கோவிட் தொற்றின்போது பல சவால்களை உலகம் எதிர்கொண்டது. ஒருபுறம் மக்கள் தொற்றின் அச்சத்தில் இருக்க, மற்றொருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஆனால், அத்தகைய பெருந்தொற்றின் சூழலிலும், உலக உணவு சந்தையில் சில நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.

குறிப்பாக, உணவை ஆன்லைனில் விநியோகிக்கும் `இந்தியாவின் ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் உணவு விநியோக நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளன’ எனக் கனடாவைத் தளமாகக்கொண்ட உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான இ.டி.சி குரூப் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனம், ``நெருக்கடி, லாபம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் மாற்றும் சக்தி’’ (Crisis Profiteering, Digitalization and Shifting Power) என்ற தலைப்பில் தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் சீனாவின் Meituan முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஸ்விக்கி ஒன்பதாவது இடத்திலும், ஸொமேட்டோ பத்தாவது இடத்திலும் உள்ளது. இந்த அறிக்கையில் அமெரிக்காவின் uber Eats, DoorDash சீனாவின் Ele.me போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
மேலும் இத்தகைய உணவு விநியோக தளங்கள் குறித்துக் கூறுகையில், `` இத்தகைய தளங்கள் உள்ளூரில் உள்ள உணவு நிறுவனங்களை எளிதாக வாடிக்கையாளர்களுடன் இணைத்துள்ளது. மக்கள் இந்தத் தளத்தை அணுகுவதன்மூலம் மலிவு விலையில் உணவுகளைப் பெறுகின்றனர். அதோடு வேலையில்லா மக்களுக்கு வேலைகளையும் வழங்கியுள்ளது.

அதே சமயம் உணவு விநியோக துறையின் மனிதாபிமானமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத தொழிலாளர் நடைமுறை களையும் கவனிக்க வேண்டும். உணவு விநியோகிப்பவர்கள் நேரத்துக்கு உணவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வேகமாகச் செல்வது, சாலை விதிகளை மீறுவது போன்று பாதுகாப்பில்லாத வழியில் தங்களை தாங்களே ஆபத்தில் ஆழ்த்திக்கொள்கிறார்கள்.
உணவுகளை அதிவிரைவாகவும், உடனடியாகவும் வழங்கா விட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, பணி நீக்கமும் செய்யப்படுகிறார்கள். வேலையைப் பொறுத்தமட்டில் எவ்வளவு வேலை செய்ய வேண்டும், எப்போது வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் இந்தத் தளங்களே கட்டுப்பாட்டில் வைத்துள்ளன’’ என அறிக்கையில் தெரிவித்துள்ளது.