
2021-ல் புதிதாக ஸ்மார்ட்போன் உலகைத் தொற்றிக்கொள்ளப்போகும் சில ட்ரெண்ட்ஸ் இவை!
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!”... இன்று போன்களின் மைண்ட்வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும். 2010-ல் கீபேடுடன் கைக்கு அடக்கமாகக் குட்டி டிஸ்ப்ளேவுடன் வெறும் அலைபேசிகளாக இருந்த போன்கள் இன்று நம்மை விடவும் ஸ்மார்ட்டாக மாறியிருக்கின்றன. கடந்த பத்து வருடங்களில் யாரும் எதிர்பார்த்திராத அளவு வளர்ந்திருக்கின்றன. ‘இது வெறும் டிரெய்லர்தான், இன்னும் மிக முக்கிய முன்னேற்றங்கள் எல்லாம் வரும் வருடங்களில்தான் இருக்கிறது’ என இப்போதே பல்ஸை எகிற வைக்கின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் திட்டங்கள். அப்படி 2021-ல் புதிதாக ஸ்மார்ட்போன் உலகைத் தொற்றிக்கொள்ளப்போகும் சில ட்ரெண்ட்ஸ் இவை!

5G இப்போ ரெடி!
இந்த வருடம் 5G-யின் முழுப் பாய்ச்சலை உலகமெங்கும் பார்க்கலாம். கடந்த வருடமே பல 5G போன்கள் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை பிரீமியம் போன்கள். சாமான்யனுக்கு எட்டாக்கனிகள் அவை. ஆனால், இந்த வருடம் ‘5G என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா?’ என அனைவருக்கும் அந்த 5G-யை எடுத்துவரவிருக்கின்றன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள். குவால்கம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்னாப்டிராகன் 480 சிப் அதற்கான ஆரம்ப விதை. 5G சப்போர்ட்டுடன் கூடிய மிகவும் விலை குறைந்த புராசஸர் சிப் இதுதான். இதனால் ரியல்மீ போன்ற பட்ஜெட் ஏரியாவில் கலக்கும் நிறுவனங்களிடமிருந்து மிகவும் மலிவான விலையில் புதிய 5G ஸ்மார்ட்போன்களை எதிர்பார்க்கலாம். ‘‘2021-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5G சேவையை இந்தியாவுக்கு ஜியோ எடுத்துவரும் என்று சமீபத்தில்தான் அறிவித்திருந்தார்’’ முகேஷ் அம்பானி. கூகுளுடன் இணைந்து மிகக் குறைந்த விலையில் (சுமார் 4,000 ரூபாய்) ஒரு 5G போன் கொண்டுவரும் திட்டத்திலும் இருக்கிறது ஜியோ. அதனால் 5G புரட்சியை ஆரம்பித்து வைக்கும் ஆண்டாக 2021 நிச்சயம் அமையும்.

கேமரா இருக்கும்... ஆனா இருக்காது!
‘ஸ்மார்ட்போனின் மிக முக்கிய அம்சம் எது’ என இன்று கேட்டால், பலரும் டிஸ்ப்ளேவைதான் டிக் அடிப்பார்கள். பிக்பாஸ் பஞ்சாயத்துகள் தொடங்கி சூப்பர்ஹிட் படங்கள் வரை அனைத்தையும் இன்று ஸ்மார்ட்போன் திரையில்தான் பார்க்கிறோம். அதனால் சமீபகாலங்களில் டிஸ்ப்ளே தரத்தை உயர்த்துவதில் முனைப்பு காட்டிவருகின்றன நிறுவனங்கள். ஆனால், டிஸ்ப்ளேவை பொறுத்தவரையில் தரத்தை விட அளவைதான் முக்கியமானதாகக் கருதுகின்றனர் வெகுஜன மக்கள். இதனால் முடிந்தளவு முன்பக்கம் முழுவதும் டிஸ்ப்ளேவால் நிரப்ப நினைக்கின்றன நிறுவனங்கள். ஆனால், முன்னாலிருக்கும் செல்ஃபி கேமராக்கள் இதற்கு இடையூறாக இருக்கின்றன. இதற்கான தீர்வை நோக்கி நகரத் தொடங்கின நிறுவனங்கள். அதில் ஒன்றுதான், அண்டர் டிஸ்ப்ளே கேமரா. 2020-ல் ZTE Axon 20 5G என்ற அண்டர் டிஸ்ப்ளே போனை அறிமுகம் செய்தது. இதில் செல்ஃபி கேமரா, டிஸ்ப்ளேவுக்குக் கீழ் ஒளிந்திருக்கும். வீடியோ பார்க்கும்போது அது இருப்பதே உங்களுக்குத் தெரியாது. ஆனால், போட்டோ எடுக்கும்போது அந்த இடம் டிரான்ஸ்பரென்ட்டாக மாறிவிடும். இந்த முயற்சியில் பல ஸ்மார்ட்போன்களை இந்த வருடம் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். ஒப்போ, ஷாவ்மி, கூகுள் எனப் பல நிறுவனங்கள் இதைச் சோதனை செய்துபார்த்து வருகின்றன.

இங்கு ஃபோல்டபிள் போன்ஸ் விற்கப்படும்!
டிஸ்ப்ளே சிக்கலைத் தீர்க்கும் மற்றொரு முயற்சி, ஃபோல்டபிள் போன்ஸ். உலக அரங்கில் முதல் முக்கிய ஃபோல்டபிள் போனாக சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு அறிமுகமானது. ஏகப்பட்ட குறைகளுடன் முழுமை பெறாத தயாரிப்பாகவே அது அமைந்தது. இருந்தும் முயற்சியைக் கைவிடாமல், கடந்த வருடம் கேலக்ஸி Z ஃபோல்டு 2-வை அறிமுகம் செய்தது சாம்சங். முந்தைய தவறுகளை முடிந்தளவு குறைத்து மேம்பட்ட தயாரிப்பாக இருந்தது அது. மைக்ரோசாஃப்ட் தொடங்கி சாம்சங் வரை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வடிவில் ஃபோல்டபிள் போன்களை வடிவமைத்தாலும், இந்தியாவில் இவற்றின் விலை ஐபோனைத் தாண்டின. இந்த வருடம் விலை குறைந்த ஃபோல்டபிள் போன்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி எல்லாம் 8K தான்!
முன்பெல்லாம் 720p வீடியோ பார்ப்பதே அரிதினும் அரிதாக இருக்கும். ஆனால், இன்று சர்வ சாதாரணமாக 4K-வில் ஸ்ட்ரீம் செய்கிறோம். மிட்ரேஞ்ச் போன்களிலேயே 4K வீடியோக்களை ரெகார்ட் செய்ய முடிகிறது. இந்த வருடம் 8K வீடியோ ரெகார்டிங்கும் பிரீமியம் போன்களில் கட்டாயம் இருக்கும் வசதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இனி டிஸ்ப்ளேவும் ஃபாஸ்ட் ப்ரோ!
புராசஸர், நெட்வொர்க் மட்டுமல்ல... இந்த வருடம் டிஸ்ப்ளேவும் வேகமெடுக்கப்போகிறது. ரிஃப்ரெஷ் ரேட்டைதான் சொல்கிறேன். ஒன்ப்ளஸ் எப்போது அதன் போன்களில் 90Hz டிஸ்ப்ளே கொடுக்க ஆரம்பித்ததோ, அப்போதே அதிக ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேக்களுக்கு நம் கண்கள் பழக்கப்பட்டுவிட்டன. நொடிக்கு எவ்வளவு தடவை டிஸ்ப்ளே ரிஃப்ரெஷ் ஆகிறதோ, அந்த அளவுக்கு ஸ்மூத்தான அனுபவத்தைத் தரும். இந்த வருடம் பிரீமியம் ஆண்ட்ராய்டு போன்களில் 144Hz நியூ நார்மலாகும் என எதிர்பார்க்கலாம். ஆப்பிள் ப்ரோ மட்டும்தான் இன்னும் 60Hz டிஸ்ப்ளே கொடுத்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். அவரும் இந்த வருடம் வழிக்கு வந்துவிடுவார் எனத் தெரிகிறது.
இந்திய நிறுவனங்களின் கம்பேக்!
கடந்த வருடம் என்னதான் சீன நிறுவனங்களுக்கு எதிரான மனநிலை நிலவினாலும், வாங்க வேறு ஆப்ஷன்கள் இல்லாததால் இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களே கல்லா கட்டின. அந்த நிலையை மாற்றும் முயற்சியில் மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற நிறுவனங்கள் மீண்டும் முழு வீச்சில் இந்த வருடம் களமிறங்கவுள்ளன. ஆனால், தரத்திலும், விலையிலும் சீன நிறுவனங்களுடன் அவை போட்டி போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சார்ஜர் கிடையாது போடா!
பல புதிய வசதிகளுடன் அறிமுகமானலும் ஐபோன் 12 சீரிஸ் அறிமுகத்தில் மக்கள் கவனம் பெற்றது ‘இனி நோ சார்ஜர்’ என்ற அறிவிப்புதான். ஆப்பிள் மட்டுமல்ல... சாம்சங், ஷாவ்மி போன்ற மற்ற நிறுவனங்களும் விரைவில் இந்த பாலிசியை கையில் எடுக்கப்போகின்றனவாம். ‘தேவையில்லாமல் பல சார்ஜர்கள் மக்கள் வீடுகளில் சும்மா இருக்கின்றன. அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், மின்னணுக் கழிவுகளைத் தவிர்த்துவிடுங்கள்’ எனச் சொல்லப்போகிறார்கள். ஆப்பிள் வயர்லெஸ் சார்ஜிங்கை முக்கிய விஷயமாக முன்னெடுத்திருக்கிறது. அதனால், சார்ஜர்களை இப்பவே பத்திரப்படுத்திக்கோங்க!