இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் ஆகாயத்தில் பறந்து படமெடுக்கும் ட்ரோன் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. பார்சல்கள் டெலிவரி செய்யவும், மீட்புப்பணிகளின் போது உதவவும், மக்கள் கூட்டங்களில் கண்காணிக்கவும் ட்ரோன்கள் உதவுகின்றன.
அதுபோல போதைபொருட்கள் கடத்தலுக்கும், உளவு பார்க்கவும் ட்ரோன்களை பயன்படுத்தும் சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. இந்த நிலையில் சட்ட விரோதமாக ட்ரோன்களின் செயல்பாட்டைத் தடுக்கவும், பாதுகாப்புப் பணிக்குப் பயன்படுத்தவும் கேரள அரசு முடிவு செய்து அதற்கான வேலையைத் தொடங்கிவிட்டது. கேரளாவைச் சேர்ந்த 25 போலீசார் சென்னை ஐ.ஐ.டி-யில் ட்ரோன் இயக்கும் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், 20 பேருக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் ட்ரோன்கள் மூலம் அனுமதி இல்லாமல் பறக்கவிடப்படும் பிற ட்ரோன்களின் விபரங்களை சேகரிப்பது, அதில் பதிவான வீடியோக்களை ரெக்கவர் செய்வதற்கு என ட்ரோன் ஆய்வு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் 14 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. அதே சமயம் 20 காவல்துறை மாவட்டங்கள் உள்ளன. 20 காவல் மாவட்டங்களிலும் ட்ரோன் வழங்குவது சாப்ட்வேர் லாஞ்ச் செய்யும் நிகழ்ச்சி திருவனந்தபுரத்தை அடுத்த பேரூர்கடை எஸ்.ஏ.பி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு ட்ரோன்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காலம் மாறும்போது அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ட்ரோன்கள் உபயோகிப்பது போலீஸ் துறையில் சிறந்த முன்னேற்றப் படிக்கல்லாக அமையும். ட்ரோன்களின் அறிவியல் பரிசோதனைக்கும், தொழில்நுட்ப தகவல்களுக்கான பரிசோதனைக்கும் கேரள போலீஸில் ட்ரோன் ஃபாரன்ஸிக் லேப் மற்றும் ஆய்வு மையம் அமைத்துள்ளோம்.
ட்ரோன்களை பயன்படுத்துவதுடன், பிற ட்ரோன்களை திறம்பட எதிர்கொள்ளவும் ட்ரோன் ஃபாரன்ஸிக் மையத்தால் முடியும். இந்தத் திட்டங்களின் பலன் கீழ்மட்டத்திலும் செல்ல வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறைக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன. ட்ரோன் பறக்க விடுவதற்காக 25 பேருக்கு பைலட் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 20 பேருக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் திறம்பட செயல்படுவதுடன் இந்தத் துறையில் நுணுக்கங்களை சக ஊழியர்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். ட்ரோன்களின் பிராண்ட் குறித்து அறிந்துகொள்ளுவது, அவற்றில் இருந்து டிஜிட்டல் ஆதாரங்களை மீட்டெடுப்பது உள்ளிட்ட அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

ட்ரோன் எக்ஸ் என்பது ட்ரோன் தடவியல் மென்பொருளாகும். இது உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவை மீட்டெடுக்கவும் பகுப்பாய்வு செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு போலீசாரும் தொழில்நுட்பங்களைகொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்" என முதல்வர் பினராயி விஜயன் பேசினார். ட்ரோன் பைலட் பயிற்சி முடித்த போலீஸாருக்கு சான்றிதழை முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். இந்தியாவில் முதன் முதலாக ட்ரோன் ஃபாரன்ஸிக் மையம் ஒன்றை கேரள மாநில போலீஸ் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.