Published:Updated:

உங்களுக்கான `பெஸ்ட் டிவி' எது? #TvBuyingGuide

இன்றைய சூழலில் எந்த டிவி வாங்குவது, எது என் வீட்டுக்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பம் நிச்சயம் பலருக்கும் இருக்கும். அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.

#TvBuyingGuide

ஷாவ்மி, ஒன்ப்ளஸ், மோட்டோரோலா எனத் தொடர்ந்து மொபைல் நிறுவனங்கள் இந்திய டிவி சந்தையில் களமிறங்கும் ட்ரெண்ட்டை இன்று பார்க்கமுடிகிறது. இதில் ஷாவ்மியின் MI டிவிகள் அறிமுகமான இரண்டு வருடங்களிலேயே அபார வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றன. இதனால் ஏற்கெனவே சந்தையில் இருந்த பெரிய நிறுவனங்களும் டிவிகளில் பல புதுமைகளைக் கொண்டுவரத் தொடங்கியுள்ளன. இப்படி போட்டி அதிகமாக அதிகமாக வாடிக்கையாளனுக்குத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. நாளுக்கு நாள் டிவி டிஸ்ப்ளே தொழில்நுட்பமும் மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இப்படியான இன்றைய சூழலில் எந்த டிவி வாங்குவது, எது என் வீட்டுக்குச் சரியாக இருக்கும் என்ற குழப்பம் நிச்சயம் பலருக்கும் இருக்கும். அவர்களுக்கான கையேடுதான் இந்தக் கட்டுரை.

LED, OLED, QLED
அப்படினா என்னங்கய்யா?

ரொம்ப டெக்னிக்கலாகப் போகாமல் விளக்கவேண்டும் என்றால் LED தான் தற்போது இருப்பதில் பேசிக்கான தொழில்நுட்பம். காட்சிகளை ஒளிபரப்ப ஏதேனும் ஒரு வழியில் டிஸ்ப்ளேவில் இருக்கும் பிக்ஸல்களை ஒளிர்விக்க வேண்டும். LED-யில் ஓரங்களிலிருந்தோ, பின்பக்கத்திலிருந்தோ மொத்தமாக இந்த ஒளி கொடுக்கப்படும். இப்படியான சிம்பிள் செயல்பட்டால் LED-யின் விலை குறைவாக இருக்கிறது. அதனால் அதிகம் விற்கப்படுவது LED டிவிகள்தான். தனியாகப் பார்த்தால் LED-யில் எந்த ஒரு குறையும் தெரியாது.

LED, OLED, QLED
LED, OLED, QLED

இப்போது வரும் பெரும்பாலான LED டிவிகளில் IPS என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும். இது இருந்தால் Viewing Angle அதிகமாக இருக்கும்(178 டிகிரி). அதனால் எந்தக் கோணத்திலிருந்தும் டிவி பார்க்கமுடியும், பெரிய குறைகள் இருக்காது. IPS இல்லையென்றால் நேராகப் பார்த்தால் மட்டும்தான் காட்சிகள் சிறப்பாகத் தெரியும். இதனால் LED டிவி வாங்கும்முன் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது.

QLED குவாண்டம் டாட் தொழில்நுட்பம் என்னும் முறையின் மூலம் LED பேனலை ஒளிர்விக்கும். இதனால் வெள்ளை பிக்ஸல்கள் மிகவும் தெளிவாக இந்த டிஸ்ப்ளேவில் தெரியும். எந்தச் சூழலிலும் பிரைட்னெஸும் சரியாக இருக்கும், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் குறைகள் இருக்காது.

QLED
QLED

OLED டிவிகளில் ஒவ்வொரு பிக்ஸளுக்கும் தனியே ஒளி கொடுக்கப்படும். இதனால் கறுப்பு நிறம் மிக துல்லியமாக இருக்கும்(ஒளியே வராது என்பதால்). OLED மிகவும் மெல்லிய பேனல்களாக இவை இருக்கும். மற்றபடி QLED போல அனைத்துச் சூழலிலும் சிறந்ததாகவே இருக்கும் OLED டிவிகள். இவை ஓரளவு பெரிய சைஸ் டிவிகளில்(>55 இன்ச்) மட்டுமே இருக்கும். OLED, QLED இரண்டுமே காஸ்ட்லி தொழில்நுட்பங்கள்தான்.

HD, FHD, 4K
வித்தியாசம் என்ன?

டிஸ்ப்ளே தொழில்நுட்பங்களைப் பற்றி மேலே பார்த்தோம். இப்போது டிஸ்ப்ளே ரெசல்யூஷன் பற்றிப் பார்ப்போம். இப்போது வரும் டிவிகள் எல்லாம் குறைந்தபட்சமாக HD ரெசல்யூஷனில்தான் வெளிவருகின்றன. HD என்றால் 720p, அதாவது 1280x720(அகலம்xநீளம்) பிக்ஸல்கள் இதில் இருக்கும். இதனால் டிஸ்ப்ளேயில் மொத்தம் 9,21,600 பிக்ஸல்கள் இருக்கும். ஒரு இன்ச்சில் மொத்தம் எத்தனை பிக்ஸல்கள் இருக்கும் என்ற அளவை PPI(pixel per inch) என்று அழைப்பர். டிவியின் அளவு பெரியதாகவும் ரெசல்யூஷன் குறைவாகவும் இருந்தால் இந்த PPI குறைவாக இருக்கும், பிக்ஸல்கள் உடைவது தெரியும். இதனால் ரெசல்யூஷனை வைத்துத்தான் டிஸ்ப்ளே எந்த அளவுக்குத் துல்லியமாக (Clarity) இருக்கிறது என்பது முடிவுசெய்யப்படும்.

FHD அல்லது Full HD என்றால் 1080p(1920x1080) ரெசல்யூஷனை குறிக்கும். இதில் சுமார் 20 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும். 2K என்றால் 2560x1440 ரெசல்யூஷன். இதில் சுமார் 40 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும். 4K என்றால் 3840x2160. இதில் சுமார் 80 லட்சம் பிக்ஸல்கள் இருக்கும்.

HD, FHD, 4K
HD, FHD, 4K

சில வருடங்களுக்கு முன்பே 4K டிவிகள் வரத்தொடங்கிவிட்டாலும் பார்ப்பதற்கு 4K கன்டென்ட் பெரிய அளவில் கிடைக்காமல் இருந்தது. பெரும்பாலான டிவிகள் 1080p வீடியோக்களையே 4K வீடியோவாக மாற்றி ஒளிபரப்பும்(இடைப்பட்ட பிக்ஸல்களை மென்பொருள் நிரப்பிக்கொள்ளும்). ஆனால் இன்று அதற்கான தேவையே இல்லை. 4K HDR ரெசல்யூஷனில் பல வெப் சீரிஸ், படங்கள் வைத்திருக்கின்றன நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள். யூடியூப்பில் கூட 4K வீடியோக்கள் பரவலாக வெளியாகத் தொடங்கிவிட்டது. இதனால் பட்ஜெட் இருந்தால் 4K டிவிகளை வாங்குவது சிறந்தது.

4K ready என்று சில டிவிகள் இருக்கும். இவை 4K வீடியோக்களை ஒளிபரப்பும் திறன் இருக்கும் டிவிகள்தானே தவிர 4K ரெசல்யூஷனில் வரும் டிவிகள் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அளவு
டிவி அளவை எப்படி தீர்மானிப்பது?

டிவி வாங்கும்போது சரியான அளவைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். சிறிய அறைக்கு மிகவும் பெரிய டிவி வாங்குவதும், பெரிய அறைக்கு சிறிய டிவி வாங்குவதும் முழுமையான அனுபவத்தைத் தராது. தேவையை விட பெரிய டிவி வாங்கினால் பிக்ஸல்கள் உடைவதை உங்களால் பார்க்கமுடியும். சிறிய டிவி வாங்குவதனால் டிஸ்ப்ளேவில் இருக்கும் நுணுக்கங்களைப் பார்க்கமுடியாமல் போகும். அதனால் உங்கள் அறைக்குச் சரியான டிவி அளவு எது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். இதை ஒரு சிம்பிள் வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம். டிவியை எவ்வளவு தூரத்திலிருந்து பார்ப்பீர்கள் என்று அளந்துகொள்ளுங்கள். அதை இரண்டால் வகுத்தால் உங்களுக்கான சரியான டிவி அளவு கிடைத்துவிடும். உதாரணத்திற்கு நீங்கள் 5 அடி தூரத்திலிருந்து டிவி பார்க்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 5 அடி என்றால் 60 இன்ச், இதை இரண்டால் வகுத்தால் 30 இன்ச் வரும். 30 இன்ச் அளவில் டிவி கிடைக்காது என்பதால் 32 இன்ச் இந்த தூரத்திற்குச் சரியாக இருக்கும் என முடிவுசெய்யலாம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

