ஊரடங்கினால் பல தொழில்கள் நலிவடைந்திருக்கிறது என்றாலும் இணையம் சார்ந்த சேவைகள் யாவும் வரலாறு காணாத வளர்ச்சியைக் கண்டிருக்கின்றன. வீடியோ காலிங் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமி, கேமிங் வரை அனைத்து சேவைகளும் சட்டென உயர்ந்திருக்கின்றன. இதற்கு உதாரணமாக ஜூம் வீடியோ காலிங் சேவையைக் கூறலாம். கடந்த டிசம்பர் மாதம் வரை தத்தித் தவழ்ந்துகொண்டிருந்த ஜூமை, வீடியோ காலிங் சேவையின் சூப்பர் ஸ்டாராக மாற்றியது இந்த க்வாரன்டீன். அதேபோல் ஒவ்வொரு சேவையிலும் ஜாம்பவான்களாக இருக்கும் பலருக்கும் இந்த க்வாரன்டீன் ஒரு பொற்காலம் என்றுதான் கூற வேண்டும். ஜூன் மாதத்துக்குப் பிறகு வெளியாகவிருந்த சேவைகள்கூட க்வாரன்டீனில் தேவையறிந்து தற்போதே வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், பொழுதுபோக்கு சேவைகளின் ஒரு பகுதியான கேமிங் எந்த அளவில் இருக்கிறது?

2021-ல் இந்தியாவில் மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 600 மில்லியனைத் தாண்டும்.
எந்தவொரு விஷயமும் எளிமையாக்கப்படும்போது, அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். கேமிங்கைப் பொறுத்தவரை அந்த எளிமை மொபைல்களின் வரவால் சாத்தியம் ஆனது. கம்ப்யூட்டர் மற்றும் கன்சோல்தான் கேமிங்கிற்கான பிரதான தளம் என்ற நிலை மாறி மொபைலும் கேமிங்கிற்கான பிரதான தளம்தான் என்றானது. க்ளாஷ் ஆஃப் கிளான்ஸில் தொடங்கி, போக்கேமான் கோ, மினி மிலிட்டிரி என பல மொபைல் கேம்கள் ஹிட்டடிக்கத் தொடங்கியது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு களத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஆனால், இவை அனைத்துக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அனைத்துமே ஆன்லைன் மூலம் நண்பர்களுடன் இணைந்து குழுவாக விளையாடும் தன்மை கொண்டவை. தனிமையில் விளையாடும் ஆஃப்லைன் விளையாட்டுகளை விடக் குழுவாக நண்பர்களுடன் இணைந்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகள் சாதாரண நபரையும் கேமிங் உலகத்துக்குள் இழுத்துப் போட்டன. அதுதான் மொபைல் கேமிங்கின் அடுத்தகட்ட பாய்ச்சல் என்று கூட சொல்லலாம்.
இன்று அனைவரும் 'Get to the safe zone' என ஒடிக் கொண்டிருப்பதற்கும் குழுவாக ஆன்லைனில் விளையாடும்போது கிடைத்த வசீகரமான மனநிலையே காரணம். பாராட்டுக்கு மயங்காத மனம் இவ்வுலகில் உண்டோ? நிஜ உலகில் பலருக்குக் கிடைக்காத பாராட்டு நிழல் உலகில் நிறையவே கிடைக்கிறது. கேம்தான் என்றாலும் ஒவ்வொரு முறை தம் எதிரியை வெற்றி கொள்ளும்போதும், நண்பர்களின் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போதும் கிடைக்கும் பாராட்டு ஆன்லைன் கேமிங்கின் மீதான வசீகரத்தை அதிகரித்தது. மலிவான விலையில் கிடைத்த டேட்டா மற்றும் ஸ்மார்ட் போன்களும் கேமிங் பயன்பாடு உயர மற்றொரு காரணம். மொபைல் கேமிங் பயன்பாடு கன்சோல் கேமிங் நிறுவனங்களையும் கவர கன்சோல் மற்றும் கணினியோடு சேர்த்து மொபைல்களுக்கும் அதே தரத்திலான மிரட்டலான கேமாக வெளியானது நம் பேவரைட் பப்ஜி (Pubg).

ஒலிம்பிக்கில் Esport போட்டிகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
கேம் ஸ்ட்ரீமிங்:
2000-க்குப் பிறகு பவர்புல்லான கன்சோல்கள், சிறப்பான கிராபிக்ஸோடு கேம்கள் வெளியாகத் தொடங்கின. கேமிங் வளரத் தொடங்கியது. அதன்பிறகு 2010-களில்தான் கேமிங் வீடியோக்கள் பிரபலமாகத் தொடங்கின. ஆன்லைன் விளையாட்டு வீரர்கள், விளையாடுவதை வீடியோவாக எடுத்து அதைப் பதிவிட்டனர். பின்னர், விளையாடும்போதே நேரலையாக கண்டுகளிக்கும் வகையில் பல தளங்கள் உருவாயின. யூடியூப், கேமிங்கிற்கென தனிப் பக்கத்தை உருவாக்கிக் கொடுத்தது. கேமிங்கிற்கென Twitch போன்ற தனிப்பட்ட சேவைத் தளங்களும் உருவானது. 2014-ல் பிரபலமான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களைவிட Twitch போன்ற கேமிங் தளங்கள் பிரபலமானது. அதன் மூலம் கேமர்கள் சம்பாதிக்கவும் தொடங்கினார்கள்.
Esports:
கேம் ஸ்ட்ரீமிங் தளங்கள் உச்சத்தைத் தொட்ட அதே நேரத்தில் தான் Esports போட்டிகளும் வளர்ச்சியடையத் தொடங்கின. உலகளவில் Esports போட்டிகள் 2000-களிலேயே தொடங்கிவிட்டாலும் 2010-க்குப் பின்னர் அதன் வளர்ச்சி வேகமாக இருந்தது. உலகளவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் அதிகளவில் நடத்தப்பட்டது 2010-க்குப் பின்னர்தான். சில வருடங்களுக்கு முன்பு வரை கன்சோல் மற்றும் கணினிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்ட போட்டிகள் தற்போது மொபைல் கேம்களுக்கும் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பப்ஜி விளையாட்டுக்கான போட்டியை இந்தியா டுடே நடத்தியது. 2,50,000 ரூபாய் வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் ஏப்ரல் 23 முதல் 26 வரை போட்டி நடத்தப்பட்டது. 2016-ல் இந்தியாவில் Esports போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை 77 லட்சம். 2018-ல் அது 5.03 கோடியாக உயர்ந்தது. இதுவே இந்தியாவில் கேமிங் எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. உலகளவில் இந்த கேமிங் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் இனி வரும் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் Esport போட்டிகளை நடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
உலகம் முழுவதும் இருக்கும் பப்ஜி மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 555 மில்லியன். அவற்றுள் 21 சதவிகிதம், அதாவது 116 மில்லியன் இந்திய கேமர்கள்.

மொபைல் கேமிங்:
மொபைல் கேமிங் பயனர் எண்ணிக்கையில் 300 மில்லியன் பயனர்களுடன் முதல் ஐந்து இடத்துக்குள் இருக்கிறது இந்தியா. 6,200 கோடி ரூபாய் அளவிலான மதிப்புக்கு இந்தியாவில் கேமிங் சந்தை வளர்ச்சி அடைந்திருக்கிறது. தற்போது இந்தியாவில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுகளாக பப்ஜி (Pubg), கால் ஆஃப் ட்யூட்டி (Call of Duty) மற்றும் ஃப்ரீ பயர் (Free fire) ஆகியவை உள்ளன. உலகம் முழுவதும் இருக்கும் பப்ஜி மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 555 மில்லியன். அவற்றுள் 21 சதவிகிதம், அதாவது 116 மில்லியன் இந்திய கேமர்கள். 2021-ல் இந்தியாவில் மொபைல் கேமர்களின் எண்ணிக்கை 600 மில்லியனைத் தாண்டும். மேலும், கேமிங் சந்தை 1.1 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கும் எனக் கணித்திருக்கின்றனர்.

Paytm First Games செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த க்வாரன்டீனில் 200 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
க்வாரன்டீன் கேமிங்:
கிராபிக்ஸ் எல்லாம் தேவையில்லப்பா... என க்வாரன்டீனில் அமைதியாக லூடோ ஆடிக்கொண்டிருக்கிறது புதிய கேமிங் சமூகம். க்வாரன்டீனில் பொழுதைப் போக்கப் புதிதாக ஏதாவது ஒரு பொழுதுபோக்கு அனைவருக்கும் தேவைப்பட்டது. எவ்வளவு நேரம்தான் சினிமா பார்ப்பது என அலுப்பவர்களைச் சுண்டி இழுத்தது மொபைலில் விளையாடப்படும் சிம்பிளான விளையாட்டுகள். பேடிஎம்-ன் மொபைல் கேமிங் செயலியான Paytm First Games செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்த க்வாரன்டீனில் 200 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும், கேம் விளையாடுபவர்கள் பெரும்பாலும் 15 வயதிலிருந்து 25 வயது வரை இருப்பவர்கள்தான் அதிகம். இந்த க்வாரன்டீனில் கேம் விளையாடுபவர்களில் 25-35 வயதுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளது மற்றொரு கேமிங் நிறுவனமான வின்சோ (Winzo).