Published:Updated:

அதாவது தோழர்களே... Clubhouse மற்றும் ட்விட்டர் ஸ்பேசஸ் அலப்பறைகள்!

ட்விட்டர் ஸ்பேஸஸ் மற்றும் கிளப்ஹவுஸ்

ஆக மொத்தத்தில் ஸ்பேசஸ், கிளப் ஹவுஸ் மூலம் இலக்கிய, பெண்ணிய, போராளித்துவ, ஜாலி அரட்டைகளுக்குள் இப்போது தமிழ் பயனாளர்களும் உள் நுழைந்து தக்காளி சட்னிக்களையும் ஜாம்களையும் தெறிக்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

அதாவது தோழர்களே... Clubhouse மற்றும் ட்விட்டர் ஸ்பேசஸ் அலப்பறைகள்!

ஆக மொத்தத்தில் ஸ்பேசஸ், கிளப் ஹவுஸ் மூலம் இலக்கிய, பெண்ணிய, போராளித்துவ, ஜாலி அரட்டைகளுக்குள் இப்போது தமிழ் பயனாளர்களும் உள் நுழைந்து தக்காளி சட்னிக்களையும் ஜாம்களையும் தெறிக்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

Published:Updated:
ட்விட்டர் ஸ்பேஸஸ் மற்றும் கிளப்ஹவுஸ்

டிஜிட்டல் உலகின் அடுத்தகட்ட பாய்ச்சலில் மிக முக்கியமான இரண்டு விஷயங்களை இணையப் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது ட்விட்டரும், க்ளப் ஹவுஸ் என்ற செயலியும்!

பாட்காஸ்ட் பக்கம் டிஜிட்டல் பார்வை இருக்கும்போதே வந்திருக்கும் இந்த இரண்டு விஷயங்களும்தான் தற்போதைய ட்ரெண்ட்!

கருத்துகளை கணீரென பகிரும் ஆடியோ வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததுதான் அவற்றின் முதல் வெற்றி. இதன்மூலம் விவாதிக்கலாம், கலந்துரையாடலாம், தர்க்கம் செய்யலாம். இது போதாதா? இன்றைய தேதியில், ''என்னது நீங்களும் மீன் குழம்புப் பிரியரா..? வாங்க பாஸு ஒரு ஸ்பேசஸ் போட்ருவோம்'', ''ஏய் உனக்கும் பிரியாணி புடிக்காதா..? போட்றா ஸ்பேச!" - என ஒரு டாபிக் கிடைத்தால் விவாதிக்க நாள் நட்சத்திரம் பார்க்காமல் ஆரம்பித்து விடுகிறார்கள். சந்து எனப்படும் ட்விட்டருக்குள் நீங்கள் பெரிய வஸ்தாது என்றால் கூட்டம் அம்மும். ட்விட்டர் பிரபலங்களில் பலர், ''மாப்ளே... வெள்ளி விழா ஸ்பேசஸ் டா... வந்திரு!' என புதுவீட்டுக்கு பால்காய்ச்ச அழைப்பதைப்போல 25-வது ஸ்பேசஸ் நிகழ்வுக்கு அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கிளப்ஹவுஸ்
கிளப்ஹவுஸ்

யூ-டியூபையே நம்பர் ஒன் சர்ச் இன்ஜினாக மாற்றிய மில்லினியல்ஸுக்கு வரப்பிரசாதமாய் மாறிவிட்டது இந்த ஆடியோ வசதி. 'கூகுள் மீட், ஜூம்லாம் போன் யூஸ் பண்றது மாதிரிதான் இருக்கு. ஒரு த்ரில் இல்லை. ஆனால் ஸ்பேசஸில் கெத்து காட்ட முடியுது!' என்கிறார்கள். ஆனாலும், மேட்டிமைத்தனமான விவாதங்கள், அரைவேக்காட்டு தலைப்புகளாலும் இன்னும் சில நாள்களுக்குள் ஸ்பேசஸ் போரடிக்கவும் செய்யும் என்கிறார்கள் இணையவாசிகளில் சிலர்.

முதலில் ஸ்பேசஸ் எப்படிச் செயல்படுகிறது என பார்ப்போம். 'ட்விட் ப்ளஸ்' என்ற பகுதியில் ஸ்பேசஸ் ஆப்ஷனுக்குள் நுழைய முடியும். இப்படி எல்லோரையும் பேச ஓரிடத்தில் அழைத்தால், சந்தைக்கடை போல சந்துப்பகுதி மாறிவிடாதா? அதற்குத்தான் ஸ்பேசஸில் சில கட்டுப்பாடுகளை டெக்னிக்கலாக விதித்து வைத்திருக்கிறார்கள். ஸ்பேசஸ் நிகழ்ச்சியை ஒருவர் ஒருங்கிணைக்கலாம். நிகழ்ச்சியில் பேச்சாளர்களாக 13 பேர் வரை அதிகபட்சமாக இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் மீதிப்பேர் அனைவரும் லிசனர்ஸ் எனப்படும் பார்வையாளர்களாக வேண்டுமானால் இருக்கலாம். ஒருங்கிணைக்கும் ஹோஸ்ட் நினைத்தால் 'மைக்கை அவர்கிட்ட கொடுங்க!' என பார்வையாளரில் யாரையேனும் பேச அழைக்கலாம். இல்லையென்றால் கப்சிப் கருவாட்டு மண்டைகளாக கடைசிவரை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டியதுதான்.

''ஆகா ஒண்ணு கூடிட்டாய்ங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!'' என எல்லோரையும் பேசவைக்கும் இந்த ஸ்பேசஸ் இப்போது ஆடியோ லான்ச் உள்ளிட்ட விழாக்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். நியூ நார்மல் வாழ்க்கையில் இனிமேல் அரசியல் கட்சிகளின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்களையும்கூட இதில் நடத்திவிடலாம். வேட்டி உருவல்களும், நாற்காலி வீச்சையும் இதன்மூலம் தவிர்க்கலாம். இதெல்லாம் செல்போனிலேயே கான்ஃபரென்ஸ் கால் வசதியாக எல்லா போனிலும் ஏற்கெனவே இருப்பதுதானே என நீங்கள் கேட்கலாம். ஆனால், சமூக வலைதளமான ட்விட்டர் இதை செயல்வடிவமாக்கிக் கொடுத்திருப்பதன் மூலம் எல்லோருக்கும் புகழ் வெளிச்சத்தையும், மேடையையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது. பல நிறுவனங்கள் ஸ்பேசஸில் வாடிக்கையாளர்களுடன் தேதி, நேரம் என முன்கூட்டியே அறிவித்து கலந்துரையாடல் நடத்த ஆரம்பித்துவிட்டன. எதிர்காலத்தில் மார்க்கெட்டிங் டூலாகவும் மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது.

எது வந்தாலும் போராளிகள் அங்கு கடைவிரிக்காமலா? பல்வேறுவிதமான தலைப்புகளில் சூடாக விவாதிக்க ஆரம்பித்து விட்டார்கள். அண்மையில் 'ஜகமே தந்திரம்' படக்குழுவினர் தங்கள் ஆடியோ லாஞ்ச்சையே ஒரு டிஸ்கஷனாக ஸ்பேஸில் நடத்தி ஒரே நேரத்தில் 17 ஆயிரம் பேர் வரை ஒன்றுகூடி பேசி மகிழ்ந்தனர். தனுஷ் வெளியே வந்தபிறகு கூட்டம் வடிய ஆரம்பித்தாலும் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய ஒன்றுகூடல் ஸ்பேசஸ் நிகழ்வு இதுதான் என சாதனை படைத்திருக்கிறது.

ட்விட்டர் ஸ்பேஸஸ்
ட்விட்டர் ஸ்பேஸஸ்

வெகுவிரைவிலேயே ட்விட்டர் ஸ்பேசஸ் கட்டண நிர்ணயம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தப்போகிறது என்று தகவல்கள் வருகின்றன. எனவே, இதை பணம் ஈட்டும் இன்னொரு வழியாக பெரும் ஊடக நிறுவனங்கள் மாற்றக்கூடும். அப்போது இதற்கான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க வேண்டும் என முணுமுணுப்பும் கேட்கிறது.

ஸ்பேசஸில் ஒரே நெகட்டிவ், அடிக்கடி க்ராஷ் ஆவதாக புகார். ''நல்லா போய்க்கிட்ருந்துச்சு. பாதில கட் ஆகிருச்சு. ஆடியோ சரியா வரல!'' என 'இளநீர்ல தண்ணி வர்லீங்க!' கதையாக முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுக்கெல்லாம் தீர்வு சொல்ல ஒருத்தன் வருவான் என்பதுபோல வந்திருக்கிறது ஒரு செயலி... க்ளப் ஹவுஸ்!

கிளப் ஹவுஸ் என்ற ஆப் இப்போது இணையத்தில் வைரல். விவேக் போல் சொல்லவேண்டுமானால் 'திறந்தவெளி புல்வெளிக் கழகம்'... கட்டுப்பாடற்ற அரட்டை அரங்கம்! இந்த ஆப், ஸ்பேசஸைவிட தெளிவான ஆடியோ கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் கிளப் ஹவுஸ் ஆப்ஸ் பயனாளர்களையும், அவர்களின் பேச்சை வாண்டடாக கேட்கும் வசதியையும் இதில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மற்ற சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஓப்பன் செய்ய இமெயில் கேட்கப்படும். ஆனால், க்ளப் ஹவுஸ் பயனாளர் ஒருவர் உங்களுக்கு ரெக்வெஸ்ட் அனுப்பியிருந்தாலே போதும். உள்ளே இறங்கிக் களமாடலாம்.

கொரோனா முதல் அலைக்கு முன் கிளப் ஹவுஸ் அப்ளிகேஷனை ஆப்பிள் iOS பயனார்களுக்காக உருவாக்கியது. அப்போது இதன் பெயர் டாக்ஷோ. பால் டேவிசன் மற்றும் இந்திய அமெரிக்கர் ரோஹன் சேத் கற்பனையில் உருவாக்கிய இந்த ஆப்புக்கு மவுசு வரும் என அவர்களே அப்போது நினைத்திருக்க மாட்டார்கள். முதல் அலையில் ஊரடங்கு காலத்தில் ஒன்றுகூடிப் பேசிக்கொள்ள கூகுள் மீட், ஜூம்க்கு போட்டியாக சமூக வலைதளமாக ஒரு கான்ஃபிரன்ஸ் ஹால் ஆப்பை உருவாக்க மெனக்கெட்டார்கள். பிரபலங்களை வைத்து சோதித்ததில் செம வரவேற்பு கிடைத்தது. இப்போது ஸ்பேசஸ் தந்த வரவேற்பில் க்ளப் ஹவுஸுக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஒரே வாரத்தில் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கூகுள் பிளே ஸ்டோரில் தொட்டு சாதனை படைத்திருக்கிறது.

'பொழுதுபோகலை மச்சி!' என்பவர்கள் உலகின் எந்த மூலையில் நடக்கும் கிளப் ஹவுஸ் மீட்டிங் ஹாலுக்குள்ளும் நுழைந்து வாய் பார்க்கலாம், அதாவது கம்பி கட்டுற கதைகள் கேட்கலாம். இந்த செயலியில் ஹேண்ட் ரைஸிங் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. "நான் பேசலாங்களா?" என்ற வசதிதான் அது. அதை மாடரேட்டர் எனப்படும் அட்மின் அங்கீகரித்தால் நீங்கள் திருவாய் மலர்ந்தருளலாம்.

ஆப்ஸில் உள் நுழைந்து ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் வரை பேசும்வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 'ரூம்' எனப்படும் அரட்டைப் பக்கத்தில் ஹேண்ட் ரைஸிங் ஐகான் மூலம் உரையாடல்களில் தமது கருத்துக்களைப் பகிரலாம் என்பதால் பிடித்த தலைப்புகளின் கீழ் நடைபெறும் க்ளப் ஹவுஸில் பேசி மகிழலாம். ஒருவகையில் ஸ்பேசஸை ஓவர்டேக் செய்துவிட்டது க்ளப் ஹவுஸ் எனலாம். ஆடியோ குவாலிட்டியால் இங்கு கூட்டம் குழுமுகிறது.

ட்விட்டர் ஸ்பேஸஸ்
ட்விட்டர் ஸ்பேஸஸ்

ஒரே நெகட்டிவ் இதில் என்னவென்றால் க்ளப்ஹவுஸில் நமக்கு செட்டாகும் ஆட்கள் அமைந்துவிட்டால் எதையாவது ஜாலியாய் பேசிக் கொண்டிருப்போம். ஆனால், பெரிய வி.ஐ.பிக்கள் கூட போகிற போக்கில் எட்டிப்பார்க்கும் தர்மசங்கடங்கள் இதில் இருக்கிறது. அப்போது கொஞ்சம் நல்லவர்களாக பெர்ஃபாமென்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதுதான் இதில் பரிதாபம்.

தமிழ் பயனாளர்களைவிட இந்தி வாலாக்களும் மலையாளிகளும் செமையாய் இதில் களமாடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே.

'இனிமே எண்ட ஊரு க்ளப்ஹவுஸ், எண்ட மொழி க்ளப்ஹவுஸு' என சென்னை யூத்துகளும் கிளப்ஹவுஸ் பக்கம் போய் எட்டிப்பார்க்கிறார்கள். மலையாள யூத்துகள் வைக்கும் டாப்பிக்குகளும், 'ஜில்லுனு காத்து ஜன்னலை சாத்து' ரகங்களாகவே இருக்கின்றன. அங்கெல்லாம் படு பாய்ச்சலில் 2K கிட்ஸ், மில்லினியல்ஸ் க்ளப் ஹவுஸை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

'கரம்பேத்து மாரியாத்தா உனக்கு கண்ணில்லையாடி!' - இப்படித்தான் குமுறுகிறார்கள் மலையாள க்ளப் ஹவுஸ் ஆப்ஸில் 'சம்சாரிக்கும்' இளசுகளைப் பார்த்து நம் தமிழ்நாட்டு யூத்துகள்!

ஆக மொத்தத்தில் ஸ்பேசஸ், கிளப் ஹவுஸ் மூலம் இலக்கிய, பெண்ணிய, போராளித்துவ, ஜாலி அரட்டைகளுக்குள் இப்போது தமிழ் பயனாளர்களும் உள் நுழைந்து தக்காளி சட்னிக்களையும் ஜாம்களையும் தெறிக்கவிட ஆரம்பித்துவிட்டார்கள்.

நீங்கள் இதுவரை ஸ்பேசஸ், க்ளப் ஹவுஸ் பக்கம் போகவில்லையா...? மூச்சை நன்கு இழுத்து விட்டுக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் சென்னை வானொலியில் ஏதேனும் நிகழ்ச்சியைக் கேளுங்கள்! கேட்டு முடிப்பதற்குள் இன்னொரு செயலி வந்துவிடும்.

இனி என்னெல்லாம் நடக்குமோ?