கொண்டாடுறாங்க!" - ஒரு தமிழனின் கதை

காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்.

செளந்திரராஜன் குமாரசாமி
செளந்திரராஜன் குமாரசாமி

சர் சி.வி.ராமன், ஜி.டி.நாயுடு, சிவ அய்யாதுரை, முருகானந்தம் என்று பல தமிழர்கள் உலக அளவில் முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள். அந்த வரிசையில், திருப்பூர் வெள்ளகோவில் புள்ள செல்லிபாளையம் என்ற குக்கிராமத்திலிருந்து வந்து, சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் இன்ஜினை கண்டுபிடித்துள்ளார் செளந்திரராஜன் குமாரசாமி.

சூப்பர் சோனிக் இன்ஜின்
சூப்பர் சோனிக் இன்ஜின்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகனங்களால், காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினை கண்டுபிடித்து, அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன். முழுக்க, முழுக்க தண்ணீரில் இயங்கக் கூடியதுதான் இந்த இன்ஜினின் தனித்துவம்.

டிஸ்டில்டு வாட்டரில் இயங்கக் கூடிய இந்த இன்ஜின், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனையும் தனித்தனியாகப் பிரிக்கக் கூடியது. அதாவது, ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு, ஆக்சிஜனை வெளியேற்றக் கூடிய தன்மையைக் கொண்ட இன்ஜினைத்தான் சௌந்திரராஜன் கண்டுபிடித்துள்ளார். இந்த இன்ஜினை நமது நாட்டிலேயே அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் சௌந்திரராஜனின் எண்ணம். ஆனால், அவருக்கான அங்கீகாரத்தை நம் நாடு வழங்கவில்லை.

சூப்பர் சோனிக்
சூப்பர் சோனிக்
`தண்ணீர் பிரச்னைக்கு  தீர்வு காணும் தங்கம்!'- இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

பல இடங்களில் முயற்சி செய்தும், செளந்திரராஜனை எந்த நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காத, இந்த இன்ஜினின் அருமையை உணர்ந்த ஜப்பான் நாடு சௌந்திரராஜனுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொங்குத் தமிழனின் கண்டுபிடிப்பு விரைவில் ஜப்பானில் அறிமுகமாக உள்ளது. ஜப்பான் கிளம்புவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சௌந்திரராஜனைச் சந்தித்தோம்.

"இந்த யோசனை எப்படி வந்தது?"

"சிறு வயதில் இருந்தே புதிய கண்டுபிடிப்புகள் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குறிப்பாக எரிபொருள், இன்ஜின் போன்றவற்றில் அதிகம் ஆர்வம். 2041 என்ற எண்ணில் ஒரு ஜீப் வைத்திருந்தேன். எனக்குத் தோன்றுவதை எல்லாம், அதில் செய்து பார்த்தேன். இன்ஜின் என்றால் என்ன என்பதை அந்த ஜீப்பின் மூலம் தெரிந்து கொண்டேன். செல்ஃப் மோட்டார் கழட்டி எல்லாம் அந்த ஜீப்பை இயக்கியுள்ளேன். அப்பா மர வேலை செய்து கொண்டிருந்தார். அது சம்பந்தமான வேலைகளுக்காக, மரம் வெட்டும் ஊழியர்களை டிராப் செய்யக் காடுகளுக்குச் செல்வேன். அப்போது, ஜீப்பின் சைடில், எக்ஹாஸ்ட் (exhaust) இருக்கும். அதில் ஒரு கப் மாட்டிவிட்டு நீர் ஊற்றினால், சூடாகிவிடும். அதன் மூலம் நாங்கள் காபி போட்டுக் குடிப்போம். அதை நாங்கள் ஜாலியாக பண்ணிக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான், வெப்ப இழப்பு (thermal loss) குறித்துத் தெரிந்துகொண்டேன். இதையடுத்துதான், எனக்கு இப்படி ஓர் இன்ஜினைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது".

"இதன் சிறப்பம்சங்கள் பற்றிச் சொல்லுங்கள்?"

செளந்திரராஜன் குமாரசாமி
செளந்திரராஜன் குமாரசாமி

"தற்போதைய வாகனங்கள் பெட்ரோல், டீசலில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், சூழலுக்கும் அதிக பாதிப்பு இருக்கிறது. எலக்ட்ரானிக் வாகனங்களால், சூழலுக்குப் பாதிப்பு இல்லை. ஆனால், அதில் ஆற்றல் மிகவும் குறைவு. நமது சூப்பர் சோனிக் இன்ஜினால் சுற்றுச் சூழலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. மேலும், பெட்ரோல், டீசலை விட அதிக ஆற்றலில் இயங்கும். விமானம் மட்டும்தான் சூப்பர் சோனிக் இன்ஜினில் இயங்கி வந்தது. அந்த முறை தற்போது மற்ற வாகனங்களுக்கும் வரப்போகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்கள் (filling staions) இருக்கின்றன. ஆனால், அவற்றின் விலை, போக்குவரத்து என்று அனைத்துமே சவால்கள் நிறைந்தது. நான் கண்டுபிடித்துள்ள இன்ஜினுக்கு நிரப்பும் நிலையம் தேவையில்லை. 10 லிட்டர் டிஸ்டில்டு வாட்டரிலிருந்து, ஒரு கிலோ ஹைட்ரஜனைப் பிரிக்க முடியும். இதன் மூலம், 100 சி.சி இருசக்கர வாகனத்தை 200 கி.மீ-க்கு இயக்க முடியும். அதேபோல காரை, 60 கி.மீ தூரத்துக்கும், கனரக வாகனங்களை 10 கி.மீ தூரத்துக்கும் இயக்க முடியும். இதற்குச் செலவு ரூ.20 தான். இதில், எவ்வளவு வேண்டுமானால் டிஸ்டில்டு வாட்டரை நிரப்பிக் கொள்ளலாம்".

"என்ன மாதிரியான சவால்களை எதிர் கொண்டீர்கள்?"

"இந்த இன்ஜினைக் கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆனது. நிதி இருக்காது. நண்பர்கள்தான் எனக்கு அனைத்துச் சூழ்நிலைகளிலும் உடன் இருந்தனர். நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள இருப்பவர்கள், அவமானங்களைத் தாங்குவதற்கு பழகிக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து நம் மக்களுக்கு உதவி செய்ய சிலர் ஊட்டிக்கு வந்திருந்தனர். அவர்களிடம், என்னுடைய கண்டுபிடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல உதவி கேட்டேன். அவர்கள் நான் சொல்வதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுடன் இருந்த நம் தமிழ்நாட்டுக்காரர்கள்,' இவன் எல்லாம் புராஜெக்ட் என்று சொல்லி காசு பார்க்கத்தான் இங்கு வந்திருக்கிறான்' என்று சொல்லி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்கள். இதுபோன்று பல அவமானங்களைத் சந்தித்துத்தான் இன்ஜினைக் கண்டுபிடித்தேன்.

இன்ஜினைக் கண்டுபிடித்த பிறகும், அதற்கான அங்கீகாரம் நம் நாட்டில் கிடைக்கவில்லை. அதனால்தான், ஜப்பானில் முயற்சி செய்தோம். அவர்கள் ஓ.கே சொல்லிவிட்டார்கள். ஜூன் முதல் வாரத்தில் ஜப்பான் செல்கிறேன். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் வரும்போது மிரட்டல்களும் வரும். ஆயில் மாஃபியாக்களிடம் இருந்து மிரட்டல்கள் வந்தன. முதலில் அமெரிக்கா செல்லலாம் என்று நினைத்திருந்தேன். அப்போது, 'விமானநிலையத்தில் வைத்தே என்னைக் கொன்றுவிடுவேன்' எனச் சிலர் மிரட்டல் கடிதம் அனுப்பினர்".

"உங்களது மற்ற கண்டுபிடிப்புகள் குறித்து சொல்லுங்கள்"

செளந்திரராஜன் குமாரசாமி
செளந்திரராஜன் குமாரசாமி

"போர்வை, தலையணை உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் ஐக்கார்டு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளேன். லேசர் தொழில்நுட்பம் மூலம், மின்சாரம் தயாரிக்கும் கன்வெர்ஜென்ட் போட்டோ வோல்டிக் எனர்ஜி என்ற இயந்திரத்தைக் கண்டுபிடித்தேன். இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தை, ரூ.25 பைசாவுக்குத் தயாரிக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்புக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துப் பாராட்டினார்".

"உங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்"

"நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அப்பா குமாரசாமி. அம்மா லட்சுமி. வீட்டுக்கு ஒரே பையன். எங்களது கிராமத்திலும் பெரிய வசதிகள் இல்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக பிளஸ் 1 வரைதான் படித்தேன். ஒர்க் ஷாப் வைத்திருந்தேன். நண்பருடன் சேர்ந்து டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்தை நடத்தியிருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளவில்லை. எனது அப்பா அம்மா என்னைப் பற்றி என்ன யோசிப்பார்கள் என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கும். ஆனால், நாம் அனைவரும் தற்போது விஷக்காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். நம் மக்கள் நல்ல காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கப் போகிறது. இதுபோதும்".