Published:Updated:

விலையில் ஐபோனை முந்தும் ஒன்ப்ளஸ்... 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்? #FirstImpressions

ஒன்ப்ளஸ் 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்?
ஒன்ப்ளஸ் 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்?

டிஸ்ப்ளே, கேமரா என அனைத்திலும் கலக்கும் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ... பெரிய அப்கிரேடாக இல்லாத ஒன்ப்ளஸ் 8, 8 சீரிஸ் ஒன்ப்ளஸ் போன்கள் எப்படி இருக்கின்றன?

எப்போதும் இந்தியாவில் பிரமாண்டமாக ஒரு அறிமுக விழா நடத்தி தங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவது ஒன்ப்ளஸ் வழக்கம். இந்தியாவில் மட்டும் அத்தனை வாடிக்கையாளர்களும் ரசிகர்களும் ஒன்ப்ளஸுக்கு உண்டு. ஆனால், தற்போது உலகமெங்கும் இருக்கும் இக்கட்டான சூழல் காரணமாக எளிமையான ஆன்லைன் ஈவென்ட்டில் அடுத்த தலைமுறை 8 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது ஒன்ப்ளஸ்.

இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களான இவற்றில் என்ன ஸ்பெஷல்?

தற்போது நிலவும் சூழலால், இம்முறை இந்தியாவில் விமர்சகர்கள் யார் கைகளுக்குமே ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் போன்கள் வந்து சேரவில்லை. அதனால் முழுமையான விமர்சனம் இந்த முறை செய்ய முடியாத சூழல். நேற்று அறிவிக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும், போன் கிடைக்கப்பெற்ற சில வெளிநாட்டு விமர்சகர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் எப்படி இருக்கிறது, எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்கிறதா என்ற கேள்விகளுக்கு விடை காணுவோம்.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

மிட்ரேஞ்ச் ப்ரீமியம் போன்களுக்கு (ரூ.30,000 - 40,000) பெயர்பெற்ற ஒன்ப்ளஸ் நிறுவனம், ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஃபிளாக்ஷிப் போன்களுக்கு டஃப் கொடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டிலிருந்து தங்களது 'ப்ரோ' வெர்ஷன் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வெளிவந்துள்ளது.

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ

பெயருக்கு ஏற்றாற்போல இதில் இருக்கும் அம்சங்கள் அனைத்துமே 'ப்ரோ'தான். ஏற்கெனவே இது பற்றிய பல விவரங்கள் கசிந்திருந்தன. அவற்றிலிருந்து பெரிதாக மாறுதல்கள் எதுவும் இல்லை.

ஒன்ப்ளஸ்ஸின் ட்ரேட் மார்க் டிசைனுடன் வருகிறது 8 ப்ரோ, பார்ப்பதற்கு செம ப்ரீமியமாக இருக்கிறது. Glacier Green, Onyx Black, Ultramarine Blue என மொத்தம் மூன்று நிறங்களில் வெளிவருகிறது.

டிஸ்ப்ளே
ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் முக்கிய ஹைலைட் இதுதான்!
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ டிஸ்ப்ளே
ஒன்ப்ளஸ் 8 ப்ரோ டிஸ்ப்ளே

6.78 இன்ச் QHD+ Fluid AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. முதல்முறையாக ஒன்ப்ளஸ் போன் ஒன்றில் 120 hz டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு விநாடிக்கு 120 முறை தனது ஸ்கிரீனில் இருப்பதை இதனால் ரி-ஃப்ரெஷ் (மாற்ற) செய்ய முடியும். இதனால் ஒரு ஆப்பிலிருந்து இன்னொரு ஆப்பிற்குச் செல்வது தொடங்கி சின்னச் சின்ன விஷயங்கள்கூட இதில் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும்.

மேலும் 100 கோடி நிறங்கள் வரை இந்த டிஸ்ப்ளேவால் ஒளிபரப்ப முடியுமாம். ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் தற்போதைய பிரீமியம் போன்களின் டிஸ்ப்ளேக்களால் சுமார் 1.6 கோடி நிறங்களை மட்டுமே ஒளிபரப்ப முடியும்.

இதையெல்லாம் வைத்து ஒன்ப்ளஸ் 8 ப்ரோவின் டிஸ்ப்ளேதான் தற்போது உலகிலேயே சிறந்த மொபைல் டிஸ்ப்ளே என்கிறது ஒன்ப்ளஸ். அம்சங்களைப் பார்த்தால் அது உண்மை என்றுதான் தோன்றுகிறது. இதுபோக டிவிகளில் பயன்படுத்தப்படும் MEMC சிப் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது விநாடிக்கு 24 ஃப்ரேம்கள் இருக்கும் சாதாரண வீடியோவையும் டிஸ்ப்ளேவுக்கு ஏற்ப விநாடிக்கு 120 ஃப்ரேம்களாக மாற்றி ஒளிபரப்பும் இது. நெட்ஃப்ளிக்ஸ் தொடங்கிப் பல வீடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களில் இந்த சப்போர்ட் இருக்குமாம்.

