Published:Updated:

முழுவதுமாக மொபைலில் ஷூட் செய்யப்பட்ட செலினாவின் வைரல் ஆல்பம் சாங்!

பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்.

செலினாவின் வைரல் ஆல்பம் சாங்
செலினாவின் வைரல் ஆல்பம் சாங்

இன்று, மொபைல் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் தொடங்கி பிரீமியம் செக்மென்ட் வரை அனைத்து செக்மென்ட்டிலும் கடுமையான போட்டி நிலவிவருகிறது. பட்ஜெட் செக்மென்ட்டிலேயே நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன்தான் பெஸ்ட் என்பதைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராட வேண்டியதாக இருக்கிறது. அப்படியிருக்க, லட்சம் ரூபாயில் ஐபோன்கள் விற்கும் ஆப்பிள் நிறுவனம் எந்த அளவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்?! பிரபல பாடகியான செலினா கோமேஸ், சில மணி நேரங்களுக்கு முன்பு 'Lose You To Love Me' என்ற பாடலை வெளியிட்டார். இதற்கும் ஆப்பிள் மார்க்கெட்டிங்கிற்கும் என்ன சம்பந்தம்?

இந்தப் பாடல் முழுவதுமாக புதிய ஐபோன் 11 ப்ரோவில் ஷூட் செய்யப்பட்டதாம். எப்படியும் மற்ற சாதனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும், DI கலரிங் செய்யப்பட்டிருக்கும் என்றாலும், ஒரு மொபைல் கேமராவில் இப்படி ஒரு வீடியோவா என்று ஆச்சர்யப்படுத்தும் வண்ணமே இருக்கிறது இந்தப் பாடல். ஐபோன் கேமராதான் உலகத்தின் சிறந்த ஸ்மார்ட்போன் கேமரா என்று பல வருடங்களாகச் சொல்லிவருகிறது ஆப்பிள். இது, ஏறத்தாழ உண்மையும்கூட. ஆனால், சமீபகாலங்களில் கூகுள், சாம்சங், வாவே போன்ற நிறுவனங்கள் இந்த மகுடத்திற்காகக் கடும் போட்டி கொடுத்துவருகின்றன.

IPhone 11 pro
IPhone 11 pro
Apple.com
`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent

இரண்டு வருடங்களாக கூகுளின் பிக்ஸல் மொபைல்கள்தான் படங்கள் எடுக்கச் சிறந்த கேமரா என்று எல்லா கேட்ஜெட் விமர்சகர்களும் பேசத்தொடங்கியிருக்கின்றனர். இதனால் இம்முறை கேமராவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி 11 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். சில நாள்களுக்கு முன்பு கூகுளும் அதன் புதிய பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனால், மீண்டும் யார் பெஸ்ட் என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், 'போட்டோ தரத்தில் வேண்டுமானால் போட்டி இருக்கலாம். வீடியோவில் போட்டியே கிடையாது. அதில் என்றுமே நாங்கள்தான் பெஸ்ட்' என்று இந்த செலினா கோமேஸ் வீடியோவின் மூலம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது ஆப்பிள்.