ஆப்பிள் நிறுவனத்தின் விலை உயர்ந்த மேக்புக் சீரிஸ் லேப்டாப்களின் புதிய butterfly ரக கீபோர்டுகளில் ஸ்பேஸிங் (Keyboard Spacing) சரியாகயில்லை, இதனால் டைப் செய்யும்போது எழுத்துப் பிழைகள் அதிகம் வருகிறது எனப் பல காலமாகப் பயனாளர்கள் கூறி வருகின்றனர். தற்போது இதுகுறித்து ஆஸ்கர் விருதுபெற்ற இயக்குநர் டைக்கா வைட்டிடியும் தன் கவலையைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கலிபோர்னியாவில் கோலாகலமாக நடந்தது. இதில் இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதைக்கான விருது "JOJO RABBIT" படத்துக்குக் கிடைத்தது. இவ்விருதை அப்படத்தின் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் டைக்கா வைட்டிடி பெற்றுக்கொண்டார். பின் அவர் பேசியபோது, ஆப்பிளின் புதிய மேக்புக் கீபோர்டுகள் தன்னை மிகவும் சோதிப்பதாகவும், மீண்டும் PC-யைப் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ``ஆப்பிள் கூடிய சீக்கிரம் அதன் மேக்புக் கீபோர்டுகளை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் பாடு மிகவும் மோசமாகிவிடும். இந்தப் புதிய கீபோர்டுகளால் நான் என் தோள்பட்டையில் பல முறை வலியை அனுபவித்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை PC-யில் பயன்படுத்தும் கீபோர்டே சிறந்தது. ஏனென்றால், அது உங்கள் விரல்களுக்குச் சிறந்த தொடு உணர்வைத் தரும். அமெரிக்காவின் ரைட்டர்ஸ் கில்ட் அமைப்பு (WGA – Writers Guild of America) தற்போதுள்ள அனைத்து கீபோர்ட்களையும் மாற்றிச் சரிசெய்ய உண்மையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுத்தாளர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

ஆப்பிளின் Butterfly Keyboard என்று அழைக்கப்படும் இந்தப் புதிய கீபோர்டு, 2015-ம் ஆண்டு வெளியான அதன் மேக்புக் சீரிஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆரம்பம் முதலே இரட்டை அச்சு, அச்சுப் பிழைகள் என பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்தது.
தற்போது இது குறித்து ஆஸ்கர் வென்ற ஒருவரே கவலை தெரிவித்திருப்பது ஆப்பிளின் வடிவமைப்புக் குழுவின் காதுகளை எட்டியதா என்பது அடுத்த ஆப்பிள் மேக்புக் ரிலீஸில் தெரியவரும்.