Published:Updated:

சைலன்ட் மெசேஜ்கள், ஸ்லோ மோடு ஆப்ஷன்! - டெலிகிராமின் புது அப்டேட்ஸ்

க.ர.பிரசன்ன அரவிந்த்

புதிய வசதிகள் சிலவற்றை அறிமுகம் செய்திருக்கிறது டெலிகிராம்.

Telegram
Telegram

வாட்ஸ்அப் போலவே பலரும் அதிகமாகப் பயன்படுத்தும் ஓர் இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவை என்றால் அது டெலிகிராம்தான். வாட்ஸ்அப் போலவே பயன்படுத்த எளிதாக இருப்பதும், வாட்ஸ்அப்பை விடவும் சில கூடுதல் ஆப்ஷன்கள் இதில் இருப்பதும்தான் டெலிகிராமைப் பலரும் விரும்பிப் பயன்படுத்தக் காரணம். அதற்கேற்றபடி புதிய அப்டேட்டில் மேலும் சில வசதிகளை கூடுதலாகச் சேர்த்திருக்கிறது டெலிகிராம்.

Telegram Silent Messages
Telegram Silent Messages

இதற்கு முன்புவரைக்கும் டெலிகிராமில் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பினால் அது வழக்கம்போல சம்பந்தப்பட்டவருக்குச் சென்று, அவரது போனில் நோட்டிஃபிகேஷன் வரும். இப்படி ஒவ்வொருமுறை மெசேஜ் அனுப்பும்போதும் நோட்டிஃபிகேஷன் சத்தம் வரும். ஆனால், இனி இப்படி நோட்டிஃபிகேஷன் சத்தமின்றியே மெசேஜ் அனுப்பமுடியும். இதற்காக சைலன்ட் மெசேஜ் என்ற ஒரு ஆப்ஷனைக் கொண்டுவந்துள்ளது டெலிகிராம். இதன்படி மெசேஜ் அனுப்ப நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பும்போது, அந்த மெசேஜை டைப் செய்துவிட்டு சில நொடிகள் Send பட்டனை அழுத்திப் பிடித்தாலே Send without Sound என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் அந்த மெசேஜானது சத்தமின்றி செல்லும். சம்பந்தப்பட்டவர் மொபைலை சைலன்ட்டில் போடவில்லை என்றாலுமேகூட நோட்டிஃபிகேஷன் சத்தம் வராது.

இதேபோல அடுத்த முக்கியமான அப்டேட் ஸ்லோ மோடு. ஏதேனும் க்ரூப்பில் அதிகப்படியான மெசேஜ்கள் வருகிறது என அட்மின்கள் நினைத்தால் அதைக் குறைப்பதற்கான வழி இது. இதன்படி ஒவ்வொருவரும் எவ்வளவு நிமிடங்களுக்கு ஒருமுறை அந்த க்ரூப்பில் மெசேஜ் செய்யலாம் என அட்மினால் செட் செய்யமுடியும். இதனால் க்ரூப்பில் குவியும் மெசேஜ்களும் குறையும். இதற்கடுத்து இன்னொரு அப்டேட் அட்மின்களுக்கான பட்டப்பெயர்கள் வைக்கும் வசதி. இதன்படி க்ரூப்பின் அட்மின்கள் அனைவருக்கும் தனித்தனி பட்டப்பெயர்கள் வைக்கமுடியும்.

Telegram Slow Mode
Telegram Slow Mode

இப்படி வைத்துவிட்டால் க்ரூப்பில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மட்டுமே அன்றி, அவரின் பெயருக்கு அருகில் இந்தப் பட்டப்பெயரும் தெரியும். இதுபோல இன்னும் சில கூடுதல் ஆப்ஷன்களையும் அறிமுகம் செய்திருக்கிறது டெலிகிராம். இந்த அப்டேட்களை டெலிகிராம் வெர்ஷன் 5.10-ல் பயன்படுத்தலாம்.