Published:Updated:

`2700க்கும் மேற்பட்ட முயற்சிகள்; அமெரிக்க அதிபர் வேட்பாளர்!' - மைக்ரோசாஃப்ட் கொடுத்த ஹேக்கிங் அலர்ட்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒருவரை இரானிய ஹேக்கர்கள் குறிவைத்துத் தகவல்களைத் திருட முயன்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்

வரும் 2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருட இரானைச் சேர்ந்த பாஸ்பரஸ் (Phosphorous) என்ற ஹேக்கர் குழு முயற்சி செய்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கூறியிருக்கிறது. ஏபிடி 35 (APT 35) என்றும் அழைக்கப்படும் அந்தக் குழு இரான் அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Vikatan

அந்த இரானிய ஹேக்கர்கள் குழு, குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் பயனாளர்களின் இ-மெயில் கணக்குகளைக் கண்டறிய இதுவரை 2,700-க்கும் மேற்பட்ட முறை முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பயனாளர் பாதுகாப்பு நம்பிக்கை பிரிவின் துணைத் தலைவர் டாம் பர்ட், ``இரானிய ஹேக்கர்கள் குழு நடத்திவரும் இந்த முயற்சிகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமெரிக்க அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் இரானுக்கு வெளியே வசிக்கும் பிரபலமான இரானியர்கள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்படுகிறது.

இந்த முயற்சிகளால் 4 இ-மெயில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அமெரிக்க அதிபர் வேட்பாளர் தொடர்புடையது அல்ல. இவை கடந்த ஆகஸ்ட் - செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கு இடையே நடந்தன. மைக்ரோசாஃப்ட் கணக்குகளுடன் தொடர்புடைய மற்ற இ-மெயில் கணக்குகளை ஹேக் செய்து அதன் மூலம் மைக்ரோசாஃப்ட் சர்வருக்குள் அவர்கள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். மேலும், மற்ற இ-மெயில் கணக்குகள், செல்போன் எண்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைத் திருட அவர்கள் முயற்சி செய்தனர்'' என்று கூறியிருக்கிறார்.

Trump
Trump
AP

2020-ல் நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மார்க் சான்போர்டு ஆகிய இருவர் மட்டுமே மைக்ரோசாஃப்ட் இ-மெயில் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்க விமானப்படையின் உளவுத்துறையில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் மோனிகா விட்டுக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என அந்நாடு சந்தேகிக்கிறது. தேசத்துரோக நடவடிக்கைகளுக்காக அவர் எஃப்.பி.ஐ-யின் (FBI) தேடப்படும் நபர் பட்டியலில் அவர் இருக்கிறார்.

Vikatan