Published:Updated:

``சென்டிமென்ட் இருக்கிறவங்கதான் என் கஸ்டமர்ஸ்!'' - மவுன்ட் ரோடில் ஒரு வாட்ச் டாக்டர்

சுமார் 20 வருடங்களுக்கு மேலாக, மவுன்ட்ரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு எதிர்புறம் வாட்ச் சரி செய்யும் கடை வைத்திருக்கிறார் இதயத்துல்லா.

இதயத்துல்லா
இதயத்துல்லா ( தி.விஜய் )

பரபரப்பான சென்னையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் மவுன்ட் ரோடின் ஓரத்தில், மரத்தடி ஒன்றில் அமர்ந்திருக்கிறார் இதயத்துல்லா. சின்ன அளவுடைய கண்ணாடிப் பெட்டி, அதன் உள்ளே ஆண், பெண் பேதமின்றி பரந்து கிடக்கும் வாட்ச்கள். அதில் ஒன்றைக் கையில் எடுத்து சரி செய்ய ஆரம்பித்த இதயத்துல்லா, சிறிய அலுமினிய டப்பாவைத் திறந்து கண்ணில் மாட்டும் லென்ஸை எடுத்து மாட்டிக்கொள்கிறார்.

Vikatan

“தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் என்னைக் கடந்து செல்கிறார். மவுன்ட் ரோடுன்றதால பரபரப்பிற்குப் பஞ்சம் இருக்காது. நிறைய கம்பெனிகள் இங்க இருக்கு. எல்லோருமே நேரத்தின் பின்னால ஓடறவங்க. அதனால்தான் என் பிழைப்பு ஓடுது” எனப் பேச ஆரம்பித்தார் இதயத்துல்லா. சுமார் 20 வருடங்களுக்கு மேலாக மவுன்ட்ரோடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு எதிர்புறம் வாட்ச் சரி செய்யும் கடை வைத்திருக்கிறார்.

பெரும்பாலும், வாட்ச் பழுதானால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு புதிய வாட்ச் வாங்குபவர்களே அதிகம். அவர்கள், அதை வெறும் வாட்ச்சாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், சிலர், அதை சென்ட்டிமென்டாகப் பார்ப்பார்கள்.
இதயத்துல்லா

“வியாசர்பாடி எம்.ஆர்.நகரில்தான் வீடு. காலையில் 9 மணிக்கு மேல வீட்டுல இருந்து புறப்படுவேன். பக்கத்துலதான் ஒரு இடத்துல இந்தக் கண்ணாடிப் பெட்டியை வச்சிருப்பேன். அதை எடுத்துக்கிட்டு இங்கே வந்துடுவேன். இரவு வரைக்கும் இருப்பேன். மழை வந்தா மட்டும் கொஞ்சம் சிரமம். மற்றபடி தினமும் இங்கதான்.

என்னோட சொந்த ஊர் வேலூர். பொழைக்கத்தான் சென்னை வந்தேன். எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ஸ்கூல் படிக்கிறாங்க. இந்த வாட்ச் சரிசெய்யும் தொழிலாலதான் ஏதோ என் வாழ்க்கை ஓடுது” என்றார் சிறு புன்னகையோடு.

இதயத்துல்லா
இதயத்துல்லா
தி.விஜய்
யாரிடமும் அதிகமாக பணம் வாங்க மாட்டேன். அதிகபட்சம் ஒரு நாளுக்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இதயத்துல்லா

இப்போதெல்லாம் நிறைய பேர் ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் உங்களைத் தேடி வந்து வாட்ச் சரி செய்துகொள்கிறார்களா?

இதயத்துல்லா
இதயத்துல்லா

“வாட்ச் ரிப்பேர் ஆனா தூக்கிப் போட்டுட்டு புதிய வாட்ச் வாங்குறவங்கதான் அதிகம். அவங்க அதை வெறும் வாட்ச்சாகத்தான் பார்ப்பாங்க. ஆனா சிலர் அதை சென்ட்டிமென்டாகப் பார்ப்பாங்க. ரொம்ப பிடித்த ஒருவர் வாங்கிக்கொடுத்த வாட்ச்சாக அது இருக்கும். அதைத் தூக்கிப்போட மனசு வராது. உடனே சரி செய்து போட்டுக்கொள்ளணும்னு நினைப்பாங்க. அவங்கதான் என்னைத் தேடி வர்றாங்க. அவங்கதான் என்னுடைய கஸ்டமர்ஸ். நான் இல்லைனாலும் என்னுடைய நம்பருக்கு கால் பண்ணிடுவாங்க.. அவர்களுக்காகவே எங்கு இருந்தாலும் உடனே ஓடி வந்துடுவேன். வாட்சை சரி செய்துகொடுப்பேன்” என்றார்.

ஒரு நாளில் உங்களின் வருமானம் எவ்வளவு?

“யாரிடமும் அதிகமா பணம் வாங்க மாட்டேன். அதிகபட்சம் ஒரு நாளுக்கு 300ல இருந்து 500 ரூபாய் வரை கிடைக்கும். அந்தப் பணத்துல முக்கால்வாசி வீட்டு வாடகைக்கே போய்டும். ஏதோ என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப வாழ்றேன். வயசு 42 ஆச்சு. பிள்ளைங்களுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு கொடுத்தா போதும். மனிதன் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் போதும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அதுக்கு நானே உதாரணம்.” என்ற இதயத்துல்லாவை தேடி ஒருவர் வந்தார். கையில் ஒரு பழைய வாட்ச். பரபரப்பானார் இதயத்துல்லா.

இதயத்துல்லா
இதயத்துல்லா
தி.விஜய்

கேட்ஜெட்ஸ் பயன்பாடு அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்தப் பரபரப்பான காலத்தில், பழைய வாட்ச்களையும், அதன் நினைவுகளையும் பாதுகாக்கும் பணியைச் செய்துவருகிறார் இதயத்துல்லா. கடந்து போகும் வேகத்தில் இப்படியான மனிதர்கள் பலரை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அவர்கள் தவறுவதில்லை.