Published:Updated:

`வாங்களேன்... இன்டர்நெட்டை சரிபண்ணுவோம்!' அரசுகளை அழைக்கும் மார்க் சக்கர்பெர்க்

இணையத்தில் இருக்கும் விஷயங்களை முறைப்படுத்துவதில் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். இதையெல்லாம் அவர்தான் சொல்கிறாரா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் இணையவாசிகள்.

`வாங்களேன்... இன்டர்நெட்டை சரிபண்ணுவோம்!' அரசுகளை அழைக்கும் மார்க் சக்கர்பெர்க்
`வாங்களேன்... இன்டர்நெட்டை சரிபண்ணுவோம்!' அரசுகளை அழைக்கும் மார்க் சக்கர்பெர்க்

லகம் முழுவதும் சமூக வலைதளங்களின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்களிப்பே அதிகளவில் இருக்கிறது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவற்றையும் அதன் கைவசம் வைத்திருக்கிறது ஃபேஸ்புக். சமீபகாலமாகச் சமூக வலைதளங்கள் மூலமாக நடைபெறும் குற்றங்கள் பெருகிவருகின்றன என்ற குற்றச்சாட்டுப் பரவலாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார் ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். பிரபலமான நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட்டில் அவர் தெரிவித்த கருத்துகள் வெளியாகியுள்ளன. அதில் இணையத்தில் காணப்படும் முக்கியமான நான்கு விஷயங்களுக்கு புதிய வரைமுறைகளை வகுக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார் அவர்.

மார்க் சக்கர்பெர்க் முறைப்படுத்த விரும்பும் நான்கு விஷயங்கள்

இணையத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள், தேர்தல் தொடர்பான விஷயங்கள், தனியுரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பு என நான்கு விஷயங்களை முறைப்படுத்த வேண்டும் என மார்க் சக்கர்பெர்க் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். `ஃபேஸ்புக் அனைத்து மக்களுக்கும் நன்மையைக் கொடுக்கும் வகையிலான பொதுவான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இங்கே அவர்கள் தாராளமாக அவர்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அதே நேரம் மக்களைத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களிலிருந்து பாதுகாக்கவும் எங்களுக்குக் கடமை இருக்கிறது' என்று மார்க் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மார்க் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச் சூட்டினை ஃபேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பு செய்ததால் அது பலரால் பார்க்கப்பட்டது. அதுபற்றி பின்னர் கருத்து தெரிவித்த ஃபேஸ்புக் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டதாகத் தெரிவித்தது. ஆனால் அது நீக்கப்படும் முன்னரே பலரால் பார்க்கப்பட்டிருந்தது. இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்காக அது பரவும் தளங்களே பொறுப்பாக வேண்டும் எனக்கூறும் அவர், இதுபோன்ற விஷயங்கள் பரவுவதைத் தடுக்க அனைத்துச் சமூகவலைதளங்களும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக மார்க் சக்கர்பெர்க் தெரிவித்த கருத்து தேர்தல் தொடர்பானது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் நடக்கக் கூடிய தேர்தல்களின் முடிவைத் தீர்மானிப்பதில் சமூக வலைதளங்களின் பங்கு அதிகமானது. கடந்த சில வருடங்களில் ஃபேஸ்புக்குக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திய கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் தேர்தல் தொடர்பானதுதான். அதற்குப் பிறகு தனது தேர்தல் விளம்பரம் தொடர்பான நிபந்தனைகளில் பெரிய அளவில் மாற்றம் செய்தது ஃபேஸ்புக். பயனாளர்களுக்குக் காட்டப்படும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தது. உலகம் முழுவதுக்கும் தேர்தலின் உண்மைத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார். அடுத்ததாக தனியுரிமை மற்றும் டேட்டாவைப் பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து மார்க் தெரிவித்திருக்கும் கருத்து மிக முக்கியமானது.

``தனிநபர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் அமல்படுத்திய GDPR விதியைப் போன்று பிற நாடுகளும் பொதுவான ஒரு சட்டத்தை உருவாக்கி அமல்படுத்த வேண்டும்" என மார்க் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதேபோல ``தங்கள் தகவல்களை ஒரு நிறுவனத்திடம் அளிக்கும் மக்கள் அதை அவர்கள் விரும்பும் போது மற்றவர்களுக்கும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்" என்ற கருத்தையும் மார்க் முன்வைத்திருக்கிறார். உலக நாடுகள் முழுவதுக்கும் தேர்தல், தனியுரிமை, டேட்டா பாதுகாப்பு எனப் பல்வேறு விஷயங்களில் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் மக்களுக்கான உரிமைகள் அதிகரிக்கவே செய்யும். அதே நேரத்தில் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு அதனால் சுமை அதிகரிக்கலாம். இந்நிலையில் மார்க் சக்கர்பெர்க் இப்படிக் கருத்து தெரிவித்திருப்பது பல தரப்பினருக்கும் ஆச்சர்யத்தை அளித்திருக்கிறது.