Published:Updated:

டிக்டாக் காமெடி - நீங்கள் புகழ்பெற 15 நொடிகளே போதும்! ஆனால்...

டிக்டாக் காமெடி
பிரீமியம் ஸ்டோரி
டிக்டாக் காமெடி

`ஒன் ப்ளஸ் ஒன் டூ மாமா...’ என்று குடும்பத்தலைவி, தலைவரைப் பார்த்துப் பாடுகிறார்.

டிக்டாக் காமெடி - நீங்கள் புகழ்பெற 15 நொடிகளே போதும்! ஆனால்...

`ஒன் ப்ளஸ் ஒன் டூ மாமா...’ என்று குடும்பத்தலைவி, தலைவரைப் பார்த்துப் பாடுகிறார்.

Published:Updated:
டிக்டாக் காமெடி
பிரீமியம் ஸ்டோரி
டிக்டாக் காமெடி

அடுத்த வரி, `யூ ப்ளஸ் மீ, த்ரீ மாமா...’ என்று பாடிக்கொண்டே தன் பின்னாலிருந்து ஒரு குழந்தையை வெளியே எடுக்கிறார். கணவர், `புருஷன் சொன்னா கேட்டுக்கணும், ரெண்டும் ஒண்ணும் நாலு!’ என்ற திரைப்பட வசனத்தைப் பேசிக்கொண்டே, தன் பின்னாலிருந்து இன்னொரு குழந்தையை வெளியே அழைக்க, அந்த ரசனையான காணொலி முடிகிறது. டிக்டாக் செயலி மூலம் பதிவேற்றப்படும் வீடியோக்கள்தாம் இன்று இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கின்றன. 15 நொடிகளுக்குள் தங்கள் திறனைக் காட்ட வேண்டும் என்பது ஒரு சவாலைப்போல இருக்க, இளைஞர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதுமிருந்து எல்லா வயதுக்காரர்களும் டிக்டாக்கில் இணைந்திருக்கிறார்கள்.

`நாளை இங்கே யாவருக்கும் 15 நிமிட புகழ் கிடைக்கும்’ என்று ஆண்டி வேர்ஹால் என்கிற அமெரிக்க அறிஞர் சொல்லிச் சென்றார். அதையே தீர்க்கதரிசனமாகப் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு, `ஒருவர் புகழ்பெற, 15 நொடிகளே போதும்’ என்கிறது டிக்டாக். அந்தச் செயலியைப் பயன்படுத்தக் கூடாது என வீட்டார் கண்டித்தால் தற்கொலை செய்துகொள்ளும் மனிதர்கள்கூட, காரணத்தையும் காணொலியாகப் பதிவேற்றிய பிறகே உயிரை விடுகிறார்கள்.

டிக்டாக்
டிக்டாக்

மீச்சிறு காணொலிகளில் மேஜிக் நிகழ்த்து கிறார்கள், புதுவித சிகை அலங்காரம் செய்து காண்பிக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் நிலா நடை (மூன் வாக்) போன்று நடக்கிறார்கள். இன்னும் என்னென்னவோ சாகச வீடியோக்கள் உலகம் முழுவதுமிருந்து நொடிக்கு நொடி பதிவேற்றப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தமிழ்நாட்டிலிருந்து வரும் வீடியோக்களைக் கவனிப்பது தனி சுவாரஸ்யம்தான். இளம் பெண்களுக்கு நிகராக, குடும்பத்தலைவிகளும் டிக்டாக்கில் கலக்குகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சமூக வலைதளங்களைப் போன்றே, இதுவும் ஒரு புதிய வாசலைத் திறந்திருப்பதை மறுக்க முடியாது. ஒவ்வொரு நாளும் உலகின் எங்கோ ஒரு மூலையில் சட்டங்கள் ஏற்றப்படுவதைப்போலவே டிக்டாக்கில் அவை தகர்த்தெறியவும்படுகிறது. டிக்டாக் காணொலியில் திறமையைக் காண்பித்தே திரைப்பட வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். இதில், ஆர்வக்கோளாறில் எதையாவது பதிவிட்டுக்கொண்டே இருக்கும் நம்ம ஆள்கள், அவ்வப்போது பார்வையாளர்களைத் திகிலடைய வைக்கவும் தவறுவதில்லை.

