Published:Updated:

டெக் தமிழா Notifications

கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு!

பிரீமியம் ஸ்டோரி
64 MP கேமரா

ரெட்மி அடுத்த கேமரா மான்ஸ்டர்

ஷியோமி தனது ரெட்மி நோட் 7 ப்ரோ மொபைலில் 48MP கேமராவுடன் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. அதன்பின் சில மொபைல்கள் 48 MP கேமரா சென்சாருடன் வெளிவந்தன. இப்போது இதற்கு இன்னும் ஒருபடி மேலே சென்று விரைவில் அறிமுகமாகவிருக்கும் Mi Mix 4 மாடலில் 64 MP சோனி சென்சார் கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின்றன. ஷியோமி புதிய வடிவமைப்பு மாற்றங்கள் போன்ற புதிய விஷயங்களை Mix சீரிஸில்தான் முயற்சி செய்துபார்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் டிரம்ப்

வாவே தடை நீக்கம்!

சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போரில் அதிகம் பாதிக்கப்பட்டது வாவே நிறுவனம்தான். ஜப்பானின் ஒசாகா நடந்துமுடிந்த G-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தச் சிக்கல் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ``அமெரிக்க நிறுவனங்கள் அவர்களது உபகரணங்களை வாவேவுக்கு விற்பனை செய்துகொள்ளலாம்" என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். பேசும்போது உபகரணங்கள் என்ற அவர் வேறு எதையும் தெளிவாகக் குறிப்பிடவில்லை. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப் இடையே நடைபெற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விரைவில் மீண்டும் அமெரிக்க நிறுவனங்களுடன் வாவே வர்த்தகம் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Flying-V

V வடிவ விமானம்

இப்போதைய விமானத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றும் புதிய V-வடிவிலான டிசைன் பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது. இதை `Flying-V' விமானம் என்று அழைக்கின்றனர். இந்த டிசைன் நெடுதூரம் பயணிக்கும் விமானங்களின் எரிபொருள் செலவை பெருமளவில் குறைக்குமாம். இதில் பயணிகள் இருக்கைகள் விமானத்தின் இறக்கைகளில் அமையும். லக்கேஜ் மற்றும் எரிபொருள் டேங்க்குகளும் இதே இடத்தில்தான் இருக்கும். இதன்மூலம் கூடுதல் ஏரோடைனமிக்காகவும், சற்றே எடைகுறைந்தும் இருக்கும் விமானம். இன்றைய விமானங்களைவிட சுமார் 20% வரை எரிபொருள் சேமிக்கமுடியும். ஆனால், போதிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முழுவதுமாக இந்த 'Flying-V' இயக்கத்திற்கு வர எப்படியும் 2040 ஆகிவிடும்.

அடோப் தொழில்நுட்பம்

அடோப் அப்டேட்

அடோப் நிறுவனமும் UC Berkeley-யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிஷின் லேர்னிங் அடிப்படையில் இயங்கும் இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடுமாம். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களை சில பேரிடமும் ஏ.ஐ.யிடமும் கொடுத்து எவையெல்லாம் மார்ஃபிங் செய்யப்பட்டவை எனக் கேட்டிருக்கிறார்கள். 53% தடவை மக்கள் சரியான விடையைச் சொல்லியிருக்கிறார்கள். ஏ.ஐ 99% தடவை சரியாகச் சொல்லியிருக்கிறது. இதை உடனடியாக ஒரு கமர்ஷியல் புராடக்டாக மாற்றும் எண்ணம் இல்லையெனச் சொல்லியிருக்கிறது அடோப். இதை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பது போகப்போகத்தான் தெரியும்.

எல்ஜி W சீரிஸ்

எல்ஜி W சீரிஸ்

குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புபவர்களுக்கு முதல் தேர்வு ரெட்மிதான். சமீபகாலமாக அதற்கு கடும் போட்டியாளராக மாறியிருக்கின்றது ரியல்மீ. சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்களே அதற்குப் பிறகுதான் நிற்கின்றன. எல்ஜி பட்ஜெட் செக்மென்ட்டில் சில மொபைல்களை விற்பனை செய்துவந்தாலும் அவை பெரிய அளவில் வரவேற்பைப் பெறுவதில்லை. காரணம் அதில் இருக்கும் வசதிகள், விலைக்கும் அதற்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இருக்காது. அதை தற்போது உணர்ந்திருக்கிறது எல்ஜி நிறுவனம். இதைச் சரிசெய்து வசதிகள் அதிகம்கொண்ட W சீரிஸை பட்ஜெட் செக்மென்டில் களமிறக்கியிருக்கிறது எல்.ஜி. இவை 8,999 ரூபாயிலிருந்து கிடைக்கும்.

Vikatan
சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங்!

கடந்த மார்ச் மாதம் ஷியோமி 100W சூப்பர் சார்ஜ் டர்போ என்ற தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருந்தது. அதன் மூலமாக ஒரு மொபைலை வெறும் 17 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தது. தற்போது விவோ நிறுவனம் அதை மிஞ்சியிருக்கிறது. 120W சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலமாக 4000 mAh பேட்டரியை வெறும் 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும். வரும் 26-ம் தேதி விவோ நிறுவனம் 5G போனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது. அப்போது இந்தத் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு