
மயில்சாமி அண்ணாதுரை கருத்து
இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை (தற்போது தேசிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணைத்தலைவர்), பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.
‘‘செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் உயிரிழப்பது, ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் சிக்கிக்கொள்வது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. நிலவில் கால் பதிக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், இதுபோன்ற அசம்பாவிதங்களை ஏன் தடுக்க முடியவில்லை?’’
‘‘செப்டிக் டேங்க் சுத்தம்செய்ய ரோபோட் இருக்கிறது. தொட்டியின் அடியில் படிந்துள்ள திடப்பொருளை திரவமாக்கும் இயந்திரத்தை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி வடிவமைத்துள்ளார். அவற்றைப் பயன்படுத்தி னால் மனிதர்கள் தொட்டிக்குள் இறங்க வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
ஆழ்துளைக் கிணறுகளில் விழும் உயிர்களைக் காப்பாற்றவும் தொழில்நுட்பம் இருக்கிறது. இது மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். விழுந்த பிறகு மீட்பு என்பதைவிட ‘வருமுன் காப்போம்’ முறையைக் கடைப்பிடித்து, பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடி உயிரிழப்பைத் தடுக்க வேண்டும்.’’
‘‘செவ்வாய்க்கிரகத்தில் தண்ணீர் குறித்த ஆய்வு நடைபெறுகிறது. விவசாயத்துக்கு, தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?’’

‘‘இஸ்ரேல் நாட்டில் தண்ணீர் செலவழிப் பதற்கும் பட்ஜெட் உண்டு; ஒவ்வொரு நிலத்துக் கும் இவ்வளவு தண்ணீர்தான் பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உண்டு. நமது நாட்டில் சொட்டுநீர்ப் பாசனத்தை முழுமை யாகப் பின்பற்ற வேண்டும். காடுகளை அழித்து நகரம் உருவாக்குவது, இயற்கையை அழித்து வியாபாரம் செய்வது போன்றவற்றை கைவிட வேண்டும்.’’
‘‘மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் என்னவாயிற்று?’’
‘‘சோதனை அடிப்படையில் 3,500 கிலோ எடை வரை உள்ள ஆள் இல்லா ராக்கெட் பலமுறை வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இது சவாலான காரியம்தான். 2025-ம் ஆண்டில் சாத்தியமாகலாம்.’’
‘‘அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகள் சாட்டிலைட்களை ஏவ இஸ்ரோவை நாடுவதற்கான காரணம் என்ன?’’
‘‘இஸ்ரோவிடம் மட்டும்தான் குறைந்த செலவில் ஏவக்கூடிய ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ராக்கெட்கள் உள்ளன. ஒரே நேரத்தில் பல சாட்டிலைட்களைச் சுமந்து சென்று, விரும்பும் ஆர்பிட்டில் ஒவ்வொன்றாக இறக்கி வைக்க முடியும். அத்துடன், 400-க்கும் மேற்பட்ட சாட்டிலைட் களை ஏவிய அனுபவம் இஸ்ரோவுக்கு உண்டு.’’
‘‘வெளிநாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே…’’

‘‘உண்மைதான். நான், பொள்ளாச்சி அருகே கோதவாடி என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசின் உதவித்தொகையில் படித்தவன். அதனால், என் சேவை நம் நாட்டுக்கு மட்டும்தான். அரசியல் எண்ணம் கனவில்கூட இல்லை.’’
‘‘உங்கள் அடுத்தகட்ட திட்டம் என்ன?’’
‘‘அறிவியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் வகையில் மாணவர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறேன். மாநில அறிவியல் மன்றம்மூலம் மாவட்டம்தோறும் அறிவியல் கண்காட்சிகள் நடத்தி, திறமையானவர்களைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கவுள்ளோம். இதுகுறித்து, சுமார் 500 பொறியியல் கல்லூரி முதல்வர்களுடன் பலகட்டமாக ஆலோசனை நடத்தியுள்ளோம். ஐந்து இடங்களில் மாணவர்களுக்கான அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்.’’
“சந்திரயான்-1 வெற்றியின்போது, 2000 ரூபாய் தாளில் அதன் படம் வெளியிடப்பட்டதுகுறித்து தங்களின் கருத்து.’’
‘‘கடின உழைப்புக்குக் கிடைத்த கெளரவம். பிரதமர் அழைத்துப் பாராட்டினார். பத்ம விருது பெற்றுள்ளேன். அவை மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள்.’’
‘‘இஸ்ரோ தலைவர் சிவனுக்கும் உங்களுக்கும் இடையேயான பனிப்போர்தான் சந்திரயான்-2 தோல்விக்குக் காரணம் என்று ஒரு பேச்சு உள்ளது. சந்திரயான் 2-க்கான 90 சதவிகிதப் பணிகள் உங்கள் தலைமையில்தான் நடந்தன. உங்களுக்கு பணி நீட்டிப்புக் கொடுத்திருந்தால் வெற்றி அடைந்திருக்கும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அதேபோல் அதை விண்ணில் ஏவும் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து உங்கள் கருத்து.’’
‘‘என் தலைமையில்தான் சந்திரயான் 2-ன் 90 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டன என்பது உண்மைதான். எனக்கு பணி நீட்டிப்பு தரப்படவில்லை. நான் பணி ஓய்வுபெற்ற பிறகுதான் அது விண்ணில் ஏவப்பட்டது. அதன் தோல்விக்கு என்னை ஒன்றும் சொல்ல முடியாது. விண்ணில் ஏவும் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கவில்லை. அதற்கு அவர்களிடம்தான் காரணம் கேட்க வேண்டும். இஸ்ரோவில் என் பணியை மனநிறைவாகச் செய்திருக்கிறேன்.”
‘‘சந்திரயான்-2 மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்து செயலிழந்தது உங்களை எந்த வகையில் பாதித்தது?’’
‘‘நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ராக்கெட்டில், மேலும் ஓர் இயந்திரத்தை இணைத்துள்ளனர். அதற்கேற்ப எரிபொருளைக் கணக்கிடுவதில் தவறு நேர்ந்திருக்கலாம். நிலவில் இறங்குவதற்கு லேண்டர் திரும்பாதபோதே அதை நிறுத்தி, தீப்பற்றவிடாமல் செய்திருக்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தாமதித்ததால்தான், லேண்டரை மீட்க முடியவில்லை என்பது என் கருத்து. சந்திரயான்-2 முயற்சி தோல்வியடைந்தது, மனதை மிகவும் பாதித்தது. அன்று இரவு முழுவதும் நான் உறங்கவேயில்லை.’’