உதாரணமாக, `திருச்சி, 10-ம் நம்பர் பிள்ளையார் கோயில் தெரு பாமா, நீ எப்படிப்பட்டவன்னு எனக்குத் தெரியாதா..?’ என்று ஆரம்பித்து, சகட்டுமேனிக்கு கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார் ஒரு பெண். அந்த பாமாவும் வேறு வீடியோவில் பதில் சொல்லிக்கொண்டிருப்பார். தங்கள் ஆப் தெருச் சண்டைக்கு உதவிடும் என்று டிக்டாக் நடத்தும் சீனாக்காரர்கள் நினைத்துகூடப் பார்த்திருக்க முடியாது. `எங்க சாதிப் பெருமை என்ன தெரியுமா?’ என இளம்பெண்கள் இல்லாத மீசையை முறுக்கிக்காட்டுகிறார்கள். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சமூகம், இன்று தொழில்நுட்பம் பயன்படுத்தி டிக்டாக்கில் சாதி வளர்க்கிறது.

டிக்டாக்
டிக்டாக்

அடுத்து, தன் வீடியோ ஒன்று டெலீட் செய்யப்பட்டுவிட்டதாக இளம்பெண் முறை யிடுகிறார். `என் ரசிகர்களாகிய நீங்கள்தாம் டிக்டாக் கம்பெனியிடம் நியாயம் கேட்க வேண்டும்!’ என்று அவர் கண்கள் கலங்க, இங்கே பல இதயங்கள் கைக்குட்டையைத் தேடுகின்றன. காற்சிலம்புக்குப் பதிலாக மொபைல் இருக்க, கலியுகக் கண்ணகிகளின் வாழ்வில் லைக்குகள் விளையாடுகின்றன. என்ன... பையன்கள் இப்போதெல்லாம் கல்லூரி வாசல்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் அழகிய பெண்களின் முக தரிசனத்துக்காகக் காத்திருப்பதில்லை. டிக்டாக் செயலியை தரவிறக்கினால், அகில உலக அழகிகளும் உள்ளங்கையில் தரிசனம் தருகிறார்கள்.

துப்பட்டா போடாமல் சுடிதார் அணியும் பெண்களிடம், ஆண்கள் நல்ல பெயர் எடுக்க ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. `துப்பட்டா போடுங்க ஆன்ட்டி’ என்று சிலர் கமென்ட் போட, துப்பட்டாவிலோ, `ஆன்ட்டி' என்று அழைத்ததாலோ காயப்பட்டு, அடுத்த வீடியோவில் `உன் தங்கச்சியா இருந்தா இப்படிச் சொல்லியிருப்பியா?’ என்று ஒரு திருமதி கண்களைக் கசக்குகிறார். சீக்கிரமே கமென்ட் பாக்ஸ் சகோதரர்களால் இந்தத் தம்பதிக்கு விவாகரத்து கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிக்டாக் யுகத்தில் பிறந்த குழந்தைகள்தாம் ரொம்பப் பாவம். தப்பித்தவறி ஒரு குழந்தை பேசியது சூப்பர் ஹிட்டாக, பல பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தை படித்துப் பட்டம் பெற்று நல்ல பெயர் வாங்கித்தருவதெற்கெனக் காத்திருப்பது வீண் என்று படுகிறது. க்விஸ் போட்டியில் நேராக 16-வது கேள்விக்குத் தாவிடும் அவசரம், இன்றைய அப்பா அம்மாக்களுக்கு வருகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி டிக்டாக்கை ஹிட்டாகச் செய்வது! பெற்ற குழந்தைகளே கஷ்டப்படும்போது, வாயில்லா ஜீவன்களுக்கு என்ன வந்தது கேடு? அவையும் காணொலியில் தோன்றி லைக்கை அள்ளுகின்றன. என்ன... டிக்டாக்கில் தாங்கள் புகழ்பெற்றதை அவை ஒருநாளும் அறியப்போவதில்லை என்பதுதான் இங்கே சோகம்.

ஜோடியாக ஆடும், நடிக்கும் டிக்டாக்குகளில் அம்மா-மகன் வகையறாக்கள், அவர்களுக்கு நெஞ்சு ஜிகுஜிகுக்கிறதோ இல்லையோ, நமக்கு நெஞ்சு பதைபதைக்கிறது. ஒரு டிக்டாக் காணொலியில், `போன வீடியோவில் இருந்தது என் மகன் தெரியுமா?’ என்று ஒரு பெண்மணி வந்து, இவர்கள் காதலை வாழ்த்திய ரசிகர்கள் மீது கோபப்பட்ட பிறகுதான் பலரும் அவருடைய முந்தைய காணொலியைத் தேடித் தேடிப் பார்த்தார்கள்.

ஆண்கள் அளவுக்கு பெண்கள் டிக்டாக்கில் மெனக்கெடுவதில்லை என்பதையும் சொல்லி யாக வேண்டும். கொஞ்சம் அழகாக இருந்தால் போதும், சினிமா பாடல்களுக்கு புருவத்தைத் தூக்கி இறக்கி வாய் அசைத்தாலே, ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் லைக்கைத் தட்டி விடுகிறார்கள். ஆண்கள்தாம், வைகைப் புயல் வடிவேலுவின் வசனங்களை மூச்சுமுட்டப் பேசி, நடித்து, குட்டிக்கரணம் அடிக்காத குறையாக ஹார்ட்டின் தேடுகிறார்கள். அதோடு, டிக்டாக் இளைஞர்களின் முக்கோண, செவ்வக, கூம்பு வடிவ தலைக்குள்ளிருந்து குருவி பறந்து வருமா என்று பார்க்கிறேன்.

எங்களுக்கெல்லாம் அமைந்த ஆசிரியர்கள், சிரிப்பை சிரத்தையாக வீட்டில் விட்டுவிட்டு வந்தவர்கள். அறிவியல் ஆசிரியை ஒருநாள் முழுவதும் சிடுசிடுக்காமல் இருந்தால், அவர் மிக மகிழ்ச்சியாக இருப்பதாகக் கொள்வோம். இது 21-ம் நூற்றாண்டு. பையன்களும் டீச்சருமாக வீடியோவில் குத்தாட்டம் போடுவதைப் பார்க்கையில், முடிந்துபோன என் பால்யத்தை எண்ணி பெருமூச்சுவிடத்தான் முடிகிறது.

மகான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு தாய், தன் மகன் இனிப்பு சாப்பிடாமல் இருக்க அவனுக்கு அறிவுரை கூறுமாறு வேண்டுகிறார். பரமஹம்சர், அவர்களை ஒரு வார காலம் கழித்து வரச்சொல்கிறார். காரணம் கேட்டபோது, `முதலில் நான் அந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதன் பிறகுதான் அந்தக் குழந்தைக்கு அறிவுரை சொல்ல தகுதி பெறுவேன்’ என்றாராம். இன்று எந்தப் பெற்றோருக்கும் பையனை டிக்டாக் போதையிலிருந்து மீட்டெடுக்க அறிவுரை சொல்ல முடியாது. மருத்துவர், பெற்றோரிட மிருந்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

