Published:Updated:

ஒன்ப்ளஸ், ஆப்பிள் கில்லாவில் களமிறங்கும் ஷாவ்மி... Mi 10 திட்டம் கைகொடுக்குமா?

MI 10 - இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இந்த 'ப்ரீமியம்' பிளான் ஷாவ்மிக்கு கைகொடுக்குமா? விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம்!

இந்தியாவுக்கு வந்து சில வருடங்களே ஆகியிருந்தாலும், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனியிடத்தைப் பெற்று முன்னணி நிறுவனமாக இன்று நிற்கிறது, ஷாவ்மி. குறைந்த விலையில் நிறைவான வசதிகளைக் கொடுப்பதால், இந்தியாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்த நிறுவனம் உருவாக்கிவைத்திருக்கிறது. 'ரெட்மி போன்'னா சூடாகும், வெடிக்கும்' போன்ற கடந்தகால கலாய்களையெல்லாம் ஓரம்கட்டி, தரத்திலும் தன்னை நிரூபித்துவருகிறது ஷாவ்மி. அப்படி இந்தியாவின் முக்கிய கேட்ஜெட் நிறுவனமாக மாறியிருக்கும் ஷாவ்மி, அடுத்த பாய்ச்சலுக்கு ரெடி. ஆம், பிரீமியம் போன்களுடன் போட்டிபோட 'MI 10' ஸ்மார்ட்போனை சில நாள்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது அந்த நிறுவனம். இந்த போனில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்ன? இந்த 'பிரீமியம்' பிளான் ஷாவ்மிக்கு கைகொடுக்குமா? விரிவாக இந்தக் கட்டுரையில் அலசுவோம்!

டிஸ்ப்ளே
குறையொன்றும் இல்லை!
டிஸ்ப்ளே
டிஸ்ப்ளே

6.67 இன்ச் curved Full-HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் (2340 x 1080) வருகிறது MI 10. இது 90 Hz ரி-ஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே. டச் ரெஸ்பான்ஸ் 180 Hz. அதாவது, விநாடிக்கு 90 முறை தனது ஸ்கிரீனில் இருப்பதை, இதனால் ரி-ஃப்ரெஷ் (மாற்ற) செய்ய முடியும். இப்போது வரும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் இருக்கும் வசதியான இதை ஷாவ்மியும் கொடுக்க தவறவில்லை. HDR+ சப்போர்ட், அதிகபட்சமாக 1120 nits ப்ரைட்னெஸ் என டிஸ்ப்ளே விஷயத்தில் பெரிய குறைகள் இல்லை. இதன் முன்புற லுக் என்பது அப்படியே ஒன்ப்ளஸ் போன்களை நினைவுபடுத்துகிறது, நல்ல விதத்தில்தான். 20 MP செல்ஃபி கேமரா பஞ்ச் ஹோல் கேமராவாகக் கொடுக்கப்பட்டது, இதற்கு இன்னொரு காரணம்.

இந்த டிஸ்ப்ளேவுடன் முழுமையான ஆடியோ-விஷுவல் அனுபவத்தைக் கொண்டுவருவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது ஷாவ்மி. இரண்டு ஸ்பீக்கர்களுடன் Mi 10 வருவதால், தெளிவான ஸ்டீரியோ ஆடியோ அனுபவம் இதில் கிடைக்கும்.

கேமரா
சம்திங் மிஸ்ஸிங்!
Mi 10 கேமரா
Mi 10 கேமரா

இன்று, போன்களில் மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது 'கேமரா நன்றாக இருக்கிறதா இல்லையா?' என்பதற்குத்தான். அதனால் இந்த விஷயத்தில் மக்களைக் கவர்ந்திழுக்க 108 MP கேமரா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது ஷாவ்மி. இதிலிருக்கும் சாம்சங்கின் (f/1.69) ISOCELL Bright HMX சென்சார் அளவில் தற்போது சந்தையிலிருக்கும் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சென்சார். இத்தனை பெரிய சென்சார் இருப்பதால், மற்ற நிறுவனங்கள் 4K வீடியோ ரெகார்டிங் சப்போர்ட் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, 8K வீடியோ (24 fps) எடுக்கும் திறனுடன் வருகிறது Mi 10. இதுபோக, மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

13 MP அல்ட்ரா-வைடு கேமரா (f/2.4)

2 MP மேக்ரோ லென்ஸ் (f/2.4)

2 MP டெப்த் சென்சார்

இத்தனை கேமராக்கள் இருந்தாலும், டெலிபோட்டோ கேமரா இல்லாதது ஏமாற்றம்தான். மேலே குறிப்பிட்டதில் கடைசி இரண்டு கேமராக்கள் பெரும் பயனை எடுத்துவருவதாக இல்லை. சில நிறுவனங்கள், அவை இல்லாமலேயே அதன் வேலையைச் செய்கின்றன.

வீடியோவில் Pro மோடு கொடுக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது, மற்றும் பல ஷூட்டிங் ஆப்ஷன்களும் ஷாவ்மியின் கேமரா ஆப்பில் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புராசஸர் & இன்டெர்னல்ஸ்
அப் டு டேட்!
Qualcomm Snapdragon 865
Qualcomm Snapdragon 865

எதிர்பார்த்ததைப் போலவே லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 865 சிப்செட்டுடன் வருகிறது Mi 10. ஒரே 8GB (LPDDR5) RAM வேரியன்ட்தான். ஸ்டோரேஜில் 128 GB, 256 GB என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. இது, மேம்பட்ட UFS 3.0 ஸ்டோரேஜ் என்பதால், ஃபைல் பரிமாற்றங்கள் வேகமாக இருக்கும். MicroSD சப்போர்ட் கிடையாது.

Snapdragon X55 modem இருப்பதால், டூயல் 5G சப்போர்ட்டுடன் வரும் Mi 10. இந்தியாவில் 5G வர இரண்டு வருடங்கள் ஆகும் என்பதால், இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இதுபோக, லேட்டஸ்ட் WiFi 6 சப்போர்ட் இந்த போனில் உண்டு.

மென்பொருள்!
இது வேற மாதிரி MIUI
ஷாவ்மி MIUI
ஷாவ்மி MIUI

ஆண்ட்ராய்டு 10-ன் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கும் MIUI 11 ஓஎஸ்ஸுடன் வருகிறது Mi 10. MIUI என்றதுமே 'இதிலும் விளம்பரங்கள் வருமா?!' என்ற சந்தேகம் உங்களுக்கு எழுந்திருக்கும். வராது. ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக இதை பிராண்ட் செய்வதால், Mi ஆப்ஸுக்குப் பதிலாக கூகுள் ஆப்ஸ்தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பேட்டரி
பக்கா!
4,780 mAh பேட்டரி
4,780 mAh பேட்டரி

4,780 mAh பேட்டரியுடன் வரும் இது, நிச்சயம் ஒரு சார்ஜில் ஒருநாள் முழுவதும் நீடிக்கும். 30W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் உண்டு. இதனால் வேகமாக சார்ஜ் ஆகிவிடும் இதன் பேட்டரி. வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உண்டு. அதுவும் அதே 30W வேகத்தில். ஆனால், இதற்குத் தனியாக ஷாவ்மியின் வயர்லெஸ் சார்ஜிங் பேட் ஒன்றை வாங்கவேண்டியதாக இருக்கும். 10W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பேட்டரி ஏரியாவில் டிஸ்டிங்க்ஷன் பெறுகிறது MI 10.

விலை
ம்ம்ம்ம்! 😕

8GB+128GB- Rs. 49,999

8GB+256GB- Rs. 54,999

உங்களைப் போலத்தான் நாங்களும் Mi 10-ன் அம்சங்களையும், வசதிகளையும் கேட்கும்போது உற்சாகமடைந்தோம். ஆனால், அந்த உற்சாகம் வெகுநேரம் நீடிக்கவில்லை. விலை அறிவிக்கப்பட்டதுமே, பெரும்பாலானவர்களைப் போல எங்களையும் ஏமாற்றம் தொற்றிக்கொண்டது. கேட்ஜெட் விமர்சகர்கள் அனைவருமே Mi 10 சுமார் 40,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என நம்பியிருந்தனர். எங்களுக்கும் அதே நம்பிக்கை இருந்தது. ஆனால், 50,000 ரூபாயைத் தொட்டிருக்கிறது அதன் விலை. இதற்கு இறக்குமதி கட்டணங்கள், அதிக வரி எனப் பல காரணங்கள் கூறுகிறது ஷாவ்மி. ஆனால், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு பொருளில் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கப்போகின்றனர்.

ஷாவ்மி, இந்தியாவில் வெற்றிகண்டதற்கு முக்கியக் காரணமே அதன் விலைதான். பட்ஜெட் பிரிவில் எந்த ஒரு நிறுவனத்தை விடவும் குறைவான விலையில் நிறைவான வசதிகளைத் தந்தது ஷாவ்மி. 'ஏழைகளின் ஆப்பிள்' என்று பெயர் எடுக்குமளவுக்கு விலை உயர்ந்த கேட்ஜெட்களையெல்லாம் வெகுஜன மக்களுக்கு எடுத்துவந்தது. ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட் பேண்ட் தொடங்கி , தற்போது Mi 10-யுடன் வெளியான Truly Wireless Earphones 2 வரை பட்டியல் போட்டுக்கொண்டே இருக்கலாம். ஷாவ்மியின் வெற்றி ஃபார்முலா அதுதான். ஆனால், Mi 10-ல் அதில் கோட்டைவிட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இது முதல்முறையும் அல்ல. கடந்த ஆண்டு வெளிவந்த K20 சீரிஸின் விலையும் கேட்ஜெட் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அது விற்பனையிலும் எதிரொலித்தது.

108 MP camera
108 MP camera
Mi 10-ஐ பொறுத்தவரையில் ஷாவ்மியின் ஒரே ஸ்பெஷல் செல்லிங் பாயின்ட்டாக இருப்பது அதன் 108 MP கேமரா.

ஆனால், அதுவுமே ஒரு முக்கிய விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது. மெகாபிக்ஸல் அளவை மட்டும் வைத்துப் போட்டோ தரத்தை அளந்துவிட முடியாது. ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியைப் பொறுத்தவரை எந்த அளவுக்கு கேமரா சென்ஸார் முக்கியமோ அதே அளவுக்கு, அந்த சென்ஸாரில் பதிவாகும் தகவல்களைச் சரியாக புராசஸ் செய்யும் மென்பொருளும் முக்கியம். இதனால்தான், வெறும் 12 MP கேமரா கொண்டு ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களால் சிறந்த புகைப்படங்களை எடுக்கமுடிகிறது. இது, ஷாவ்மியின் பலம் பொருந்திய ஏரியா இல்லை. 108 MP-ல் அதிகப்படியான தகவல்கள் பதிவாகும். நல்ல ஒளி இருக்கும் இடங்களில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஆனால், மற்ற இடங்களில் சற்றே சறுக்குவதாகவே பிரபல விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏன் இதை விலை அதிகம் என்று குறிப்பிடுகிறோம் என்பதை இன்னும் எளிதாக விளக்க முடியும். போட்டியாளர்களைப் பார்ப்போம். ஒன்ப்ளஸ் 8 கிட்டத்தட்ட இதே வசதிகளுடன்தான் வருகிறது. ஆனால், அதன் விலை 41,999 ரூபாய். 108 MP கேமரா கிடையாது. அதைத் தவிர, மிகவும் சிறுசிறு வித்தியாசங்கள்தாம். ஒன்ப்ளஸ் 8-யே ஏமாற்றம் என்றுதான் போன கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், Mi 10 விலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒன்ப்ளஸ் 8 நல்ல சாய்ஸாகவே தெரிகிறது.

Mi 10 v Oneplus 8 v iPhone SE
Mi 10 v Oneplus 8 v iPhone SE

இன்னும் 5,000 ரூபாய் அதிகம் செலவு செய்தால், ஒன்ப்ளஸ் 8 ப்ரோ வாங்கிவிடலாம். டிஸ்ப்ளேவில் தொடங்கி அனைத்து அம்சங்களிலும் அந்த போன் கில்லி. 49,999 ரூபாய் விலையென்ற போது குறைந்தபட்சம் Quad-HD டிஸ்ப்ளேயாவது Mi 10-ல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் Full-HD+ (2340 x 1080) டிஸ்ப்ளே மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதனால், இந்த விலையில் ஒன்ப்ளஸ் பக்கம் செல்லவே மக்கள் எத்தனிப்பார்கள்.

ஷாவ்மி தன்னை பிரீமியம் பிராண்ட்டாகவும் இங்கு இன்னும் நிலைநிறுத்தவில்லை. விளம்பரங்கள் வரும் ஓ.எஸ் ஒருபுறம் என்றால், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை அப்படியே சின்ன மாறுதல்களுடன் காப்பி அடிக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம். இதெல்லாம் பட்ஜெட் போன் வாங்கும் யாரும் பார்க்கப்போவதில்லை. ஆனால், சுமார் 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருள் வாங்க நினைப்பவர்கள் இதையெல்லாம் நிச்சயம் கருத்தில்கொள்ளவே செய்வார்கள்!

பிராண்ட் இமேஜ் என்றதும் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. 42,500 ரூபாய் விலையில் சமீபத்தில்தான், ஆப்பிள் அதன் ஐபோன் SE-யை அறிமுகம் செய்தது. சர்வதேச விலையைவிட இந்தியாவில் விலை அதிகம்தான் என்றாலும், அதுவும் அதிகம் விற்கவேபோகிறது. பிராண்ட் வேல்யூ அதில் முக்கிய பங்காற்றும். அது இரண்டு வருட பழைய டிசைனையும் புறந்தள்ளச் செய்யும். சராசரி மிடில் கிளாஸ் மக்கள் இந்த விலையில் ஐபோன் வாங்கவே விரும்புவார்கள். இப்படியான சூழலில் ஷாவ்மி 40,000 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருப்பதுதான் சரியாக இருந்திருக்கும்.

மீண்டும் ஒன்ப்ளஸ் 8 ப்ரோவை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். சர்வதேச விலை 899 டாலர்கள். இந்திய மதிப்பில் எப்படியும் 70,000 ரூபாயைத் தொட்டுவிடும் இதன் விலை என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் விலை வெறும் 54,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. முந்தைய ஒன்ப்ளஸ் போன்களைவிட இது அதிகம்தான் என்றாலும், இந்தியாவிற்காக இறங்கி வந்தது ஒன்ப்ளஸ். இந்தியச் சந்தையை எவ்வளவு தெளிவாகப் புரிந்துவைத்திருக்கிறது என்பதற்கான சான்று. இதை ஷாவ்மியும் புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனாவில் உலகமே அடைபட்டிருக்கும் இந்த நேரத்தில், மக்கள் அதிகம் விலை கொடுத்து போன் வாங்க விரும்ப மாட்டார்கள் என்றும் முன்பே ஒன்ப்ளஸ்-ஆப்பிள் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்தச் சூழலிலும், இந்த விலையில் ஷாவ்மி மீது இந்திய வாடிக்கையாளர்கள் நம்பிக்கை வைப்பார்களா என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு