Published:Updated:

`இந்த விலையில் Type-C போர்ட்டா?' - விரைவில் வருகிறது ரெட்மி 8A!

இந்த விலையில் இதுவரை வேறு எந்த போனிலும் Type-C போர்ட் கிடையாது

 Redmi 8A
 Redmi 8A

ஷியோமி நிறுவனம் ரெட்மி 8A போனை வரும் 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடந்த ஜூலை மாதம்தான் ரெட்மி 7A என்ற ஸ்மார்ட்போன் வெளியானது. அது வெளியாகி குறுகிய காலத்துக்குள் இந்த சீரிஸில் அடுத்த போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 Redmi 8A
 Redmi 8A

ரெட்மிக்கு தற்போது கடுமையான போட்டியாக இருந்துவருகிறது ரியல்மீ. மிகக் குறைவான விலையில் ரெட்மி A சீரிஸின் இடத்தை விரைவாகவே ரியல்மீயின் C-சீரிஸ் மொபைல்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. காரணம் ரெட்மி 7A வெளியானபோது அதில் அப்டேட்டான வசதிகள் இல்லை என விமர்சனங்கள் வந்தன. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான மோதலும் நடந்தது. ரியல்மீ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத், இதைப் பற்றி அவரது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ரியல்மீ C2 போனுக்குப் போட்டியாக கூடுதல் வசதிகளுடன் ஒரு போனை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் தற்போது ரெட்மி 8A வெளியாகிறது. இந்த விலையில் வேறு எந்த போன்களும் கொடுக்காத ஒரு வசதியான Type-C போர்ட்டை கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார் ஜெயின்.

Manu kumar jain/  Redmi 8A
Manu kumar jain/  Redmi 8A

பத்தாயிரம் ரூபாய் மற்றும் அதற்கு அதிகமான போன்களில் மட்டுமே தற்போது Type-C போர்ட்டைப் பார்க்க முடியும். தற்போது அதைவிடக் குறைந்த விலையில் Type-C போர்ட்டை கொடுக்கவிருக்கிறது ஷியோமி. அது மட்டுமின்றி ரெட்மி 8A-வில் முந்தைய போனுடன் ஒப்பிடும்போது பெரிய பேட்டரி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.