Published:Updated:

`நாங்க இல்லனா டிஸ்ப்ளே அவ்வளவுதான்!' - மொபைலைப் பாதுகாக்கும் வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள்

இந்தக் கண்ணாடிகள்தான் மொபைல் டிஸ்பிளேக்கள் எளிதாக உடைவதைத் தடுக்கின்றன.

வலுவூட்டப்பட்ட கண்ணாடி
வலுவூட்டப்பட்ட கண்ணாடி

மொபைல் கீழே விழுந்து உடைந்துவிட்டால் அதிகமாகச் செலவு வைக்கும் ஒரு விஷயம் அதன் டிஸ்ப்ளேதான். மொபைலில் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது என்பதால் எளிதாக உடைபடுவதும் அதுதான். ஆனால், நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஒன்று தெரியவரும். மற்ற கண்ணாடிகளைப் போல மொபைல் டிஸ்பிளேக்கள் கீழே விழுந்தவுடன் உடைவதில்லை.

உடைந்த டிஸ்பிளே
உடைந்த டிஸ்பிளே

பலமான தாக்குதலுக்கு உள்ளானால் மட்டுமே அதில் கீறல்களைப் பார்க்க முடியும். அப்படி மொபைலில் இருக்கும் கண்ணாடி உடையாமல் இருக்கக் காரணம் அதில் சாதாரண கண்ணாடி மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. வலுவூட்டப்பட்ட சிறப்புக் கண்ணாடிதான் அனைத்து மொபைல்களிலும் இருக்கிறது. அதுவே டிஸ்ப்ளேவை பாதுகாக்கிறது.

எதற்காக வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள் ?

மொபைலில் டிஸ்ப்ளேவின் அளவு சிறியதாக இருந்தவரை அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பழைய மொபைல்களை எடுத்துப்பார்த்தால் அதில் இருப்பது எல்லாமே சாதாரண பாலிகார்பனேட்தான் கண்ணாடிக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கி, டிஸ்பிளேயின் அளவும் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது பாலிகார்பனேட்டைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. காரணம் அதன் மூலமாக டிஸ்பிளேயில் தெரியும் காட்சிகளைத் தெளிவாகப் பார்க்க முடியாது. இருந்த ஒரே வழி கண்ணாடிகள்தான்.

ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன்

ஆனால், அவற்றைப் பயன்படுத்துவதிலும் சிக்கல்கள் இருந்தன. கண்ணாடிகள் எளிதில் உடையும் தன்மை கொண்டவை என்பதால், அதைப் பயன்படுத்த முடியவில்லை. அப்போதுதான் வலுவூட்டப்பட்ட கண்ணாடி சாதாரண கண்ணாடியின் இடத்தை நிரப்பியது. இவற்றுக்கு alkali aluminosilicate கண்ணாடி என்ற பெயரும் உண்டு. இவை கீறல்கள் விழுவதைத் தடுப்பதுடன் எளிதாக உடையாத தன்மையும் கொண்டவை. இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் வலுவூட்டப்பட்ட கண்ணாடியே இருக்கிறது. அப்படி இன்றைக்கு மொபைல்களில் பயன்படுத்தப்படும் சில வலுவூட்டப்பட்ட கண்ணாடிகள் இவை.

Gorilla Glass

அமெரிக்க நிறுவனமான Corning Inc. இந்தக் கண்ணாடியைத் தயாரிக்கிறது. ஐம்பது வருடங்களாகக் கண்ணாடித் தயாரிப்பில் இருக்கும் இந்த நிறுவனம் 2005-க்குப் பிறகு ஸ்மார்ட்போன்களுக்கான வலுவூட்டப்பட்ட கண்ணாடியை உருவாக்க முடிவு செய்தது. அதை உருவாக்கிய பின்னர் அதற்குக் கொரில்லா கிளாஸ் என்று பெயரிட்டது. முதலில் பயன்படுத்தியது ஆப்பிள்தான். 2007-ம் ஆண்டு வெளியான தனது முதல் ஐபோனில் முதல் முறையாகக் கொரில்லா கிளாஸைப் பயன்படுத்தியது. அதன் பிறகு மற்ற நிறுவனங்களும் வாங்கிப் பயன்படுத்தின.

Gorilla Glass
Gorilla Glass

இன்றைக்குச் சந்தையில் பெரும்பான்மையான இடத்தை தனது கையில் வைத்திருக்கிறது கொரில்லா கிளாஸ். அனைத்து மொபைல் நிறுவனங்களுமே இதைப் பயன்படுத்துகின்றன. மொபைல் நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையான அளவுகளில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்கிறார்கள். பல மொபைல்களில் டிஸ்பிளேக்கு மட்டுமல்ல பின்புறத்திலும் கண்ணாடியைப் பார்க்க முடியும். இது மொபைலுக்கு ஒரு பிரீமியம் லுக்கை கொடுக்கிறது. அதில் பயன்படுத்தப்படுவதும் கொரில்லா கிளாஸ்தான். இறுதியாகக் கொரில்லா கிளாஸ் 6 வெளியிடப்பட்டது. இதுவே இப்போது பல பிரீமியம் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.

Dragontrail

இந்தக் கண்ணாடியை Asahi Glass என்ற ஜப்பானிய நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டில் வெளியான டிராகன்ரெயில் கண்ணாடியைக் கொரில்லா கிளாஸுக்கு மாற்றாகவே அனைவரும் பார்த்தார்கள். சாம்சங், ஷியோமி, சோனி எனப் பல நிறுவனங்களின் ஆரம்பக்கால ஸ்மார்ட்போன்களில் இதைப் பார்க்க முடியும்.

Dragontrail
Dragontrail

ஆனால், கடந்த சில வருடங்களாகவே இதைப் பயன்படுத்தும் மொபைல்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இப்போது ஒரு சில மொபைல்களில் மட்டுமே டிராகன் ப்ரெயிலை பார்க்க முடிகிறது. குறிப்பாகக் கூகுள் நிறுவனம் pixel 3a xl ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்தியிருக்கிறது.

Sapphire Glass

மேலே இருக்கும் இரண்டு கண்ணாடிகளுடன் ஒப்பிடுகையில் இருப்பதிலேயே மிக வலுவானது இதுதான். செயற்கையாக உருவாக்கப்பட்ட நீலக்கல்லால் Sapphire Glass தயாரிக்கப்படுகிறது. இதைப் பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த GTAT Advanced Technologies என்ற நிறுவனம் இதைத் தயாரிக்கிறது.

Sapphire Glass
Sapphire Glass

கீறல்கள் விழுவதை முற்றிலுமாகத் தடுக்கும். இது வளையும் தன்மையை மிகக் குறைவாகவே கொண்டுள்ளது. இதன் விலையும் அதிகமாக இருப்பதால் பல நிறுவனங்கள் மொபைல்களில் இதைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டன. ஆப்பிள் அதன் வாட்ச்களில் Sapphire Glass பயன்படுத்துகிறது.