Published:Updated:

`இறங்கி அடித்திருக்கும் ஆப்பிள்!' புதிய யுக்தி கைகொடுக்குமா? #AppleEvent

ம.காசி விஸ்வநாதன்

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை நேற்றைய நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள். ஆப்பிள் கையில் எடுத்திருக்கும் புதிய யுக்திகள் எதிர்பார்த்த பலன்களை தருமா?

Apple Event 2019
Apple Event 2019 ( Apple.com )

செப்டம்பர் மாதம் நடக்கும் ஆப்பிள் ஈவென்ட்தான் உலகிலேயே அதிகம் கவனிக்கப்படும் டெக் நிகழ்வாக இருக்கும். புதிய ஐபோன்கள் மற்றும் சாதனங்கள் அறிமுகப்படுத்தும் இந்த நிகழ்வு நேற்று இரவு க்யூபெர்டினோவில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடந்துமுடிந்தது. கேமிங் சேவை, ஸ்ட்ரீமிங் சேவை, புதிய ஆப்பிள் வாட்ச், ஐபேட், ஐபோன் என நேற்றும் களைகட்டியது ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கம். வாங்குகிறோமோ, இல்லையோ ஆப்பிள் என்னதான் செய்துகொண்டிருக்கிறது எனக் காண்பதற்கே ஒரு தனிக்கூட்டம் எப்போதும் உண்டு என்பதால் சமூக வலைதளங்களிலும் இதைப்பற்றிய பேச்சுதான். எப்போதும் ஏதாவது ஒரு சின்ன விஷயத்தை வைத்து மக்களை மயக்கிவிடுவது ஆப்பிளுக்கேயான டிரேட் மார்க்.

இந்த வருடமும் அந்த ஆப்பிள் மேஜிக் நம்மை வசீகரிக்கிறதா?

ஆப்பிள் ஆர்கேட்

Apple Arcade
Apple Arcade
Apple.com

கடந்த மார்ச் மாதம் ஆப்பிள் நடத்திய சிறப்பு நிகழ்வில் பல புதிய சேவைகளும், ஓ.எஸ் அப்டேட்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த ஆப்பிள் ஆர்கேட் சேவை. ஆப்பிளின் மேக்புக் ப்ரோ மற்றும் ஐமேக்களில் ஆட பெரிய அளவில் கேம்கள் எதுவுமே இல்லை என்ற குறை பல வருடங்களாக இருந்தது. அதைத் தீர்க்க வரப்போகிறது 'ஆப்பிள் ஆர்கேட்'. இந்த சேவையைப் பெறுவதன்மூலம் பல கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த நூற்றுக்கணக்கான புதிய கேம்களை பதிவிறக்கி ஆடமுடியும். இந்த கேம்கள் அனைத்தும் ஆர்கேடில் மட்டும்தான் கிடைக்குமாம். மேலும் Xbox One மற்றும் PlayStation 4 ஆகிய கன்ட்ரோலர்களுக்கு சப்போர்ட் இருக்கும் என்பதால் உங்களுக்குள் இருக்கும் கேம்மருக்கு முழுத்தீனி போடும் இது. ஏற்கெனவே கூகுளின் கேம் ஸ்ட்ரீமிங் சேவையான ஸ்டேடியா அறிவிக்கப்பட்டு விரைவில் மக்களுக்குக் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், ஆப்பிள் சாதனங்களுக்கு மட்டுமேயான இந்த 'ஆப்பிள் ஆர்கேட்' சேவை அதற்குப் போட்டியாக இருக்கும். இந்தியாவில் மாதம் வெறும் 99 ரூபாய் செலுத்துவதன்மூலம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பெறமுடியுமாம். 1 மாத ஃப்ரீ ட்ரையலும் இந்தச் சேவைக்கு உண்டு.

ஆப்பிள் டிவி ப்ளஸ்

Apple Tv Plus
Apple Tv Plus
Apple.com

இதுவும் கடந்த மார்ச் மாத நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட சேவைதான். ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கேயான பிரத்யேக ஸ்ட்ரீமிங் சேவை இது. ஆப்பிளின் சொந்தத் தயாரிப்பில் வெளியாகும் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இந்தச் சேவையில் காணமுடியும். இதற்காகப் பெரிய திரைநட்சத்திரங்கள் பலரையும் களமிறங்கியுள்ளது ஆப்பிள். நேற்றைய நிகழ்வில் 'அக்வாமேன்' புகழ் ஜேசன் மமுவா நடிக்கும் 'சீ' (See) என்னும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரின் டிரெய்லர் திரையிடப்பட்டது. மேலும் எட்டு நிகழ்ச்சிகளுடன் நவம்பர் 1-ம் தேதி இந்த சேவை கிடைக்கத்தொடங்கும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் பல மொழிகளில் டப் செய்ய இருக்கிறது ஆப்பிள். இப்படியான எக்ஸ்க்ளூசிவ்வான நிகழ்ச்சிகள் தயாரிப்பதன்மூலம் மக்கள் தங்கள் சாதனங்களை வாங்க விருப்பம் காட்டுவர் என நம்புகிறது ஆப்பிள். மேலும் ஏதேனும் புதிய ஆப்பிள் சாதனம் வாங்குபவர்களுக்கு இந்த சேவையை ஒரு வருடம் இலவசமாகவும் வழங்குகிறது ஆப்பிள். மற்ற ஆப்பிள் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை மாதம் 99 ரூபாய் செலுத்திப் பெறமுடியும்.

ஐபேட் 7th ஜென்!

Apple Ipad 7th gen
Apple Ipad 7th gen
Apple.com

7 இப்படியான மதிப்புக்கூட்டல் சேவைகளை அறிவித்ததற்கு பிறகே புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள். முதல் சாதனமாக 7th ஜென் ஐபேட் அறிமுகமானது. சற்றே பெரிய டிஸ்ப்ளே, கீபோர்டு போன்ற சாதனங்களை எளிதாக கனெக்ட் செய்ய உதவும் ஸ்மார்ட் கனெக்ட் வசதி என சில மாற்றங்கள் மட்டும்தான். மற்றபடி ப்ராசஸர் முதல் அனைத்தும் 6th ஜென் ஐபேடில் இருப்பது அப்படியே இதிலும் இருக்கிறது. ஐபேடில் எதாவது அப்டேட் செய்யவேண்டுமே என வம்படியாக இந்த 7th ஜென் ஐபேடை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள். தற்போது 6th ஜென் ஐபேட் சுமார் 27,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுவருகிறது. 7th ஜென் ஐபேட் 29,990 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும்.

ஆப்பிள் வாட்ச் 5 சீரிஸ்!

Apple Watch Series 5
Apple Watch Series 5
AP

ஐபேட் போல இதிலும் பெரிய அப்டேட் என்று எதுவும் இல்லை. எல்லாம் சிறிய சிறிய மாற்றங்கள்தான். அதில் கவனிக்க வைக்கும் வசதி ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான். ஏற்கெனவே மொபைல்களில் இருக்கும் வசதி தற்போது ஆப்பிள் வாட்சுக்கும் வந்திருக்கிறது. அதாவது எப்போதும் குறைந்த அளவு வெளிச்சத்தில், அதிகம் பேட்டரி செலவாகாமல் நேரத்தை மட்டுமாவது காட்டிக்கொண்டிருக்கும் ஆப்பிள் வாட்ச் 5. மற்றதெல்லாம் வாட்ச் 4-ல் இருக்கும் வசதிகள்தான். விற்பனைக்கு வரும்போதே வாட்ச் ஓ.எஸ் 6-வுடன் வெளிவரும் இந்த வாட்ச். 40,900 ரூபாயிலிருந்து இந்த சீரிஸ் 5 வாட்ச்கள் கிடைக்கத்தொடங்கும்.

ஐபோன் 11, 11 ப்ரோ, 11 ப்ரோ மேக்ஸ்

Iphone 11
Iphone 11
AP

இறுதியாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய ஐபோன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதலில் புதிய ஐபோன் 11 பற்றி விவரிக்கப்பட்டது. கடந்த வருடம் வெளியான ஐபோன் XR-ன் அப்டேட்டாகவே இதைப் பார்க்கமுடிகிறது. கூடுதலாக ஒரு வைடு ஆங்கிள் கேமரா, புதிய ப்ராஸசர் சிப் என இதிலும் சிறிய மாற்றங்கள் மட்டும்தான். XR-லிருந்த அதே 6.1-இன்ச் லிக்விட் ரெட்டினா LCD டிஸ்ப்ளேவுடன் அளவிலும் அதே மாதிரிதான் இருக்கிறது ஐபோன் 11. XR போல பல வண்ணங்களிலும் வெளியாகிறது இது.

நேற்று வெளியான மற்றொரு ஐபோன் மாடல் ஐபோன் 11 ப்ரோ. ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை போல வைடு, டெலிபோட்டோ, அல்ட்ரா வைடு என மூன்று கேமரா சென்சார்களுடன் வருகிறது இது. கடந்த வருடம் வெளிவந்த ஐபோன் XS-ன் அப்டேட்டாக இதை எடுத்துக்கொள்ளலாம். இதில் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே HDR 10 சப்போர்டுடன் வருகிறது. இதை இந்த போனின் முக்கிய ஹைலைட்டாகக் கூறலாம். இந்த மாடலின் அண்ணனாக ஐபோன் 11 ப்ரோ மேக்ஸும் வெளியாகியுள்ளது.

IPhone 11 pro
IPhone 11 pro
Apple.com

புதிய மொபைல்களில் வரும் ஆப்பிளின் A13 பயானிக் சிப் அனைத்து விதத்திலும் மிகவும் திறன்படைத்ததாக இருக்கும் எனக் கூறியிருக்கிறது ஆப்பிள். பர்ஃபார்மென்ஸ் விஷயத்தில் ஆப்பிளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்பது உண்மைதான். இதனில் இந்தப் புதிய சிப் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என நம்பலாம்.

அடுத்த படியாக புதிய ஐபோன்களில் ஆப்பிள் அதிகம் நம்பியிருப்பது கேமராக்களைதான். கூடுதல் கேமரா சென்சார்களுடன் வெளிவந்திருக்கின்றன இந்த வருட ஐபோன்கள். முந்தைய ஐபோன்களை போல வீடியோ, போட்டோ என இரண்டிலும் இவையும் வெளுத்துவாங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்தக் கூடுதல் கேமராவிற்காக டிசைனில் மொத்தமாக கோட்டைவிட்டிருக்கிறது ஆப்பிள். புதிய ஐபோன்களின் பின்புறம் இருக்கும் இரண்டு மற்றும் மூன்று கேமரா செட்-அப் போனின் அழகை கெடுப்பதாகவே அமைந்திருக்கிறது. இதை நான் மட்டுமல்ல சமூக வலைதளங்களில் பலரும் கூறிவருகின்றனர். சொல்லப்போனால் நேற்று இரவிலிருந்து உலகமெங்கும் ஐபோன் மீம்ஸ்தான் டிரெண்டிங்.

மற்றபடி ஃப்ரன்ட் கேமராவில் ஸ்லொ-மோஷன் (ஸ்லோஃபி), மேம்பட்ட ஃபேஸ் அன்லாக் என மற்ற வசதிகளில் நல்ல மதிப்பெண்ணையே பெறுகிறது. இம்முறை ஆப்பிள் சாதனங்கள் முழுவதும் மறுசுழற்சி அலுமினியத்தில்தான் தயாராகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆப்பிளை பாராட்டலாம்.

இதுதான் புதிய ஐபோன்களின் விலை!

IPhone features
IPhone features

ஐபோன் 11 64,900 ரூபாய் முதல் கிடைக்கத்தொடங்கும். ஐபோன் 11 ப்ரோ 99,900 ரூபாய்க்கும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 1,09,900 ரூபாய்க்கும் கிடைக்கும். இது கிட்டத்தட்ட கடந்த வருடம் வெளியான ஐபோன்களின் விலைதான். இதில் ஐபோன் 11-வின் விலையை மட்டும் சற்றே குறைவாக நிர்ணயித்திருக்கிறது ஆப்பிள். அதனால் இந்த மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்பலாம். இதில் கூடுதல் போனஸாக பழைய ஐபோன் XR விலையும் இந்த நிகழ்வில் குறைக்கப்பட்டது. இதனால் விலை விஷயத்தில் போன முறைக்கு இந்த முறை ஓகே எனச் சொல்லலாம். ஆனால் என்னதான் கூறினாலும் 50,000 ரூபாய்க்கு இதே மூன்று செட்-அப் கேமராவும், 90Hz டிஸ்ப்ளேவுடனும் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது ஒன்ப்ளஸ் 7 ப்ரோ. இப்படியாக இந்தியாவில் போட்டி அதிகம் இருப்பதால் இங்கு புதிய ஐபோன்கள் சோபிப்பது கடினம்தான். இந்தியா மட்டுமல்ல உலகத்திலும் போட்டி பெருகிவிட்டது.

'இதுதான் புதிய ஐபோன்களின் விலை!' ஆப்பிள் ஈவென்ட் 2019 அப்டேட்ஸ் #AppleEvent

இதனால்தான் குறைந்த விலையில் ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் டிவி ப்ளஸ் என மதிப்புக்கூட்டல் சேவைகள் பக்கம் கவனத்தைத் திருப்பி இறங்கி அடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறது ஆப்பிள். இப்படித் தரமான கேம்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஆப்பிள் சாதனங்களுக்காக மட்டும் உருவாக்குவதன்மூலம் நிச்சயம் மக்கள் தங்கள் பக்கம் திரும்புவர் என்று நம்புகிறது அந்த நிறுவனம். ஆனால் இது அமெரிக்காவுக்கு வேண்டுமானால் சரிவரலாம், இங்கு ஆசியா நாடுகளில் இது சரிவருமா என்பது சந்தேகம்தான். இங்கெல்லாம் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மாதம் 100, 200 ரூபாய் கட்டவே பலரும் யோசிக்கவே செய்கிறோம். இதில் நல்ல ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் சேவைகளுக்காக ஐபோன் வாங்குவதெல்லாம் எப்படி பாஸ் சாத்தியம்?!