Published:Updated:

`மூன்றாம் பாலின கொடி, பாலூட்டும் ஆண், மாமூத்..!' - வருகிறது 117 புதிய எமோஜிகள்

எமோஜி 2020
எமோஜி 2020

இந்தப் புதிய எமோஜிக்கள் வரும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும்.

இன்று நமது சமூக வலைதளங்களின் உரையாடலில் வார்த்தைகளை விடவும் எமோஜிக்கள்தான் மிக முக்கிய பங்களிக்கின்றன. அப்படியான எமோஜிகளில் இந்த வருடம் புதிதாக 117 எமோஜிக்கள் இணையவுள்ளன. இதன் பட்டியல் 'The Unicode Consortium' வெளியிட்டுள்ளது. இதில் சிறிய பாலின மற்றும் நிற மாற்றங்களுடன் வரும் 55 எமோஜிக்களும் அடங்கும். 62 எமோஜிக்கள் முற்றிலும் புதியவை.

மூன்றாம் பாலினத்தவர்களின் கொடியை எமோஜியாக வெளியிடவுள்ளனர்
மூன்றாம் பாலினத்தவர்களின் கொடியை எமோஜியாக வெளியிடவுள்ளனர்

இந்த எமோஜிக்கள் வாட்ஸ்அப், டிக்டாக் மற்றும் பல முன்னணி தளங்களில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கண்ணீருடன் கூடிய சிரிக்கும் எமோஜி மற்றும் வேறு சில முக எமோஜிக்கள் மட்டுமே ஸ்மைலி வகையில் சேர்கின்றன. இவை ஒவ்வொரு தளத்திலும் சிறு மாற்றங்கள் காணப்பட்டாலும் அதன் கரு மாறாது இருக்கின்றன. இந்த The Unicode Consortium அமைப்புதான் புது எமோஜிக்களை தேவைக்கேற்ப புதிதாக உருவாக்குகிறது. இந்த அமைப்பிடம் புது எமோஜிக்கான ஐடியாவை யார் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். அதை எடுத்து டிசைன் செய்து வெளியிடுகிறது இந்த அமைப்பு. அதிலும், வரும் ஐடியாக்களில் எது சிறப்பாகவும் சமூகத்தில் தீங்கு விளைவிக்காமலும் இருக்கிறதோ அதை மட்டுமே டிசைன் செய்கிறார்கள்.

Vikatan

இம்முறை சிறப்பு என்னவென்றால் மூன்றாம் பாலினத்தவர்களின் கொடியை எமோஜியாக வெளியிடவுள்ளனர். இந்த அறிவிப்பு பலரால் வரவேற்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாததால் இந்த முயற்சியை ஸ்பான்சர் செய்துள்ளன, மைக்ரோசாஃப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள்.

இதற்கு முன்பு பெண்கள் தங்களது குழந்தைக்குப் பாலூட்டும் எமோஜிதான் இருந்துவந்தது. இப்போது ஆணும் பாட்டிலில் பால் கொடுப்பது போன்ற ஒரு எமோஜி வரப்போகிறது. குழந்தை வளர்ப்பு ஒரு பாலினத்துக்கானது என்ற பிம்பத்தை உடைக்கவே இந்த எமோஜி. இந்தப் புதிய எமோஜிக்கள் வரும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதம் வெளியாகும். சில முன்னணி தளங்களில் மட்டும் சற்று முன்பே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின் செல்ல