2022 `கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்வில், கூகுள் அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை இந்தியா வந்தார்.

மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் சுந்தர் பிச்சைக்கு இடையே உரையாடல் நிகழ்த்தப்பட்டது.
சுந்தர் பிச்சை பேசுகையில், ``கூகுள் நிறுவனம் இந்திய ஸ்டார்ட் - அப்களில் கவனம் செலுத்தி வருகிறது. கூகுளின் இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதி (ஐடிஎஃப்) மூலமாக, ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் 300 மில்லியன் டாலர்களில், நான்கில் ஒரு பங்கு பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
தொழில்நுட்பம் பெரிய அளவில் செயல்பட்டு, உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையைத் தொடுகிறது. இது பொறுப்பான மற்றும் சீரான ஒழுங்குமுறையை வடிவமைக்க அழைப்பு விடுக்கிறது.
இந்தியா மக்களுக்கான பாதுகாப்புகளையும், சமநிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்தியாவும் ஒரு பெரிய ஏற்றுமதி பொருளாதாரமாக இருக்கும். இது திறந்த மற்றும் இணைக்கப்பட்ட இணையத்தால் பயனடையும். அந்த சமநிலையைச் சரியாகப் பெறுவது முக்கியம்.
இந்தியாவின் ஸ்டார்ட் - அப் சுற்றுச்சூழல் முன்னேறி வருகிறது. அதோடு உலகளவில் கவனிக்கப்பட்டும் வருகிறது. நாடு டிஜிட்டல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. திறந்த மற்றும் இணைக்கப்பட்ட இணையம் இந்தியாவிற்கு முக்கியம்.

இந்தியாவிற்கு லீடர்ஷிப் ரோல் உண்டு. நீங்கள் மக்களுக்கான பாதுகாப்புகளைச் சமநிலைப் படுத்தி, புதுமையான கட்டமைப்புகளை உருவாக்குவதை உறுதி செய்வது முக்கியம். இதன் மூலம் நிறுவனங்கள் சட்டத்தின் கட்டமைப்பில் உறுதியுடன் புதுமைகளை உருவாக்க முடியும்’’ என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``பயனர்களின் தரவை பாதுகாக்க, இணைய பொருளாதாரத்தைச் சுற்றி வலுவான சட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கப் பலவித சட்ட மசோதாக்களை அரசு உருவாக்கி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு விரிவான சட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவான இலக்கை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். முதலில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான தொலைத்தொடர்பு மசோதா, இரண்டாவது குடிமக்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு மசோதா, அடுத்து 'டிஜிட்டல் இந்தியா' மசோதா எங்களிடம் உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த மசோதாக்களை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.