எலான் மஸ்க் மீது அமெரிக்காவின் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் 258 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. எதிர்த்தரப்பில் எலான் மஸ்கின் நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை Dogecoin முதலீட்டாளரான கீத் ஜான்சன் என்பவர் தொடர்ந்திருக்கிறார். Dogecoin மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாக ஜான்சன் புகாரில் தெரிவிக்கிறார். "2019 வரை Dogecoin-ன் எந்தவித மதிப்பும் குறையவில்லை என்பதை எதிர்தரப்பினர் அறிவார்கள். உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தனது செல்வாக்கால் Dogecoin பிரமீடு ஸ்கீமைத் தனது லாபத்திற்காகவும் பெயருக்காகவும் வேடிக்கைக்காகவும் கையாண்டிருக்கிறார்" என்கிறார் ஜான்சன்.

2021 மே முதல் Dogecoin மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 86 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தனக்கு இதனால் இழப்பு ஏற்பட்டதாகவும் அதனை மும்மடங்காக எலான் திருப்பித் தரக் கோரியும் இந்த வழக்கை ஜான்சன் தொடர்ந்துள்ளார்.
மேலும் எலான் மஸ்க் மற்றும் அவரது நிறுவனங்கள், Dogecoin-ஐ விளம்பரம் செய்வதை நிறுத்த வேண்டுமெனவும் Dogecoin வணிகத்தைத் தடை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
எலான் மஸ்க்தான் Dogecoin-னின் விலை, மூலதன மதிப்பு, வணிகப் பரிவர்த்தனைகள் ஆகியவை அதிகரிக்க காரணம் என அவர் நம்புவதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு ஆதாரமாக Dogecoin குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்களையும் இணைத்துள்ளார். Tesla நிறுவனம் தங்களின் சில பொருள்களுக்கு Dogecoin மதிப்பில் பேமென்ட் ஏற்றுக்கொண்டதும் SpaceX தனது ஒரு சேட்டிலைட்டுக்கு Dogecoin பெயரை இட்டதும் கிரிப்டோவிற்கு மறைமுகமாக அதன் மதிப்பை உயர்த்த உதவியிருக்கிறது என்பதால் அந்நிறுவனங்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக எலான் மஸ்க் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