எது சரியான டிவி-யின் அளவு?
எது சரியான டிவி-யின் அளவு?

இது FHD டிவிக்களின் அளவை தீர்மானிப்பதற்கான வழிமுறை. 4K டிவி என்றால் அதிக பிக்ஸல்கள் இருக்கும், பிக்ஸல்கள் பெரிய அளவில் உடையாது. இதனால் இன்னும் அருகில் உட்கார்ந்து 4K டிவிகளைப் பார்க்கமுடியும். இதனால் மேலே குறிப்பிட்ட வழிமுறை இதற்கு செட் ஆகாது, இரண்டால் வகுக்க வேண்டியதில்லை. அதாவது 5 அடி(60 இன்ச்) தூரத்தில் பார்ப்பதற்கு 60 இன்ச் டிவியே ஓகேதான். ஆனால் கழுத்து வலி ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இதற்கு முந்தைய சைஸ் வாங்கிக்கொள்ளலாம். இந்தத் தூரத்திற்கு 55 இன்ச் 4K டிவி சரியான சாய்ஸ்.

ஃப்ரேம் ரேட்
கேமர்ஸ் அலர்ட்!
ஹை ரிஃப்ரெஷ் ரேட் கேம்
ஹை ரிஃப்ரெஷ் ரேட் கேம்

நொடிக்கு எத்தனை முறை உங்கள் ஸ்க்ரீன் ரிஃப்ரெஷ் ஆகிறது என்பதைதான் ஃப்ரேம் ரேட் அல்லது ரிஃப்ரெஷ் ரேட் என அழைக்கின்றனர். பல கேம்கள் ஹை ரிஃப்ரெஷ் ரேட்டில் இயங்கவல்லது என்பதால் கேமர்ஸ் இதைப் பார்த்து டிவியைத் தேர்வு செய்ய வேண்டும். படங்கள் பெரும்பாலும் நொடிக்கு 24 ஃப்ரேம்ஸ் (fps) வேகத்தில்தான் படமாக்கப்படுகின்றன. இதனால் அதிக ஃப்ரேம் ரேட் அவற்றுக்குத் தேவைப்படாது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து டிவி நிறுவனங்களுமே படங்களைக் கூடுதல் ஃப்ரேம் ரேட்டுக்கு மாற்றியே ஒளிபரப்பும். இதனால் காட்சிகள் செயற்கையாக இருப்பதாக நீங்கள் உணரலாம். இதை motion smoothing என்பர். படங்கள் பார்க்கும்போது இதை ஆஃப் செய்துகொள்வது நல்லது. ஆனால் டிவியில் லைவ் ஸ்போர்ட்ஸ் பார்க்கும்போது உதவிகரமாக இருக்கும் இந்தத் தொழில்நுட்பம்.

HDR
ஸ்ட்ரீமிங் ரசிகர்களே ப்ளீஸ் நோட் திஸ்!
HDR
HDR

நம் கண்களால் பார்க்கக்கூடிய அனைத்து நிறங்களையும் ஒரு டிவியினால் ஒளிபரப்பவே முடியாது. அதில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே சாதாரண டிவிகள் ஒளிபரப்பும். ஆனால், HDR டிஸ்ப்ளேக்களால் இன்னும் அதிக நிறங்களை ஒளிபரப்பமுடியும். அதாவது ஒரு பிக்ஸலில் அதனால் கூடுதலாகப் பல நிறங்களை ஒளிபரப்ப முடியும். இதனால் இவற்றில் காட்சிகள் இன்னும் ரியலிஸ்டிக்காக இருக்கும்.

இதற்காக இரண்டு பிரபல தரநிலைகள் இருக்கின்றன. ஒன்று டால்பி விஷன் மற்றொன்று HDR 10. இந்தச் சான்றிதழ்கள் இருந்தால், அந்த HDR வீடியோக்களை உங்கள் டிவியால் ஒளிபரப்பமுடியும். 4K-வைப் போல HDR வீடியோக்களும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களின் தயவால் முன்பை விட இன்று எளிதாகக் கிடைக்கின்றன.

ஸ்மார்ட் டிவி
உங்கள் டிவி உண்மையில் 'ஸ்மார்ட்' தானா?

இப்போது டிவி என்றில்லை எந்த எலக்ட்ரானிக் சாதனத்தை எடுத்தாலுமே 'ஸ்மார்ட்' என்ற அடைமொழியுடன்தான் வருகின்றன. அதனால் உண்மையில் சிறந்த 'ஸ்மார்ட்' டிவி எது என்று எப்படி கண்டுபிடிப்பது?

எப்படியும் ஸ்மார்ட் டிவி என்றால் Wifi மற்றும் LAN வசதியுடன் இணையத்துடன் கனெக்ட் செய்யும் வகையிலேயே வெளிவரும். அதனால் அதைத் தாண்டி நாம் பார்க்கவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

முதலில் எந்த இயங்குதளத்தில் உங்கள் டிவி இயங்குகிறது எனப் பாருங்கள். பெரும்பாலானவை ஆண்ட்ராய்டில் அல்லது ஆண்ட்ராய்டு மேல் கட்டமைக்கப்பட்ட ஏதேனும் இயங்குதளத்தில்தான் இயங்கும். சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் தங்களுக்கென சிறப்பு இயங்குதளங்களை வடிவமைத்துள்ளன. இவற்றில் எது உங்களுக்கு எளிதாக செட் ஆகும் என ஒருமுறை அலசிப் பாருங்கள். முக்கியமாக உங்களுக்குத் தேவையான சேவைகள் (நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ...) அனைத்தையும் இவை சப்போர்ட் செய்கிறதா என்று உறுதிசெய்துகொள்ளுங்கள்.

உங்கள் டிவி உண்மையில் 'ஸ்மார்ட்' தானா?
உங்கள் டிவி உண்மையில் 'ஸ்மார்ட்' தானா?

மொபைல், கம்ப்யூட்டர் போல டிவிக்கு அதிக RAM தேவைப்படாது. ஆனாலும் குறைந்தது 2 GB RAM இருந்தால் நல்லது. மேலும் உள்ளிருக்கும் ஆப்களின் தேவைக்காக ஸ்டோரேஜூம் கொடுக்கப்பட்டிருக்கும். இது குறைந்தது 8 GB இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அடிக்கடி ஆப்களின் டேட்டாவை அழிக்க வேண்டிய நிலை வரும்.

இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் வீடியோவை நேரடியாக(wifi மூலம்) டிவியில் ஒளிபரப்பும் வசதிகள் வந்துவிட்டன. இதற்கு chromecast போன்ற வசதி எதாவது டிவியில் கொடுக்கப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

சாதாரண டிவி ஒன்றை வாங்கி அமேசான் ஃபயர்ஸ்டிக், கூகுள் குரோம்கேஸ்ட், ஆப்பிள் டிவி போன்ற கூடுதல் சாதனம் ஒன்றை அதனுடன் இணைத்தாலும் உங்கள் டிவி ஸ்மார்ட் ஆகிவிடும்.

ரிமோட்
ரிமோட் எப்படி இருக்கணும்?
ரிமோட் எப்படி இருக்கணும்?
ரிமோட் எப்படி இருக்கணும்?

முன்பு போல பல பட்டன்களைக் கொண்ட ரிமோட்களையெல்லாம் இன்று பார்ப்பது அரிதுதான். எல்லாமே மினிமலிஸ்டிக் வடிவத்தில்தான் வருகின்றன. இதில் கூகுள் அசிஸ்டன்ட், அமேசான் அலெக்ஸா போன்ற ஏதேனும் வாய்ஸ் கன்ட்ரோல் சப்போர்ட் இருக்கிறதா என்று பாருங்கள். இதன் மூலம் உங்கள் குரல் மூலமே எளிதாக உங்கள் டிவியை இயக்கலாம். இன்று வரும் பெரும்பாலான டிவிகளை மொபைலிலிருந்தும் இயக்க முடியும். இதனால் ரிமோட் குறித்து பெரிதும் கவலைப்பட வேண்டியதில்லை.

இன்புட்/அவுட்புட்
எத்தனை இன்புட்/அவுட்புட் போர்ட் வேண்டும்?

ஒரு டிவியை வாங்கும்முன் சரியான எண்ணிக்கையில் இன்புட்/அவுட்புட் போர்ட்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இதைப் பார்க்காமல் வாங்கும்பட்சத்தில் ஏற்கெனவே வீட்டில் இருக்கும் சாதனங்களைக் கூட டிவியில் கனெக்ட் செய்ய முடியாமல் போய்விடும்.

எந்த போர்ட் எதற்காக...?
எந்த போர்ட் எதற்காக...?
இன்புட்/அவுட்புட் போர்ட்கள்
இன்புட்/அவுட்புட் போர்ட்கள்

இதனால் செட்-அப் பாக்ஸ், ஹோம் தியேட்டர், கேம் கன்சோல் என நீங்கள் வைத்திருக்கும் மற்றும் வருங்காலத்தில் வாங்கப்போகும் சாதனங்களுக்கும் போதிய HDMI, USB போர்ட் இருக்கிறதா என்று செக் செய்துகொள்வது நல்லது.

ஆடியோ
டிவியில் ஆடியோ முக்கியம்தானா?

நிறுவனங்கள், டிவியில் விஷுவல் அனுபவம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தும். டிவி போன்ற சிறிய வடிவத்தில் முழுமையான ஆடியோ அனுபவத்தைத் தருவதும் கடினம்தான். அதனால் சிறந்த ஆடியோ அனுபவம் விரும்புபவர்கள் தனியாக சவுண்ட்பார் அல்லது ஹோம் தியேட்டர் வாங்கிக்கொள்வது நல்லது. அதே சமயம் கொடுக்கும் பணத்துக்கு ஓரளவு நல்ல ஆடியோ டிவியிலிருந்தே வருமா என்பதையும் பார்த்துக்கொள்வது நல்லது.

ஆடியோ தரத்தை இரண்டு அடிப்படையில் பிரித்துவிடலாம். சவுண்ட் அவுட்புட், உங்கள் டிவியில் ஆடியோ எந்த அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கும். இதை Watts அளவில் குறிப்பிட்டிருப்பர். அதிக வாட்ஸ் என்றால் வால்யூம் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம்.

ஆடியோ தொழில்நுட்பம்
ஆடியோ தொழில்நுட்பம்

அடுத்தது ஆடியோ தொழில்நுட்பம், இன்று திரையரங்குகளில் இருக்கும் Dolby, DTS நிறுவனங்களின் ஆடியோ தொழில்நுட்பங்கள் டிவியிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டன. திரையரங்கில் தனித்தனி ஸ்பீக்கர்கள் மூலம் கிடைக்கும் முழுமையான அனுபவத்தை இவற்றால் தரமுடியாது என்றாலும், நிச்சயம் உங்களால் வித்தியாசத்தை உணரமுடியும். இதனால் இந்த ஆடியோ தொழில்நுட்பச் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை உங்கள் டிவி பெற்றிருந்தால் சிறப்பு.

மற்றபடி டிசைன் போன்ற விஷயங்கள் எல்லாம் தனிநபரின் விருப்பம்தான். இந்த டிஜிட்டல் உலகில் ஆன்லைன் விமர்சனங்களையும் புரட்டிப்பார்க்க மறந்துவிடாதீர்கள். சில டிவிகள் ஸ்பெக்ஸில் கில்லியாக இருந்தாலும் பயன்பாட்டின்போது சொதப்பும்.

இந்த விஷயங்கள் ஆராய்ந்தால் போதும் உங்களுக்கான 'பர்ஃபெக்ட் டிவி' எது என்பதை நிச்சயம் தேர்வுசெய்துவிடலாம்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo