Published:Updated:

'ரியல்மீ vs ரெட்மி' போர்...ஆமாம் போர்!

மு.ராஜேஷ்

K20 சீரிஸ் அறிமுகத்துக்குப் பிறகு ரெட்மிக்கும் ரியல்மீக்கும் இடையேயான போட்டி தற்போது உச்சத்தைத் தொட்டிருக்கிறது!

ரெட்மி K20
ரெட்மி K20

இதுவரை பட்ஜெட் செக்மென்ட்டில் முழுவீச்சில் இயங்கிவந்த ஷியோமி இப்போது ப்ரீமியம் செக்மென்ட் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது. இந்தியாவில் ஷியோமி கால்பதித்து ஐந்து வருடங்களாகிவிட்டன. இந்தக் குறுகிய காலத்தில் முதலிடத்தைப் பிடிக்க காரணம் ஷியோமியின் திட்டங்கள் பெரும்பாலும் பக்காவாக இருப்பதே. ரெட்மி சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமானால் விற்பனை தொடங்கி சில நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிடும். அந்த அளவு மவுசு ரெட்மி போன்களுக்கு உண்டு. ஆனால், பட்ஜெட் செக்மென்ட்டைவிட்டு வெளியே எடுத்துவைத்த முதல் அடியே ஷியோமிக்கு சறுக்கல்தான்.

ரெட்மி சீரிஸில் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் போன்கள் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை.

K-சீரிஸ்க்கு பெரிய அளவில் விளம்பரம் செய்துவந்த ஷியோமி K20 மற்றும் K20 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் வெளியிட்டது. ரெட்மி சீரிஸில் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் போன்கள் விற்பனைக்கு வருவது இதுவே முதல் முறை. இதில் ரெட்மி K20 ப்ரோவில் இருக்கும் வசதிகள் அந்த விலைக்கு சரியானதாகவே இருக்கிறது.

ஆனால், K20-யின் விலையை நிர்ணயிப்பதில் தடுமாறியிருக்கிறது ஷியோமி. அதே நேரம் ஷியோமிக்கு கடுமையான போட்டியாளராக இன்று வளர்ந்திருக்கிறது ரியல்மீ நிறுவனம். அந்த நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய ரியல்மீ X ஸ்மார்ட்போன்தான் ஷியோமியின் இரண்டு போன்களைத் தற்போது ஓரம்கட்டியிருக்கின்றன.

ரியல்மீ X
ரியல்மீ X

ரெட்மி K சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஷியோமி அறிமுகப்படுத்துவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே ரியல்மீ X ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ஆட்டத்தைத் தொடங்கியது ரியல்மீ நிறுவனம். 4GB+128GB வேரியன்ட்டுக்கான விலையை 16,999 ரூபாயாக நிர்ணயம் செய்தது. 8GB+128GB வேரியன்ட்டுக்கான விலையையும் இருபதாயிரம் ரூபாயைத் தாண்டாதவாறு பார்த்துக்கொண்டது. ரியல்மீ அந்த விலையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் ரெட்மி நோட் 7 புரோவின் 6GB+128GB வேரியன்ட் அந்த விலையில் விற்பனை செய்யப்படுவதுதான். ரெட்மி நோட் 7 ப்ரோவுடன் ஒப்பிடும்போது அதிக வசதிகள் ரியல்மீ X-ல் இருக்கின்றன. எனவே, இதை விட்டுவிட்டு ரெட்மி 7 ப்ரோவை வாங்கப் பலரும் யோசிக்கவே செய்வார்கள். அதன் விற்பனையும் படிப்படியாகக் குறையும். அடுத்ததாக ரியல்மீ குறி வைத்தது ரெட்மி K20 ஸ்மார்ட்போனுக்குத்தான்.

ரெட்மி K20-யின் 6GB+64GB வேரியன்ட்டின் விலை 21,999 ரூபாய். 4GB+128GB ரியல்மீ X வேரியன்ட்டுக்கான விலை 16,999 ரூபாய். இரண்டுக்கும் இடையே விலை வித்தியாசம் 5000 ரூபாய். அந்த விஷயத்தில்தான் தப்புக்கணக்கு போட்டுவிட்டது ஷியோமி. ரேம். இன்டெர்னல் மெமரி எனப் பல விஷயங்கள் ரியல்மீ X ஸ்மார்ட்போனில் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், பெரிய வித்தியாசம் எதில் என்று பார்த்தால் ப்ராஸசர்தான். ரியல்மீ X-ல் இருப்பது Snapdragon 710 ப்ராஸசர், ரெட்மி K20-யில் இருப்பது Snapdragon 730. இரண்டுக்கும் இடையே பெர்ஃபாமன்ஸ் என்று பார்க்கும்போது சிறிய அளவு வித்தியாசம் மட்டுமே இருக்கும் என்பதால் ரியல்மீ X பக்கம் காற்று வீச ஆரம்பித்தது. ரெட்மி K20-யின் விலைக்கு ப்ராஸசரை ஒரு முக்கியமான காரணமாகக் கூறுகிறது ஷியோமி. இதன் தாக்கம் சமூக வலைதளங்களில் தெரிய ஆரம்பித்தது. ரெட்மி K20-யின் விலை அதிகமாக இருப்பதாகப் பலரும் குறைகூறத் தொடங்கினர்.

'ரியல்மீ vs ரெட்மி' போர்...ஆமாம் போர்!

Change.org இணையதளத்தில் ரெட்மி K20-யின் விலையை இருபதாயிரம் ரூபாய்க்குக் கீழ் குறைக்க வேண்டும் என்ற பெட்டிஷன் போடுமளவுக்கு இது சென்றது. அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதற்கு ஷியோமி நிறுவனம் ரெட்மி K20-யின் விலை சரியாக இருக்கிறது, வாடிக்கையாளர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் என ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த மொபைல்கள் தொடர்பாக ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயினும், ரியல்மீயின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத்தும் ட்விட்டரில் ஒருவரையொருவர் மறைமுகமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

`அந்த 505 எரர்தான் இதற்கான விதை!' - ரெட்மி K20 சீரிஸை வெளியிட்ட ஷியோமி
மாதவ் சேத் ட்வீட்
மாதவ் சேத் ட்வீட்

ஷியோமிக்கு இதுவரை விலை என்ற ஒரு விஷயம்தான் பெரிய பலமாக இருந்துவந்தது. ஆனால், இப்போது ரெட்மி K20 விஷயத்தில் அதுவே பெரிய பின்னடைவாக அதற்கு இருக்கப்போகிறது.