Oneplus 8 pro Camera
Oneplus 8 pro Camera
Oneplus

அடுத்தது கேமரா. எப்போதும் மற்ற அம்சங்களில் ப்ரீமியம் என்று ஒப்புக்கொண்டாலும் கேமரா என்று வந்தால் ஆப்பிள், சாம்சங், கூகுள்தான் பெஸ்ட் என ஒன்ப்ளஸை எப்போதும் ஒதுக்கி வைத்துவிடுவர் கேட்ஜெட் விமர்சகர்கள். அது இம்முறை மாறுவதற்கான வாய்ப்புகள் தெரிகிறது. மொத்தம் நான்கு கேமராக்களுடன் வெளிவந்திருக்கிறது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. 48 MP மெயின் கேமரா (சோனி IMX689 சென்ஸார்), 48 MP அல்ட்ரா வைடு கேமரா (சோனி IMX586 சென்ஸார்), 8 MP டெலிபோட்டோ கேமரா மற்றும் ஒரு கலர் ஃபில்டர் கேமரா என நான்கும் ஒவ்வொரு விஷயத்திற்காக இருக்கின்றன. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் அல்ட்ரா வைடு கேமராவுக்கும், மெயின் கேமரா அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுதான். 48 MP சோனி IMX586 சென்ஸாருடன் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் எந்த போனை விடவும் சிறந்த வைடு ஆங்கிள் புகைப்படங்களை எடுக்கும் திறனுடையது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ.

டெஸ்ட் செய்துபார்த்தவர்களும் அதையே சொல்கின்றனர். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் கலர் கேமரா எந்த ஒரு மென்பொருள் உதவியும் இல்லாமல் நேரடியாகவே நிறம் மாற்றப்பட்ட புகைப்படங்களை எடுக்குமாம். இது தேவையில்லாத ஆணிதான்.

பஞ்ச் ஹோல் கேமரா
பஞ்ச் ஹோல் கேமரா

இம்முறை செல்ஃபி கேமரா சாம்சங் போல பஞ்ச் ஹோல் கேமராவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது டிஸ்ப்ளே ஓரமாகச் சின்ன புள்ளியாக இருக்கிறது 16MP செல்ஃபி கேமரா. கடந்த வருடம் வெளிவந்த 7 ப்ரோவில் பாப்-அப் கேமரா கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஃபுல்-டிஸ்ப்ளே அனுபவம் இப்போது மிஸ்ஸிங். எதிர்பார்த்த பிரச்னைகள்கூட பாப்-அப் கேமராவில் வரவில்லை, அப்படியும் ஏன் அதை நீக்கினார்கள் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

குவால்கம் ஸ்னாப்டிராகன் 865
குவால்கம் ஸ்னாப்டிராகன் 865

பேட்டரி, 4,510 mAh. கடந்த மாடல்களிலிருந்து பெரிய முன்னேற்றம் இல்லை. ஆனால், போதுமான அளவுதான். Warp Charging 30T கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம்தான் மேக்எடிஷன் போனில் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டிருந்தது. அதையே இதற்கும் தந்திருந்தால் பேட்டரியும் 'ப்ரோ'வாக இருந்திருக்கும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் டால்பி அட்மாஸ் சப்போர்ட்டுடன் வருகிறது. சமீபத்திய குவால்கம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் பர்ஃபாமன்ஸ் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. 5G சப்போர்ட்டும் இந்த போனுக்கு இருக்கும்.

'ப்ரீமியம் போன்தான். ஆனால், கண்டிஷன்ஸ் அப்ளை' என எப்போதுமே சில அம்சங்களை புறம் தள்ளிவிட்டே அதன் ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஒன்ப்ளஸ். வாடிக்கையாளர்களுக்கும் அது பெரிய குறையாகத் தெரியாது, ஆனால்; ஆப்பிள், சாம்சங் போன்ற ப்ரீமியம் போன்களில் இருப்பது நம்மிடம் இல்லையே என்ற சின்ன ஏக்கம் இருக்கும். அதற்காகவே இம்முறை 'எல்லா விதத்திலும் எங்கள் போன் பிரீமியம்தான்' என அடித்துச் சொல்லியிருக்கிறது ஒன்ப்ளஸ். வயர்லெஸ் சார்ஜிங், IP68 வாட்டர்ப்ரூப் ரேட்டிங் என இதுவரை ஒன்ப்ளஸ் கொடுக்காமலிருந்த அம்சங்களுடன் வருகிறது 8 ப்ரோ. முக்கியமாக வயர்லெஸ் சார்ஜிங் சாதாரண சார்ஜிங் அளவுக்கு (30W) வேகமாக இருக்குமாம். இதுவரை எந்த போனிலும் இவ்வளவு வேகமான வயர்லெஸ் சார்ஜிங் இடம்பெறவில்லை. ஆனால், இதற்காக ஒன்ப்ளஸின் வயர்லெஸ் சார்ஜிங் பேடை தனியாக வாங்க வேண்டும். மற்ற வயர்லெஸ் சார்ஜிங் பேட்களில் 8 ப்ரோ மெதுவாகத்தான் சார்ஜ் ஆகும். ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் இதில் உண்டு. ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் ஹெட்போன்ஸ் போன்றவற்றை இதன் பின் வைத்தே சார்ஜ் செய்துகொள்ள முடியும்.

OnePlus 8 Pro Specs
OnePlus 8 Pro Specs

இப்படி அனைத்து விஷயத்திலும் ஐபோன் 11 சீரிஸுடனும், சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸுடனும் போட்டிப்போடும் ஒன்ப்ளஸ் இம்முறை விலையிலும் அந்த நிறுவனங்களின் உயர்ரக போன்களுடன் போட்டிப்போடத் தவறவில்லை. இன்னும் இந்திய விலை அறிவிக்கப்படவில்லை, அமெரிக்க விலை மட்டுமே தெரியவந்துள்ளது. அங்கு 8 ப்ரோவின் ஆரம்ப விலை 899 டாலர்கள். இதை இந்திய மதிப்புக்கு மாற்றினால் விலை எகிறும். ஆனால், எப்போதும் இந்தியாவில் சற்று குறைவாகவே விலையை நிர்ணயிக்கும் ஒன்ப்ளஸ். 'அமெரிக்க விலையைப் பார்த்து ஏமாற வேண்டும்' எனச் சூசகமாக ட்விட்டரில் பதிவு ஒன்றையுமிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ் இந்தியா.

எப்படியும் பேசிக் வேரியன்ட்டின் விலை 60,000 ரூபாயைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கலாம். இதனால் இம்முறை ஐபோன் 11 விலையைவிடவும் அதிகமாக இருக்கும் ஒன்ப்ளஸ் 8-ன் விலை.

இம்முறை போன்கள் பெரிதாக யார் கைகளுக்கும் போகாததால் விர்ச்சுவலாக AR-ல் ஒன்ப்ளஸ் 8, ஒன்ப்ளஸ் 8 ப்ரோ போன்களை அன்பாக்ஸ் செய்யும் வசதியைக் கொடுத்திருந்தது ஒன்ப்ளஸ். அதில் நாங்கள் செய்த அன்பாக்ஸிங் வீடியோ,

Unbox OnePlus 8 - http://onepl.us/unbox8

Unbox OnePlus 8 Pro - http://onepl.us/unbox8pro

ஒன்ப்ளஸ் 8

இதுதான் ஒன்ப்ளஸ் எப்போதும் கல்லாகட்டும் ஏரியா. ஒன்ப்ளஸ் 1 வந்ததிலிருந்தே இந்தக் 'குறைந்த விலையில் ப்ரீமியம் போன்' என்ற கான்செப்ட்தான் இன்று ஒன்ப்ளஸை இவ்வளவு பெரிய நிறுவனமாக மாற்றியிருக்கிறது. ஆனால், இந்த வருடம் இந்த ஏரியா ஏனோ சறுக்கல் என்றே தோன்றுகிறது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்கிறீர்களா... விளக்குகிறேன். முதலில் ஒன்ப்ளஸ் 8-ன் அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்ப்ளஸ் 8
ஒன்ப்ளஸ் 8

கிட்டத்தட்ட 8 ப்ரோ மாதிரியான டிசைனில்தான் ஒன்ப்ளஸ் 8 இருக்கிறது. பஞ்ச் ஹோல் கேமரா, பின் கேமரா செட்-அப் என தூரத்திலிருந்து பார்த்தால் இரண்டுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது. உள்ளே குவால்கம் ஸ்னாப்டிராகன் 865 புராசஸரும் அதேதான். Glacier Green, Interstellar Glow, Onyx Black என மூன்று நிறங்களில் கிடைக்கும் ஒன்ப்ளஸ் 8.

