Published:Updated:

``ஊர்ல திருட்டே கிடையாது... காரணம் சிசிடிவி கேமரா!" - ஆச்சர்யமூட்டும் சி.புதூர்

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா ( கெளதம் )

ஒரு முழு கிராமத்திற்கே சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார் அன்பழகன்

வீடு மற்றும் அலுவலகங்களில் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது உண்டு. குற்றங்களைப் போலவே அவற்றைக் கண்காணிக்கும் சி.சி.டி.வி. கேமராக்களும் பெருகிவிட்டன. திரும்பும் திசையெல்லாம் அவை பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு தண்டிக்க முடிகிறது. இதனால், பொதுமக்களுக்கும் இவற்றின்மீது நம்பிக்கை கூடியிருக்கிறது.

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்திற்கு அருகிலுள்ள சி.புதூர் கிராமத்தைக் கடந்து செல்லும் போது, கிராமம் முழுவதும் ஐந்து இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. அவை எந்தவொரு குறிப்பிட்ட வீட்டுக்காக மட்டும் பொருத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, 'தங்கள் கிராமம் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள்ஊர் இளைஞர்கள் வைத்துள்ளனர்' என்றனர். கேட்கும்போதே ஆச்சர்யப்பட வைத்தது. சிசிடிவி அமைக்க முழு முயற்சியும் மேற்கொண்டவர்கள் சாந்தமூர்த்தி, அன்பழகன் மற்றும் அவர்களின் நண்பர்கள். பொது மக்களிடம் விசாரித்து, ஒருவழியாக அந்த டிஜிட்டல் சிந்தனையாளர்களைத் தேடிப்பிடித்து பேசத்தொடங்கினோம்.

சிசிடிவி
சிசிடிவி

ஒரு முழு கிராமத்திற்கே சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார் அன்பழகன்.

"சமீப காலமாக எங்கள் கிராமத்தில் நிறைய திருட்டு நடந்தது. ஒருகட்டத்தில் ஆடு, மாடுகளைத் திருடிக் கொண்டிருந்தவர்கள், பெண்களின் தாலியைத் திருடும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. இதைக் கட்டுப்படுத்தவும், திருடர்களையும் அவர்கள் வரும் வண்டியின் எண்ணை கண்காணிக்கும் பொருட்டும் இளைஞர் ஒன்று சேர்ந்து இந்த சிசிடிவி கேமராக்களைப் பொருத்தினோம்".

சிசிடிவி கேமராக்களை பொருத்தியதற்குப் பிறகு திருட்டைக் கட்டுப்படுத்த முடிந்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சாந்தமூர்த்தி, "முழுவதுமாகக் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் மக்கள் பயமின்றி வாழ்கிறார்கள். அது மட்டுமன்றி சுற்றியுள்ள பல ஊர்களிலிருப்பவர்கள் கூட எங்கள் ஊரின் சாலை வழியாகத்தான் தருமபுரியோ பென்னாகரமோ செல்லவேண்டும். எனவே எங்கள் ஊரில் உள்ள கேமராக்களால் பக்கத்தில் உள்ள ஊர்களில் நடைபெற்றுவந்த திருட்டும் ஓரளவு கட்டுப்பட்டுள்ளது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி"எனப் புன்னகையுடன் கூறுகிறார்.

நூலகம்
நூலகம்

அவர்களிடம் பேசிக்கொண்டே அந்த ஊரில் உள்ள ஒரு நூலகத்தில் போய் அமர்ந்தோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் புத்தகங்களுடன் கண்ணாடி மேசைகள், இருக்கைகள், உடற்பயிற்சி உபகரணம் என அழகாயிருந்த நூலகமும் ஆச்சர்யமாய் இருந்தது. அதைப் பற்றி கேட்டபோது "இதுவும் நாங்களாக உருவாக்கிய நூலகம்தான்" என மீண்டும் ஆச்சர்யமூட்டினார் அன்பழகன். இதையெல்லாம் எப்படி செய்கிறீர்கள், இதற்கான மூலதனத்தையெல்லாம் எப்படி திரட்ட முடிகிறது என்று கேட்டபோது, "இதைத் தனியாக ஓரிரு நபர்களால் செய்துவிட முடியாதுதான். நாங்கள் தனியாகவும் இதைச் செய்துவிடவில்லை. "APJ-ன் அக்னிச் சிறகுகள் இளைஞர் நற்பணி சங்கம்" என்ற அமைப்பினை உருவாக்கினோம். அதன்மூலம் ஊரில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் உழைப்பின் மூலமாகத்தான் இதையெல்லாம் எங்களால் செய்ய முடிந்தது. அதுமட்டுமன்றி எங்களூர் ஏரியை தூர்வாருவதும், ஊரின் தெருவெங்கும் நிறைய செடிகளை நட்டு, சொட்டுநீர் மூலமாக அவற்றை மரமாக்க வேண்டுமென்பதே எங்கள் அடுத்த கட்ட இலக்காக உள்ளது" என்றார்கள் இந்த நம்பிக்கை இளைஞர்கள்.

2017 -ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் சிறந்த மாதிரி கிராமமாக சி.புதூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு