Published:Updated:

ஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019  #TechTamizha

டாப் 10 கேமரா போன்கள் 2019!
Listicle
டாப் 10 கேமரா போன்கள் 2019!

2019-ம் ஆண்டு, சிறந்த கேமராக்களுடன் இந்திய மார்கெட்டில் களமிறங்கிய மொபைல்களின் லிஸ்ட் இது!


மொபைலில் கேமரா... வசதி என்றிருந்த நிலை இன்று, கேமராவில் மொபைல் ஒரு வசதி என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. இன்று, வாடிக்கையாளர்கள் கேமராவுக்குதான் அதிக முக்கியத்துவம் தருகின்றனர். இதை, இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்களும் உணர்ந்துள்ளன. அதனால்தான், 48MP, 64MP, 108MP என கேமராவை முன்னிலைப்படுத்தி விளம்பரங்கள் வருவதை பரவலாகப் பார்க்க முடிகிறது. இப்படி மெகாபிக்ஸலில் பிரமாண்டம் காட்டினாலும் நிஜ உலகில் தரமான படங்கள் எடுப்பது சில ஸ்மார்ட்போன்கள். அப்படி சிறந்த கேமராக்களுடன் 2019-ம் ஆண்டு மார்கெட்டில் களமிறங்கிய 10 மொபைல்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.


ஐபோன் 11 ப்ரோ

ஐபோன் 11 ப்ரோ

தற்போது மார்கெட்டில் இருக்கும் ஆகச் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன், ஐபோன் 11 ப்ரோதான். ஆனால், இதன் விலையும் மிக அதிகம். பர்பாஃமென்ஸ், டிஸ்ப்ளே என ஸ்கோர் செய்யும் இந்த மொபைல் கேமராவில்தான் ஃபுல்மார்க் எடுக்கிறது. டீப் ஃப்யூஷன் போன்ற புதிய மென்பொருள் தொழில்நுட்பங்கள் இருப்பதால், இரவிலும் பகல் போல தொய்வின்றி புகைப்படம் எடுக்கிறது, ஐபோன் 11 ப்ரோ. மெயின் கேமரா, அல்ட்ராவைடு கேமரா, டெலிபோட்டோ கேமரா என மூன்று கேமராக்கள் இருப்பதால், வெரைட்டிக்கும் பஞ்சமில்லை. கண்களை மூடி, வீடியோவில் ஐபோன்தான் பெஸ்ட் எனச் சொல்லிவிடும் அளவுக்கு அதிலும் அத்தனை தரம். 'நல்லா இருக்கு. ஆனா, விலை அதிகம்' என்று நினைப்பவர்கள், ஐபோன் 11 வாங்கலாம். இதில், டெலிபோட்டோ கேமரா மட்டும் இருக்காது.

ரியர் கேமரா-12MP + 12MP (Telephoto) + 12MP (Wide-angle)

ஃப்ரன்ட் கேமரா- 12MP

விலை- 99,990 ரூபாய்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாவே P30 ப்ரோ

வாவே P30 ப்ரோ

ஆண்ட்ராய்டு போன்களில், ஐபோன் அளவுக்கு வெரைட்டியும் தரமும் வேண்டுமென்றால், வாவேவின் (Huawei) P30 ப்ரோவைவிட சிறந்த சாய்ஸ் இருக்க முடியாது. 40MP+20MP+8MP என மொத்தம் மூன்று கேமராக்கள். ஐபோன் போல இரவிலும் நன்றாக பர்ஃபார்ம் செய்கின்றன. இதனால் கேமராதான் முன்னுரிமை என்றால் வாவேவின் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த சாய்ஸ். இது, மற்ற பிரிவுகளிலும் டிஸ்டிங்ஷன் பெறுவது கூடுதல் போனஸ்.

ரியர் கேமரா- 40MP + 20MP(Ultra-wide) + 8MP(Periscope) + DOF சென்ஸார்

ஃப்ரன்ட் கேமரா- 32MP

விலை- 63,990 முதல் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி நோட் 10+

சாம்சங் கேலக்ஸி நோட் 10+

இதன் கேமராக்கள், அப்படியே சாம்சங் கேலக்சி S10 மாடலில் இருப்பதுபோல தெரிந்தாலும், இந்த நோட் 10+ மாடலில் ஆக்மென்டட் ரியாலிட்டி ஆப்களுக்காக DOF (Depth Of Field) சென்ஸார் கூடுதலாக இருக்கிறது. இதனால் Portrait போட்டோக்கள் எடுக்கும்போது உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும். இந்த மாடலின் 48 MP கேமராவில் வீடியோக்களை நைட் மோடிலும் லைவ் ஃபோகஸ் கொண்டு எடுக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. இதன் Zoom-in மைக் வசதியைக் கொண்டு வீடியோவை ஜூம் செய்வதுபோல ஆடியோவையும் ஜூம் செய்ய முடியும். அதாவது, தூரத்தில் இருக்கும் சத்தத்தை ரெகார்ட் செய்ய முடியும். இதில் இருக்கும் வீடியோ எடிட்டரும் சிறப்பாக இருக்கிறது என்பதால், Vlog செய்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.

ரியர் கேமரா-12 MP+ 12 MP (Telephoto)+16 MP (Ultra-wide) + Time of Flight சென்ஸார்

ஃப்ரன்ட் கேமரா- 10 MP

விலை- 73,500 ரூபாய்

கூகுள் பிக்ஸல் 3a

கூகுள் பிக்ஸல் 3a

பிக்ஸல் மொபைல்கள் என்றாலே அதன் கேமராதான் மக்களுக்கு நினைவுக்கு வரும். 48MP, 64 MP என்று பெரிய அளவு கேமரா சென்ஸார்கள் எல்லாம் கிடையாது. ஆனால், மென்பொருளில் கூகுள்தான் கிங். அதனால் 12 MP கேமராவில் தன் இமேஜ் புராசஸிங் அல்காரிதங்கள் வைத்தே மேஜிக் செய்துவிடுகிறது கூகுள். ஆனால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் ப்ரீமியம் மொபைல்கள் அளவுக்கு விலை வைத்திருப்பதால், கூகுளின் போன்கள் இங்கு செல்ஃப் எடுக்கவில்லை . இதை சரிக்கட்ட, பிக்ஸல் 3a என்ற மாடலை அறிமுகப்படுத்தியது கூகுள். இதில், பிக்ஸல் 3-யின் கேமரா அப்படியே இருக்கும். மற்ற விஷயங்களில்தான் மாற்றங்கள் இருக்கும் என்பதால், கேமரா மட்டும்தான் முக்கியம் என்பவர்களுக்கான பர்ஃபெக்ட் சாய்ஸ், பிக்ஸல் 3a. இது போட்டோவில்தான் பெஸ்ட். ஆனால், வீடியோவில் குட்தான், எக்ஸ்சலென்ட் கிடையாது.

ரியர் கேமரா- 12.2 MP

ஃப்ரன்ட் கேமரா- 8 MP

விலை- 33,999 ரூபாய்

சாம்சங் கேலக்ஸி S10+

சாம்சங் கேலக்ஸி S10+

பின்புறம் மூன்று, முன்புறம் இரண்டு என கேலக்ஸி S10+-ல் மொத்தம் ஐந்து கேமராக்கள். இத்தனை கேமராக்கள் இருந்தாலும் எதுவும் மற்றொன்றுக்கு சளைத்ததில்லை. அனைத்துமே சிறப்பாகச் செயல்படுகின்றன. போட்டோ அளவுக்கு வீடியோவிலும் நல்ல ஸ்கோர் பெறுகிறது இந்த கேமராக்கள். ஆனால் இதில் எடுக்கும் Portrait புகைப்படங்கள் மட்டும் சற்றே சொதப்புகின்றன. மற்றபடி, கேமராவைப் பொறுத்தவரை நல்ல ஆல்ரவுண்டர் இது.

ரியர் கேமரா-12 MP+ 12 MP (Telephoto)+16 MP (Ultra-wide)

ஃப்ரன்ட் கேமரா- 10 MP + 8 MP

விலை-64,500 ரூபாய்

ஒன்ப்ளஸ் 7T ப்ரோ

ஒன்ப்ளஸ் 7T ப்ரோ

இந்த வருடத்தின் முக்கிய டிரெண்ட்செட்டர் ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 7 ப்ரோதான். பாப்-அப் செல்ஃபி, மூன்று ரியர் கேமராக்கள் என இதுவரை தொடாத விஷயங்களை 7 ப்ரோவில் முயற்சிசெய்துபார்த்தது ஒன்ப்ளஸ். இது ஹிட்டாக, சிறிய மேம்பாடுகளுடன் ஒன்ப்ளஸ் 7T ப்ரோ வெளியானது. 48MP மெயின் கேமரா, 3X ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 117 டிகிரி ரேஞ்ச் கொண்ட 16MP அல்ட்ரா-வைடு லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள். அதனால் போட்டோக்களில் வெரைட்டி விரும்பும் மக்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமைந்தது இந்த போன். ஒவ்வொரு அப்டேட்டிலும் கேமரா அவுட்புட் இன்னும் சிறப்பாவது கூடுதல் ப்ளஸ். விலை- 53,999 ரூபாய்.

ரியர் கேமரா- 48MP + 16MP (Ultra-wide) + 8MP (Telephoto)

ஃப்ரன்ட் கேமரா- 16MP

விலை- 53,999 ரூபாய்

ரெட்மி K20 ப்ரோ

ரெட்மி K20 ப்ரோ

இதில், 48MP சோனி IMX586 சென்சார் உள்ளது. சாதாரணமாக 12 MP-யில்தான் புகைப்படங்கள் எடுக்கப்படும் என்றாலும் கிளாரிட்டியில் எந்தத் தொய்வும் இல்லை. வைடு-ஆங்கிள் கேமரா, டெலிஃபோட்டோ லென்ஸ் என மேலும் இரண்டு கேமராக்களும் இதில் உள்ளன. இதன் முன்பக்கத்தில் உள்ள 20 MP செல்ஃபி கேமரா, அதிக நபர்களை உள்ளடக்கும் வைடு-ஆங்கிள் செல்ஃபிக்களை எடுக்கிறது. இதனால் 30,000 ரூபாய்க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.

ரியர் கேமரா- 48MP + 13MP (Ultra-wide) + 8MP (Telephoto)

ஃப்ரன்ட் கேமரா- 20MP

விலை- 25,999 ரூபாய்

ஓப்போ ரெனோ 10x ஜூம்

ஓப்போ ரெனோ 10x ஜூம்

ஓப்போ ரெனோ 10x ஜூம், பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது. இது, 10x வரை ஹைபிரிட் ஜூம் செய்யும் . இந்த விஷயத்தில், வாவே P30 ப்ரோவின் குறைந்த விலை வெர்ஷன் இது. ரெனோ 10x ஜூம் 48MP கேமரா மற்றும் வைடு-ஆங்கிள் சென்ஸார் கொண்டுள்ளது. முன் கேமரா ஷார்க் ஃபின் (பாப்-அப் தான்) வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், இது முகங்களைப் புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கிறது.

ரியர் கேமரா- 48MP + 13MP (Ultra-wide) + 8MP (Telephoto)

ஃப்ரன்ட் கேமரா- 16MP

விலை- 36,990 ரூபாய்

ரியல்மீ XT

ரியல்மீ XT

64 MP கேமரா சென்ஸாருடன் இந்தியாவில் வெளியான முதல் ஸ்மார்ட்போன் இதுதான். Pixel Binning முறை மூலம் இந்த சென்ஸாரிலிருந்து 16 MP புகைப்படங்கள் எடுக்கலாம். தேவையென்றால், 64 MP புகைப்படங்களும் எடுக்கலாம். ஆனால், இது அதிக ஸ்டோரேஜ் எடுத்துக்கொள்ளும். இதுபோக, அல்ட்ரா-வைடு, மேக்ரோ என மற்ற கேமராக்கள் இதிலும் இருக்கின்றன. இதனால் மிட்-ரேஞ்ச்சில் நல்ல கேமரா வேண்டுமென்றால், இந்த ரியல்மீ XT-க்கு டிக் அடிக்கலாம்.

ரியர் கேமரா- 64MP + 8MP (wide-angle) + 2MP (Macro) + 2MP

ஃப்ரன்ட் கேமரா- 16MP

விலை- 15,999 ரூபாய்

ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ

15,000 ரூபாய்க்குக் குறைவான விலையில் 48 MP கேமராவை வழங்குகிறது, ரெட்மி நோட் 7 ப்ரோ. குறைந்த ஒளியிலும் தெளிவான படங்களை எடுக்கிறது இதன் கேமரா. பட்ஜெட் செக்மென்ட்டில் நல்ல கேமரா போன் வேண்டுமென்று ஆசைப்பட்டால், நீங்கள் வாங்க வேண்டிய மாடல் இதுதான். விலை - 11,490 ரூபாய்.

ரியர் கேமரா- 48MP + 5MP

ஃப்ரன்ட் கேமரா- 13MP

விலை- 11,490 ரூபாய்