பெரிய மாறுதல்கள் என்றால் டிஸ்ப்ளேவை சொல்லலாம். 8 ப்ரோவிலிருந்த 120 Hz டிஸ்ப்ளேவிற்கு பதிலாக 90 Hz 6.55-இன்ச் Full-HD+ Fluid AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது ஒன்ப்ளஸ் 8. இது கிட்டத்தட்டக் கடந்த வருடம் வந்த ஒன்ப்ளஸ் 7T-யில் இருக்கும் டிஸ்ப்ளே இது. வாட்டர்ஃப்ரூப் ரேட்டிங், வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இல்லை.

ஒன்ப்ளஸ் 8 கேமராக்கள்
ஒன்ப்ளஸ் 8 கேமராக்கள்

48MP மெயின் கேமரா (சோனி IMX586 சென்ஸார்), 16MP அல்ட்ரா-வைடு கேமரா, மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள். இதுவும் கிட்டத்தட்ட 7T-யில் இருந்தவைதான். டெலிபோட்டோ கேமராவுக்கு பதிலாக அருகில் சென்று சிறிய பொருள்களை ஷூட் செய்ய ஏதுவான மேக்ரோ கேமராவைக் கொடுத்திருக்கின்றனர். இந்த மாற்றத்தைச் சிலர் விரும்பலாம். ஆனால், பலரும் 'மேக்ரோவால் பெரிய பயன் இல்லை, வெரைட்டி மிஸ் ஆகுது பாஸ்' என்றே கருத்து தெரிவித்திருக்கின்றனர். செல்ஃபி கேமரா அதே பஞ்ச் ஹோல் 16 MP கேமராதான்.

4300 mAh பேட்டரியுடன் வரும் இதில் சார்ஜ் பிரச்னை எதுவும் வர வாய்ப்பில்லை. Warp Charge 30T சப்போர்ட்டும் உண்டு என்பதால் மிகவும் வேகமாக சார்ஜ் ஆகிவிடும் ஒன்ப்ளஸ் 8. மற்றபடி ஆண்ட்ராய்டு 10-ன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் Oxygen OS இயங்குதளம் மற்றும் அதன் வசதிகள், UFS 3.0 ஸ்டோரேஜ், Wifi 6 சப்போர்ட் என இரண்டு போன்களிலும் அனைத்துமே அப்-டு-டேட்தான்.

Oxygen OS இயங்குதளம்
Oxygen OS இயங்குதளம்
ஆனால், மொத்தமாகப் பார்த்தால் 7T-யிலிருந்து பெரிய அப்கிரேடாகத் தெரியவில்லை ஒன்ப்ளஸ் 8.
OnePlus 8 Specs
OnePlus 8 Specs

அமெரிக்காவில் ஒன்ப்ளஸின் ஆரம்ப விலை 699 டாலர்கள். இந்தியாவில் சுமார் 45,000 ரூபாய்க்கு வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இந்த விலைக்கான விஷயங்கள் இதில் இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். இதற்கு ஒன்ப்ளஸ் 7T-யை குறைந்த விலையில் வாங்கிவிடலாம்.

பிரீமியம் ஃப்ளிப் போன், பிரமிக்க வைக்கும் S20 சீரிஸ்... இது சாம்சங் மேஜிக்!
Oneplus 7T and Oneplus 8 Specs
Oneplus 7T and Oneplus 8 Specs

இறுதிக் கருத்து!

ஒன்ப்ளஸ் 8 ப்ரோ உண்மையில் ஐபோன் 11, சாம்சங் கேலக்ஸி S20 சீரிஸூடன் போட்டிப்போடும். அதற்கான எல்லாமே அந்தப் போனில் இருக்கிறது. தரமான போன் என்றாலும் 60,000 ரூபாயைத் தாண்டும் ப்ரீமியம் ஏரியா, ஒன்ப்ளஸின் பலம் கிடையாது. ஒன்ப்ளஸ் 8 ப்ரோவில் மொத்த கவனத்தையும் வைத்து எப்போதும் ஹிட்டடிக்கும் ஏரியாவில், ஒன்ப்ளஸ் 8-ல் சறுக்கிவிட்டதோ ஒன்ப்ளஸ் என்றே தோன்றுகிறது. நல்ல போன்தான் என்றாலும் இந்தப் போனில் ஒன்ப்ளஸ் மேஜிக் இம்முறை மிஸ்ஸிங். இன்னும் விலை என்ன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் அதுவரை காத்திருப்போம்!

அடுத்த கட்டுரைக்கு