Published:Updated:

ட்ரோன்கள் இயக்குவதற்கான லைசென்ஸ் பெற என்ன செய்யவேண்டும்? #FAQ

ட்ரோன்
ட்ரோன் ( தே.தீட்ஷித் )

முறையாக ட்ரோன் லைசென்ஸ் பெற என்னசெய்யவேண்டும்? அதற்கு எவ்வளவு செலவாகும்? விரிவாக விளக்குகிறது இந்தக் கட்டுரை.

அரசு விழாவிலிருந்து கல்யாணவீடுகள் வரை ட்ரோன் மூலமாக வீடியோ எடுப்பதுதான் ட்ரெண்ட். காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ட்ரோன் தனக்கென தனி இடத்தையே பெற்றிருக்கிறது. இப்படிப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ட்ரோன்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு தடைவிதித்திருந்தது. பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதை விலக்கியதோடு மட்டுமல்லாமல், ட்ரோன்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகளையும் அப்போது வகுத்திருந்தது அரசு.

ட்ரோன்
ட்ரோன்
தே.தீட்சித்

தற்போது யாரேனும் ட்ரோன்களை இயக்குவதற்கான அனுமதி பெறவேண்டும் எனில், அதன்படிதான் விண்ணப்பித்து பெறவேண்டும். இந்த லைசென்ஸை எப்படிப் பெறுவது? விரிவாக விளக்குகிறார் விகடன் புகைப்படக்கலைஞர் தே.தீட்சித்.

ட்ரோன் என்றால் என்ன? அதன் பயன்பாடு என்னென்ன?

தே.தீட்சித்
தே.தீட்சித்

ட்ரோன் என்றால், Unmanned aerial vehicle (ஆளில்லா பறக்கும் வாகனம்) என்று அர்த்தம். பல்வேறு பயன்பாடுகளுக்காக ட்ரோனை மனிதர்கள் பயன்படுத்திவருகிறார்கள். குறிப்பாக, விவசாயத்தில் பயிர்களைக் கண்காணிக்க, மகசூல் தொடர்பாக கணக்கிட, உரம் மற்றும் மருந்து தெளிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கைப் பேரிடர் சமயத்தில், சேத மதிப்பைக் கணக்கிட, பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, சேதமடைந்த நகரத்தை மறுகட்டமைப்பது தொடர்பாக சர்வே எடுக்க எனப் பல்வேறு விஷயங்களுக்கு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ட்ரோன்களில் எத்தனை வகைகள் உள்ளன?

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படம்)
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படம்)
தே.தீட்ஷித்

பொதுவாக ட்ரோன்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 250 கிராம் எடை கொண்டது நேனோ (Nano) ட்ரோன். 250 கிராமில் இருந்து 2 கிலோ வரை எடை இருக்கக்கூடியது மைக்ரோ (Micro) ட்ரோன். 2 கிலோவிலிருந்து 25 கிலோ வரை எடை இருக்கக்கூடியது ட்ரோன் ஸ்மால் (Small) ட்ரோன். 25 கிலோவிலிருந்து 150 கிலோ வரை எடை இருக்கக்கூடியது மீடியம் (Medium) ட்ரோன். 150 கிலோவிற்கு மேல் இருப்பது லார்ஜ் (large) ட்ரோன். பொதுவாக 2 கிலோவிலிருந்து நாம் ட்ரோன்கள் பயன்படுத்துகிறோம். ராணுவப் பயன்பாடு மற்றும் சினிமாக்களில் அதிக எடையுடன் கூடிய ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ட்ரோன்களை எங்கு பறக்கவிடக் கூடாது?

முக்கொம்பு காவிரி ஆறு (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டப் படம்)
முக்கொம்பு காவிரி ஆறு (ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டப் படம்)
தே.தீட்ஷித்

ட்ரோன்களை குறிப்பிட்ட சில இடங்களில் பறக்க விடக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையத்திலிருந்து 7 கிலோ மீட்டருக்குள் ட்ரோன்களை பறக்கவிடக் கூடாது. காவல்துறை சார்ந்து இடங்களில் ட்ரோன்களைப் பறக்கவிடக் கூடாது. சிறைச்சாலைகள், அரசு கட்டடங்களுக்கு மேலே ட்ரோன்களைப் பறக்கவிடக் கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடக் கூடாது.

ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கு முன்பு கவனிக்க வேண்டியது என்னென்ன?

ட்ரோன்
ட்ரோன்

காற்று அதிகமாக அடிக்கும்போது பெரும்பாலும் ட்ரோனைப் பறக்கவிடக் கூடாது. மரங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் ட்ரோன்களை தாழ்வாகப் பறக்கவிடுவதை தவிர்க்க வேண்டும். பறவைகள் அதிகமாக இருக்கும்போது ட்ரோன் பறக்க விடுவதைத் தவிர்க்கலாம். கழுகு, பருந்து போன்றவை ட்ரோன்களை தாக்கும் வாய்ப்பு அதிகம். மின்கம்பிகள் இருக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்கவிடக் கூடாது. மின்காந்த அலைகளால், ட்ரோன்கள் பாதிக்கப்படும். ட்ரோனைப் பறக்கவிடும்போது செட்டிங்ஸ் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இரண்டு முறை பார்க்கவேண்டும். பேட்டரி 30% கீழ் வரும்பட்சத்தில் உடனே பேட்டரி மாற்றிவிட வேண்டும். ட்ரோனைப் பறக்கவிடும்போது அதைக் கையாள எப்போதும் இருவர் இருப்பது நல்லது. ஒருவர் ட்ரோனை இயக்கினால், மற்றொருவர் அதைக் கண்காணிக்க முடியும். எப்பவும் நமது கண் பார்வையில்தான் ட்ரோனை இயக்க வேண்டும்.

ட்ரோன்களுக்கு லைசன்ஸ் உண்டா...அதை எப்படிப் பெறுவது?

ட்ரோன் பயிற்சி சான்றிதழ்
ட்ரோன் பயிற்சி சான்றிதழ்

நிச்சயமாக ட்ரோன்களுக்கு லைசன்ஸ் வாங்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்புவரை குறிப்பிட்ட வரைமுறைகள் இல்லாததால், பல்வேறு இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட்டனர். இதனால், இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக் கருதப்பட்டதால் மத்திய அரசு ட்ரோன்களுக்கு தடைவிதித்தது. ட்ரோன்கள் இயக்குவது தொடர்பாக பல்வேறு நாடுகளில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதே போல, Directorate General of Civil Aviation என்கிற மத்திய அரசின் அமைப்பானது, ட்ரோன்கள் இயக்குவது தொடர்பாக சில வரைமுறைகளையும், விதிகளையும் வகுத்துள்ளது. இதனால், கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ட்ரோன்கள் மீதான தடையை விலக்கிக்கொண்டது மத்திய அரசு.

சரி, எப்படி ட்ரோன்களுக்கு லைசன்ஸ் வாங்குவது என இனி பார்க்கலாம். https://digitalsky.dgca.gov.in/ என்ற வலைதளத்தில்தான் ட்ரோன்களுக்கான லைசன்ஸ் வாங்க வேண்டும். ட்ரோன்களை இயக்கும் பைலட்டிற்கு எனச் சில தகுதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற ட்ரோன் இயக்கப் பயிற்சி அளிக்கக்கூடிய சில பயிற்கு நிறுவனங்கள் உள்ளன. அதில் பயிற்சிபெற்று சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும். பத்தாவது ஆங்கிலத்தில் படித்து பாஸ் செய்திருக்கவேண்டும். இந்த இரண்டு மட்டுமே முக்கிய தகுதிகள். மேலும், லைசன்ஸ் பெற 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தவேண்டும். இதெல்லாம் ஒருபுறம் என்றால், பாதுகாப்பு காரணத்திற்காக ட்ரோன்களில் Unique Identification Numbers (UIN)என்கிற பிரத்யேக எண்கள் பொறிக்கப்படும். இந்த எண்ணை வைத்துக்கொண்டு, உங்களது ட்ரோன் எங்கு பறந்துகொண்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் பறந்துகொண்டிருக்கிறதா என மத்திய, மாநில பாதுகாப்புத் துறையினரால் கண்காணிக்க முடியும். தற்போது வரக்கூடிய ட்ரோன்களில் இந்த எண் இருக்காது. இதைப் பெற ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி அதே இணையதள முகவரியில் சென்று பதிவு செய்தால், உங்களது ட்ரோனிற்கு UIN நம்பர் கிடைக்கும். 

தற்போது, ட்ரோன் லைசன்ஸ் வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதால், யாருக்கும் லைசன்ஸ் வழங்கப்படவில்லை. நீங்கள் ட்ரோன் லைசன்ஸ் பெறவேண்டும் என்றால், முதலில் உங்கள் ட்ரோனிற்கு UIN நம்பர் வாங்கி வைத்துவிடுங்கள். விரைவில், இந்தக் குழப்பங்கள் நீக்கப்பட்டு, ட்ரோன்களை பறக்கவிடுவது தொடர்பாக விதிகள் மாற்றியமைக்கப்படும்.

அடுத்த கட்டுரைக்கு