Published:Updated:

வாடகைக்கு கார் எடுக்கும் ஜப்பானியர்கள் அதில் பயணிப்பதில்லை... என்ன செய்கிறார்கள் தெரியுமா?

ஜப்பானில் கார்களை வாடகைக்குவிடும் தொழிலில் முன்னணியில் இருக்கிறது Orix நிறுவனம். இவர்கள் சமீபத்தில்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கார்களை வாடகைக்கு எடுத்துவிட்டு பயணமே செய்யாமல் கார்களைத் திரும்பத் தந்துவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்தது

car rentals
car rentals ( pixabay )

ஓலா போன்ற பிஸினஸ் ஒருபக்கம் என்றால், காரையே வாடகைக்குத் தரும் ஸூம் கார் இன்னொரு பக்கம். இதில் கார் நம் கைக்கு வந்துவிடும். எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும் நாம் ஓட்டிக்கொள்ளலாம். அதற்கான தொகையை மட்டும் நாம் செலுத்திவிட வேண்டும். இந்தியாவைவிட அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த பிஸினஸ் மாடல் பெரிய ஹிட். காரணம், அங்கே கார் மட்டும் வாடகை எடுத்தால் விலை குறைவு. கூடவே, ஓட்டுநர் போன்ற மனிதர்கள் தேவையென்றால்தான் பணம் அதிகம் செலவாகும்.

car rentals
car rentals
Pixabay

ஜப்பானில் கார்களை வாடகைக்குவிடும் தொழிலில் முன்னணியில் இருக்கிறது Orix நிறுவனம். சமீபத்தில்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கார்களை வாடகைக்கு எடுத்துவிட்டு பயணமே செய்யாமல் கார்களைத் திரும்பத் தந்துவிடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்தது. பணம் கொடுத்து கார்களை வாங்கிவிட்டு ஏன் ஓட்டாமல் விடுகிறார்கள்? ஒருவேளை நம் கார்களில் ஏதும் சிக்கலோ என மண்டையைப் போட்டு உடைத்துக்கொண்டது Orix. ஆனால், அதே வாடிக்கையாளர்கள் திரும்பவும் கார்களை அவர்களிடமே வாடகைக்கு எடுப்பதால் சேவையில் பிரச்னையில்லை என்ற முடிவுக்கு வந்தது. வேற என்ன காரணமாக இருக்க முடியும் என்பதை வாடிக்கையாளர்களிடமே கேட்க முடிவு செய்து ஒரு சர்வே நடத்தியது. அதற்கு வந்த பதில்களை எல்லாம் Orix நிறுவனத்தைத் தலை சுற்ற வைத்தது.

ஒரு வாடிக்கையாளர் இரவெல்லாம் தூங்க இடம் வேண்டுமென்பதற்காக காரை வாடகைக்கு எடுத்து அதில் உறங்கியிருக்கிறார். இன்னொருவர், ஆபீஸ் வேலைகளை அமைதியான சூழலில் செய்ய விரும்பி நாள் முழுவதும் காருக்குள் அமர்ந்து வேலை செய்திருக்கிறார். இன்னொருவர் ராப் இசைக்கலைஞர். தனது யூடியூப் வீடியோ ஒன்றை காருக்குள்ளே பாடி ரெக்கார்ட் செய்திருக்கிறார். இன்னொரு இளைஞர் மணிக்கணக்கில் தன் கேர்ள் ஃப்ரெண்டுடன் பேச காரை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இன்னொருவர் மேக்கப் பண்ண அதிக நேரம் ஆவதால் அதற்காக காரை வாடகைக்கு எடுத்திருக்கிறார். மொபைல் சார்ஜ் செய்ய, மதிய உணவை நண்பருடன் அமர்ந்து சாப்பிட என வாடிக்கையாளர்கள் தந்த பட்டியல் வேற லெவல். “கடைசில ஆட்டோமொபைல அபார்ட்மென்ட் ஆக்கிடீங்களேடா” என நொந்து போனது Orix.

பொருளோ சேவையோ மட்டும்தான் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்தம். அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது வாடிக்கையாளர்கள்தாம் முடிவு செய்கிறார்கள்.