சாவு வீட்டிலும் இடுகாட்டிலும் எடுக்கப் படும் வீடியோக்களும் உண்டு. `மரணம், மாஸு மரணம்...’ என்று இதுவரையில் யாரும் பிணத்தின் கையைப் பிடித்து இழுத்து ஆடவில்லை என்பதே இந்தத் தருணத்தில் நிம்மதியாக இருக்கிறது. சில டிக்டாக் வீடியோக்களின் மெனக்கெடல்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சந்திரமுகி போல வேடமிட்டு 15 விநாடிகள் தோன்றுவதற்கு, குறைந்தது இரண்டு மணி நேரமாவது மேக்கப் போட்டிருக்க வேண்டும். செட் புராப்பர்ட்டி யும் சில காணொலிகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குடும்பப்பெண் கதாபாத்திரம் என்றால், துடைப்பம், ஒட்டடைக்குச்சி சகிதம் காணொலியில் ராணி வருகிறார். பாடல்கள் பாடுவதென்றால், தேநீர் வடிகட்டி `மைக்’ ஆகிறது. இரு கொட்டாங்குச்சிகளைக்கொண்டு ஹெட்போன் மாட்டிக்கொள்கிறார்கள்.

15 நொடி காணொலிக்காக 30 புடவைகளை மாற்றி, அதற்கேற்ற நகையலங்காரமும் செய்த ஒரு பெண்ணைப் பார்த்த பிறகு, பெண்களின் பொறுமைக்கு ஆண்கள் அருகில்கூட வர முடியாது என்று டிக்டாக் கம்பெனிமேல் சத்தியம் செய்கிறேன்.

என் நண்பர் ஒருவரின் குடும்பமே டிக்டாக் பிரபலம். பலமுறை ஒத்திகை பார்ப்பது, பதிவேற்றிய பிறகு லைக்குகள் எண்ணிக்கையைக் கண்காணிப்பது, கமென்ட்டுகளுக்கு பதில் போடுவது, தனிச்செய்தி வந்திருக்கிறதா எனப் பார்ப்பது, மற்றவரின் டிக்டாக் காணொலிகளைப் பார்ப்பது, அதில் இல்லாத ஒன்றைச் செய்ய திட்டமிடுவது என்று, நாள் ஒன்றுக்கு ஐந்து மணி நேரம் செலவிடுவதாகச் சொன்னார். வெறும் டிக்டாக்தானே என்று சாதாரணமாக நினைத்திருந்த என்னை, அதன்பின் இருக்கும் நேரத்தையும் உழைப்பையும் சொல்லி வாயடைக்கச் செய்துவிட்டார். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்தோடு அங்கீகாரத்தையும் சேர்க்க வேண்டும்.

ஆனால், இந்த மீச்சிறு காணொலிகள் யாவருக்குமானவை அல்ல. இதை ரசிக்க, பிரத்யேகமான மனநிலை தேவைப்படும். குறிப்பாக, வீடியோவில் தையாதக்கா என குதிப்பவரின் பின்னால் துணி மூட்டையாகக் கிடந்தால், அதை முதலில் மடிக்கக் கூடாதா எனத் தோன்றக் கூடாது. படிக்கிற பையன்கள் இப்படி நடிகர் பைத்தியமாக இருந்தால், வாழ்க்கை பாழாகாதா என்று கூடுதலாக யோசிக்கக் கூடாது. யாராவது ரொம்பவே இறுக்கமான உடை அணிந்து கால், கையை எசகுபிசக்காகத் தூக்கினால், 15 விநாடிகள் கிழியாமல் இருக்க வேண்டி பிரார்த்திக்கக் கூடாது. அழும் குழந்தையைத் தூக்கி சமாதானப்படுத்தாமல், வீடியோ எடுக்கிறார்களே என்று எரிச்சலடையக் கூடாது.

சில வீடியோக்கள் மொட்டைமாடியில் எடுக்கிறார்கள். அது இதய பலவீனமானவர் களுக்கு அல்ல. நடனமாடிக்கொண்டே விளிம்பு வரை வரும்போது 15 நொடிகள் முடிகின்றன. அவருடைய அடுத்த வீடியோ வந்தால்தான் உண்டு, அதற்குள் அதிர்ச்சியில் பார்ப்பவர் பிராணனை விட்டுவிடக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism