
டெக் தமிழாவின் இந்த மாத ரெகமெண்டெஷன்ஸ்!

Gadget: Google Nest Hub
வெளிநாடுகளில் ஏற்கெனவே விற்பனையிலிருந்தாலும் இந்தியாவுக்கு இப்போதுதான் வந்திருக்கிறது இந்தச் சாதனம். கூகுள் அசிஸ்டென்ட்டுக்கு ஒரு டிஸ்ப்ளே வடிவம் கொடுத்தது போல இருக்கும் இந்தச் சாதனத்தை வீட்டில் தேவைப்படும் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். இதை வைத்து வீட்டில் இருக்கும் மற்ற சாதனங்களைக் (கிட்டத்தட்ட 200 மில்லியன் சாதனங்களுக்கு சப்போர்ட் இருக்கிறதாம்) கன்ட்ரோல் செய்யலாம், யூடியூப் வீடியோக்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம். 7 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்ட இதில் கேமரா கிடையாது. இதனால் தைரியமாகப் படுக்கையறை, சமையலறை என எங்கும் இதைப் பயன்படுத்த முடியும். மேலும், ஸ்பீக்கர் மற்றும் ப்ளூடூத் 5.0 சப்போர்ட்டும் இதில் இருக்கிறது. இதில் இருக்கும் ஸ்மார்ட் டிஸ்ப்ளே சுற்றி இருக்கும் சூழலுக்கு ஏற்ப வெளிச்சத்தையும் நிறங்களையும் மாற்றிக்கொள்ளவல்லது. மேலும், இது சும்மா இருக்கும் நேரத்தில் உங்கள் கூகுள் கணக்கில் சிங்க் ஆகி இருக்கும் சிறந்த போட்டோக்களை எடுத்து டிஸ்ப்ளே செய்யும் திறன் கொண்டது. இந்த ஹோம் ஹப் பச்சை, இளஞ்சிவப்பு, சாம்பல் மற்றும் வெள்ளை நேரங்களில் விற்பனைக்கு வரும். ஆரம்பக்கால சலுகையாக இதனுடன் 1,799 மதிப்புள்ள MI செக்யூரிட்டி கேமராவை இலவசமாகப் பெற முடியும்.
விலை: 9,999 ரூபாய்

Feature: WhatsApp Fingerprint Unlock
இனி வாட்ஸ்அப் ஆப்பிலேயே Fingerprint lock வசதி இருக்கும். தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் இருக்கும் இந்த வசதி சில தினங்களில் அனைவருக்கும் கிடைக்கும். Settings > Account > Privacy என்ற பகுதிக்குச் சென்றால் அங்கே புதிதாக Fingerprint lock என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளதைப் பார்க்க முடியும். இதை ஆக்டிவேட் செய்த பின்னர் வாட்ஸ்அப்பை திறக்க ஃபிங்கர்ப்ரின்ட் தேவைப்படும். இதனால் தேர்டு பார்ட்டி ஆப் லாக்குக்கான தேவையும் குறையும், நமது வாட்ஸ்அப் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
App: Brave Browser
பிரைவசி பாதுகாப்பை முதன்மையான விஷயமாகக் கொண்டு இயங்கும் பிரௌசர் 'பிரேவ்'. குரோம்மை போன்றே இருப்பதால் பயன்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது. சொல்லப்போனால் குரோம் extensions அனைத்தையும் சப்போர்ட் பிரேவ் சப்போர்ட் செய்யும். இகாக்னிடோ மோடில் TOR மூலம் பிரௌஸ் செய்யலாம் என்பதால் உங்கள் IP மறைக்கப்படும். இணையத்தின் ஆபத்துகளிலிருந்து உங்களைச் சற்றே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் இந்த பிரௌசரை நிச்சயம் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆண்ட்ராய்டு, விண்டோஸ், மேக் என அணைத்து தளங்களுக்கும் இது கிடைக்கும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Streaming: The Boys (Prime Video)
இவங்க வேற மாதிரி!
சூப்பர் ஹீரோக்கள் உலகைக் காப்பவர்கள். பேராபத்து வருகையில் தங்களின் சக்திகளைப் பயன்படுத்தி தர்மத்தையும் அமைதியையும் நிலைநாட்டுபவர்கள். இந்த எழுதப்படாத விதியை அடித்துத் துவைத்து துவம்சம் செய்கிறது 'தி பாய்ஸ்'. DC காமிக்ஸின் சூப்பர்ஹீரோக்களான சூப்பர்மேன், வொண்டர்வுமன், அக்வாமேன், ஃப்ளாஷ், சூப்பர்கேர்ள்/ஸ்டார்கேர்ள் போன்ற கதாபாத்திரங்களை சீரியஸாக ஸ்பூஃப் செய்து அரசியல், குரோதம், வன்மம், பாலியல் வன்கொடுமை போன்ற சர்ச்சையான தளங்களைத் தொட்டுச் செல்கிறது. கார்ப்பரேட்களின் பிடியில் சூப்பர் ஹீரோக்கள் கைப்பாவைகளாக இருந்தால் என்னென்ன ஆபத்துகள் நிகழும் என்பதைத் தொய்வில்லாமல் எடுத்துரைக்கிறது. சரி, இதற்கு எதற்கு 'பாய்ஸ்' என்று பெயர்? இந்த சூப்பர் ஹீரோக்கள் கூட்டத்தால் வெவ்வேறு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட சிலர் 'பாய்ஸ்' டீமாக ஒன்றிணைகிறார்கள். சாதாரண மனிதர்களான மறைமுகமாக இந்த சூப்பர் ஹீரோக்களையும் அவர்களை ஆட்டிவைக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் கவிழ்க்க நினைக்கிறார்கள். பரபர திரைக்கதைக்கு வெறியேற்றுவதே இந்த பாய்ஸ் கூட்டத்தின் பாத்திரப் படைப்புகள்தாம். எதற்கும் அஞ்சாமல் சூப்பர் ஹீரோக்களையே லெஃப்டில் டீல் செய்யும் மாஸ் காட்சிகள் இந்த சீரிஸின் பெரிய பலம். அடுத்த சீஸனுக்கு வெயிட்டிங்!