Published:Updated:

எங்கு பார்த்தாலும் AMOLED டிஸ்ப்ளேக்கள்... அப்படி என்னதான் ஸ்பெஷல் அதில்?

மு.ராஜேஷ்
க. பாலாஜி

இனிமேல் அனைத்து மொபைல்களிலும் இந்த வகை டிஸ்ப்ளேக்களை அதிகம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒன்ப்ளஸ் 7 ப்ரோ
ஒன்ப்ளஸ் 7 ப்ரோ

அடுத்த வாரம் ஷியோமி நிறுவனத்தின் ரெட்மி K சீரிஸ் மற்றும் ரியல் மீ நிறுவனத்தின் X சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. இந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. அது இந்த ஸ்மார்ட்போன்களில் இருக்கும் AMOLED டிஸ்ப்ளே.

ரெட்மி K சீரிஸ்
ரெட்மி K சீரிஸ்

இதுவரை சாதாரண IPS டிஸ்ப்ளேக்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்த மொபைல் நிறுவனங்கள், படிப்படியாக AMOLED டிஸ்ப்ளே பக்கம் திரும்பிக்கொண்டிருக்கின்றன.

எதற்காக AMOLED டிஸ்பிளே ?

இன்றைக்கு, மொபைல் முதன்மையான பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. அதனால், டிஸ்ப்ளேக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக ஃபுல் வியூ டிஸ்ப்ளேக்கள் அதிகமாகத் தொடங்கியிருப்பதும் அதனால்தான். இதுவரை பிரீமியம் செக்மென்ட்டில் மட்டுமே அதிகமாகத் தென்பட்ட இந்த AMOLED டிஸ்பிளே இப்போது பட்ஜெட் செக்மென்ட் பக்கமும் வரத் தொடங்கியிருக்கிறது.

AMOLED டிஸ்பிளே
AMOLED டிஸ்பிளே

பட்ஜெட் செக்மென்ட்டில் முன்பு வரை சாம்சங் போன்களில் இந்த டிஸ்ப்ளேக்களை அதிகமாகப் பார்க்க முடியும். கூடிய விரைவில் இந்த நிலைமை மாறக்கூடும். Realme X-ன் விலை 20,000 ரூபாய்க்குக் கீழ் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படியிருந்தால், போட்டியும் அதிகமாகும் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட போன்களும் அதிகரிக்கும்.

எதற்காக AMOLED டிஸ்ப்ளேவை பலர் விரும்புகிறார்கள் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காட்சியின் தரம். புகைப்படமோ வீடியோவோ, எதுவாக இருந்தாலும் அதன் துல்லியம் இதில் அதிகமாகவே இருக்கும். காரணம், டிஸ்ப்ளேவில் ஒவ்வொரு பிக்ஸல்களும் தனித் தனியாகச் செயல்படும். அதனால், காட்சியின் துல்லியம் அதிகரிப்பதோடு நிறங்களும் தெளிவாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கறுப்பு நிறம் என்றால் அந்தப் பகுதியில் உள்ள பிக்ஸல்கள் எதுவும் செயல்படாது. அதன் காரணமாக, இயல்பாகவே ஆழ்ந்த கறுப்பு நிறம் காட்சிக்குக் கிடைக்கும்.

 IPS vs AMOLED
IPS vs AMOLED

சாதாரண IPS டிஸ்ப்ளேவைக் கொண்ட மொபைலை கொஞ்சமாகச் சாய்த்தால்கூட தெளிவாகத் தெரியாமல்போகும். ஆனால் AMOLED டிஸ்ப்ளேவை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் காட்சிகள் தெரியும். மேலும், மற்றவற்றுடன் ஒப்பிடும்போது, AMOLED டிஸ்ப்ளே குறைவான அளவு மின்சக்தியை மட்டுமே பயன்படுத்தும் என்பதால், பேட்டரி பேக்அப்பும் நன்றாகவே இருக்கும்.

AMOLED டிஸ்ப்ளேவில் இருக்கும் குறைகள்

இந்த வகை டிஸ்ப்ளேக்களில் பல சிறப்புகள் இருந்தாலும், சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. முதலில் இருப்பது இதன் விலை. வாங்கும்போது கொடுக்கும் விலை ஒரு பக்கம் இருந்தாலும், இதை மாற்றுவதற்கான செலவும் அதிகமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, டிஸ்ப்ளே நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 7 ப்ரோ போனில் இருப்பது AMOLED டிஸ்ப்ளேதான். ஒரு வேளை அதை மாற்றவேண்டிய நிலை வந்தால் 15,000 ரூபாய் செலவு செய்யவேண்டியிருக்கும்.

AMOLED
AMOLED

அடுத்ததாக, AMOLED டிஸ்ப்ளேக்கள் நீண்ட காலம் உழைக்காது. அதோடு ஒப்பிடுகையில், IPS வகை டிஸ்ப்ளேக்கள் வெகு காலம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும். AMOLED டிஸ்ப்ளேக்களில் இந்தப் பிரச்னை உருவாகக் காரணம், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கரிமப் பொருள்கள் (organic compounds) சில காலத்துக்குப் பின்னர் அதன் தன்மையை இழந்துவிடுவதுதான். அதனால் டிஸ்ப்ளேவில் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமானதாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் ஒரு மொபைலை இரண்டு வருடத்துக்கு மேலாகப் பலரும் பயன்படுத்துவதில்லை என்பதால், இது ஒரு பெரிய குறையாகத் தெரியாது.

மொபைல் டிஸ்ப்ளேவுக்கு இனி வரும் காலம் என்பது AMOLED ஆகத்தான் இருக்கப்போகிறது. இப்போதே பல ஆப்கள் டார்க் மோடுக்கு மாறிவிட்டன. அடுத்தடுத்து வெளியாகப்போகும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களும் டார்க் மோடை ஒரு முக்கியமான வசதியாக வைத்தே உருவாக்கப்பட உள்ளன. அதற்கு AMOLED டிஸ்ப்ளேதான் ஏற்றதாக இருக்கப்போகிறது.

ஒன்பிளஸ் 7 ப்ரோ
ஒன்பிளஸ் 7 ப்ரோ

ஒருவேளை, இப்போது நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருப்பது IPS டிஸ்ப்ளேவைக் கொண்ட மொபைலாக இருக்கலாம். அதை மாற்றிவிட்டு, அடுத்த மொபைலுக்கு அப்கிரேடு ஆக நினைத்தால், AMOLED டிஸ்பிளேக்கள் கொண்ட போன் சிறந்த தேர்வாக இருக்கும்.