Published:Updated:

அந்தக் காலம்... அது அது அது... 40 ஆண்டுகளைக் கடந்த வாக்மேன் நினைவுகள்!

வாக்மேன்கள் ஆட்சிசெய்த அந்தக் காலம் எப்படி இருந்தது?!

பிரீமியம் ஸ்டோரி

இந்த உலகம் மிகப் பெரியது; நெரிசல் மிக்கது. இங்கே நமக்கான இடத்தை நாம் தேடித்தான் பெறவேண்டியிருக்கிறது. எல்லோருக்கும் அப்படியொரு தனிமைதான் எப்போதுமான தேவையாய் இருக்கிறது. அதனால்தான், காதல் வந்ததும் 'நம்ம ரெண்டு பேருக்கும் மட்டுமான ஒரு தீவு வேணும்' என ஏங்கத் தொடங்குகிறார்கள். இசையும் ஒரு காதலியோ காதலனோதானே... ஆனால், அதை உலகம் எப்படி ரசித்துக்கொண்டிருந்தது? ஒரு ரீவைண்டு போவோம்.

வாக்மேன்
வாக்மேன்

மேடையில் ஒருவர் பாடுவார். ரசிக்கத் தொடங்கினால் பக்கத்திலிருப்பவர் தொடையில் தட்டும் சத்தம் கேட்கும். திரைப்படம் பார்க்க திரையரங்குக்கு போனால், முக்கியமான சமயத்தில் ஒருவர் சமோசா வாங்கவோ சிக்ரெட் பிடிக்கவோ குறுக்கே நடந்துபோவார். டிரான்ஸிஸ்டரில் கரகர சத்தத்துடன் கேட்டாலும் பரவாயில்லை என நினைத்தால், “என்ன மாப்ள.. ரேடியோவா? வசதிதான்” என ஒருவன் வந்து ஒட்டிக்கொள்வான். தொலைக்காட்சியில் ஒரு பாடல் வரும். லயிக்கத் தொடங்கிய நொடியில் சேனல் மாற்றப்படும். நல்லதொரு இசை கேட்க எவ்வளவு காலமாக இந்த மனிதகுலம் போராடிவந்திருக்கிறது தெரியுமா? அதற்கு வழியே இல்லை என்பதால்தான் பாத்ரூம் பாடகர்களே உருவாகியிருப்பார்கள். யாரும் தொந்தரவு செய்யாத இசை அது.

அப்போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டின் ஆசையைத் தீர்க்க வந்த ஆபத்பாந்தவன்தான், வாக்மேன். மழை தூறத் தொடங்கியதும் ராஜா சாரை அழைத்துக்கொண்டு மொட்டை மாடியில் ஓரமாக இருக்கும் தூறல் வராத சின்ன இடத்தில் அமர்ந்துகொள்ளலாம். போரடிக்கும் காலை ஓட்டத்தை ரகுமானின் துணைகொண்டு சுவாரஸ்யமாக்கலாம். படபடப்பான சமயத்தில், எக்குத்தப்பாகத் துடிக்கும் இதயத்துடிப்பை மனதுக்குப் பிடித்த பாடல் கேட்டு சாந்தப்படுத்தலாம். நமக்குப் பிடித்த பாடல் இன்னொருவருக்கு பிரச்னையாக இருந்தால், அதைக்கூட வாக்மேனால் நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம். கண்கள் மூடி விருப்பமான பாடலைக் கேட்டால், மனிதகுலத்தின் பலநாள் ஆசையான அந்த தனிமைத் தீவு கிடைத்துவிடும். அதனால்தான் வேறெந்த இசைக்கருவிக்கும் இல்லாத ஆதரவு வாக்மேனுக்குக் கிடைத்தது. இந்தத் தனிமை கிடைத்த பின்தான், இசைமகள் காதலியானாள். காலம் கரைந்தோடியது.

walkman
walkman

இன்று வாக்மேன் இல்லை என நினைக்காதீர்கள். மொபைலுக்குள்ளே அந்தக் காதலி வேறு உடையிலிருக்கிறாள். நமக்கான இசையை அள்ளித்தரும் தேவதை அப்டேட் ஆகி, நம் மனைவிபோல ஆகியிருக்கிறாள். ஆனால், அந்தக் காதலும் ரசனையும் அப்படியேதானிருக்கிறது. இருந்தும், வாக்மேனை புகைப்படத்திலோ நம் வீட்டுப் பரணிலோ எங்கோ பார்க்கும்போது, ஊர்த் திருவிழாவில் நம் காதலியைத் தாவணியில் பார்த்த தருணம் போலிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாக்மேனுக்கு வயது '40'... இசையைக் கைக்குள் கொண்டு வந்த சோனியின் 'இசை அரசன்'

கண்கள் மூடி பாடல் கேட்கவைத்தவளை கண்கள் மூடி நினைவில் பார்த்துக்கொள்ளவேண்டிய நாள் ஒன்று இப்போதுதான் கடந்தது. ஜூலை 1-ம் தேதியோடு வாக்மேன் விற்பனைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் தனி உலகை சாத்தியமாக்கிய அந்த கேட்ஜெட் தேவதைக்கு நாம் அனைவரும் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு