லாக்டௌனுக்குப் பிறகு ஸ்மார்ட்போன் விலைகள் ஏறுமா, இறங்குமா? #DoubtofCommonMan

தற்போது சீனாவில் உற்பத்தி அளவு கடுமையாகச் சரிந்துள்ளது. மறுபக்கம் இந்தியாவில் தேவை என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. எனவே, இதன் காரணமாகவும் விலை உயர வாய்ப்புள்ளது.
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் வாசகர் ஹரிஹரன் `கொரோனாவால் உலக சந்தையில் மாறுதல்கள் ஏற்பட உள்ளன. அதன் காரணமாக மக்களின் வாங்கும் சக்தியும் குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் போன்களின் விலை உயரும் எனக் கூறப்படுகிறதே உண்மையா?' எனக் கேட்டிருக்கிறார். வாசகரின் கேள்வியை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. நாட்டில் நோய் பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் வேலைகள் இன்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதார சூழலைக் கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தி வருகின்றன. அதன் காரணமாக நாட்டில் வெகுவாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரத்தையும் மக்கள் வாழ்வாதாரத்தையும் ஒருசேரப் பாதித்துள்ள இந்தக் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக வரும் நாள்களில் ஸ்மார்ட்போனில் தொடங்கி வாகனங்களின் விலை வரை அனைத்துப் பயன்பாட்டுப் பொருள்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
வாசகரின் கேள்விக்குப் பதில் காணத் தமிழ் டெக் யூடியூப் சேனலின் நிறுவனர் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். ``நிலவும் சூழலில் ஸ்மார்ட் போன்களின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. மாறாக வரும் நாள்களில் ஸ்மார்ட் போன்களின் விலை மாடலுக்கு ஏற்ப 5,000 முதல் 10,000 வரைகூட உயர்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு நடக்கும் எனச் சொல்வதற்குப் பல காரணங்கள் உள்ளன.
முதலாவது ஜி.எஸ்.டி வரி விகித உயர்வு, மத்திய அரசு இந்தியாவில் ஸ்மார்ட் போன்களுக்கு முன்னதாக விதிக்கப்பட்டு வந்த 12 சதவிகித வரியைத் தற்போது 18 சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறது. அதன் காரணமாக ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்திச் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். எனவே, வரும் நாள்களில் இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விலை மாடலுக்கு ஏற்ப அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவில் சமீபத்தில் `தற்சார்பு பொருளாதாரம்' பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியா இன்றளவும் பல விஷயங்களுக்கு அயல் நாடுகளையே சார்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக, மொபைல் போன் விஷயத்தில் இதைக் கண்கூடாகக் காணலாம். இந்திய மொபைல் சந்தை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளையே நம்பி இருக்கிறது. ஷாவ்மி, விவோ, ஓப்போ, ஒன்-ப்ளஸ் என இந்தியர்களின் கையில் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுபவையே. இந்த நிலையில் தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாகப் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. சீனா பாதிப்பிலிருந்து தற்போது மீண்டெழுந்துள்ளபோதிலும் அங்கும் உற்பத்தி மிகக் குறைவாகவே இருக்கிறது. சீனாவின் பலமே அதன் அதிகளவு உற்பத்திதான், அங்கு எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் உற்பத்தி அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு நமக்கு விலை என்பது குறைவாகக் கிடைக்கும். ஆனால், தற்போது சீனாவில் உற்பத்தி அளவு கடுமையாகச் சரிந்துள்ளது. மறுபக்கம் இந்தியாவில் தேவை என்பது அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது, எனவே, இதன் காரணமாகவும் விலை உயர வாய்ப்புள்ளது.
உலகளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் முக்கிய உற்பத்தி தளமாக உருவெடுத்து வரும்போதிலும், இப்போதும் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் வெளிநாட்டிலிருந்தே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் உதிரி பாகங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ஸ்மார்ட்போன் விலை உயர இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமையலாம்.
இந்தியாவில் வரும் நாள்களில் ஸ்மார்ட்போன் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள போதிலும், குறைய வாய்ப்பே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.

மத்திய அரசு சமீப காலமாக 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு அதிக அளவில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பதில் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம். அந்த வகையில் தற்போது மத்திய அரசு இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தியை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் ஐபோன் நிறுவனம் சீனாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உற்பத்தியில் 20 சதவிகிதத்தை தற்போது இந்தியாவுக்கு மாற்றியிருக்கிறது. ஒரு வேளை இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகமாகும் பட்சத்தில் இந்தியர்களுக்கு ஐபோன் குறைந்த விலையில் கிடைக்கும். உதாரணத்துக்கு அமெரிக்காவில் 30,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் இந்தியாவில் இறக்குமதி மற்றும் சேவை வரிகளுடன் சேர்த்து 45,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்சத்தில் நமக்கு அதே மொபைல் போன் 35,000 ரூபாய்க்கே கிடைக்கும்.
அதைத் தாண்டி மக்கள் பொருளாதார ரீதியாக நெருக்கப்பட்டுள்ள இந்த நிலையில், மொபைல் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்க தங்கள் தயாரிப்புகளின் விலையைக் குறைத்தால்தான் உண்டு என்ற நிலை ஏற்பட்டாலும் வரும் நாள்களில் ஸ்மார்ட்போன் விலை குறைவை நம்மால் பார்க்க முடியும்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
